முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காரைக்கால் அம்மையாரின் நன்னூல்கள் நான்கு

 


சோழ நாட்டுக் கீழைக் கடற்கரையைச் சார்ந்த ஊர் காரைக்கால்.  இன்று இது புதுவை மாநிலத்தோடு இணைந்துள்ளது.  இக்காரைக்காலில் செல்வம் செழித்த வணிகன் மகளாகப் பிறந்தவர் புனிதவதியார்.  இவர் பரமதத்தன் என்னும் வணிகனை மணந்தார், புனிதவதியார்.  இவர் பரமதத்தன் என்னும் வணிகனை மணந்தார்.  புனிதவதியார் இறைவன் திருவருள் பெற்றவர் என்பதை அறிந்து மருண்ட பரமதத்தன் அவரை நீத்துப் பாண்டிய நாட்டுக்குச் சென்று மற்றொரு பாவையை மணந்து வாழ்ந்தான்.  உறவினர் புனிதவதியாரைப் பரமதத்தனிடம் அழைத்துச் சென்றபோது அவன் மனைவியைத் தெய்வம் எனக்கூறி அவள் திருவடி தொழுதான்.  அதனால் பெரு நாணமுற்ற புனிதவதியார் இல்லறம் துறந்து, நல்லெழில் துறந்து சிவபெருமானை வேண்டிப் பேய் உருவம் பெற்றார்.  இவர் கயிலைக்குச் சென்றபோது அம்மையப்பனான சிவன், 'அம்மையே' என்று இவரை அழைத்தான்.  அம்மையார் வட திருவாலங் காட்டுக்குத் திரும்பி வந்து, ஆடும் பெருமானின் திருவடி நிழலில் என்றும் இருந்து இன்புற்றார்.  இவரே காரைக்கால் அம்மையார் என வழங்கப் பெற்றார்.

    காரைக்கால் அம்மையாரின் இவ்வரலாற்றைச் சேக்கிழார், பெரிய புராணத்தில் ஒரு புராணமாகப் பாடியுள்ளார்.  அம்மையார் பாடிய பாடலில் தம்மை 'காரைக்கால் பேய்' என அழைத்துக் கொள்வது சேக்கிழார் கூறும் வரலாற்றுக்கு அகச்சான்றாய் அமைந்துள்ளன.  இவ்வம்மையார் பேய் வடிவம் பெற்றனர் என்பது உடலில் தசை மிகவும் குறைந்து போகவே, எற்பு (எலும்பு)ச் சட்டமாக நிலவினர் என்பதை உணர்த்தும் என்று கூறலாம்" என்று அம்மையாரின் பேய் வடிவத்துக்கு விளக்கம் தருகிறார், சதாசிவப் பண்டாரத்தார்.

    கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், இவ்வம்மையார் தலையால் நடந்து வழிபட்ட திருவாலங்காட்டில்   கால் பதிக்க அஞ்சிப் புறத்தே தங்கினர் என்று பெரிய புராணம் கூறும்.  அதனால் காரைக்கால் அம்மையார் ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இருண்ட காலத்தினர் என்பது உறுதி.  கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம் .

    காரைக்கால் அம்மையார் நன்னூல்கள் நான்கு இயற்றி உள்ளார்.  அவையாவன; அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை,  திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு, இவற்றுள் அந்தாதியில் 101 வெண்பாக்களும், மணிமாலையில் வெண்பாவும் கட்டளைத் கலித்துறையுமாய் அமைந்த 20 பாக்களும் உள்ளன.  இவை இரண்டும் அந்தாதித் தொடையில் அமைந்தவை.  மூத்த திருப்பதிகங்கள் ஒவ்வொன்றும் பதினொரு பாடல்கள் வீதம் மொத்தம் 22 பாக்கள் கொண்டவை.  காரைக்கால் அம்மையார் மொத்தம் 143 பாடல்களால் நான்கு நூல்களை இயற்றியுள்ளார்.  இவை நான்கும் சைவத் திருமுறையில் பதினோராம் திருமுறைக்கண் சேர்க்கப்பட்டுள்ளன.

    அம்மையார் ஆண்டவனிடம் கொண்ட அளவற்ற அன்பை அவர் பாடல்களால் அறியலாம்.  இறைவன் தம்மைப் பொருட்படுத்தாவிடினும், தம் அன்புக்கு அவனே பொருள் என்பதைத் தம் அன்பு கனிந்த பாடலில் கூறுகிறார்.

    எல்லார்க்கும் சிவனே இறைவன்; அவன் வேண்டியார் வேண்டிய வடிவில் வந்து அருள் செய்வான் என்பதை,

'எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் 

அக்கோலத்து அவ்வுருவே யாம்'

    என்று அம்மையார் அற்புதத் திருவந்தாதியில் கூறுவதும் சமரச சமய சன்மார்க்கமே ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...