Looking For Anything Specific?

திணைமாலை நூற்றைம்பது - கைந்நிலை

 

17. திணைமாலை நூற்றைம்பது 

    திணைக்கு முப்பது பாடல் வீதம் ஐந்திணைக்கு நூற்றைம்பது பாடல்களை மாலை போலக் கொண்ட நூல் என்னும் பொருளில், 'திணைமாலை நூற்றைம்பது' எனப் பெயர் பெற்றது, இந்நூல்.  இதில் திணைகள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் எனும் முறையில் அமைந்துள்ளன.  திணைக்கு முப்பது பாடல் என்பதற்குப்  பதில் குறிஞ்சி, நெய்தல், முல்லை ஆகிய மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன.  எனவே 153 பாடல்கள் உள்ளன.  மிகையான மூன்று பாடல்கள் பின்னே புகுத்தப்பட்டவை என உணரலாம்.  கீழ்க்கணக்கில் உள்ள அகப்பொருள் நூல்களில் மிகவும் பெரியது இதுவே.

    ஏலாதியை இயற்றிய கணிமேதாவியாரே இந்நூலையும் இயற்றினார்.  இவர், மாக்காயனாரின் மாணாக்கர் - சமணர் - கி.பி.ஐந்தாம் நூற்றாண்டினர் என்பவற்றை முன்னரே கண்டோம்.

    பொருட் செறிவும் பா நயமும் மிக்க இந்நூலின் பல பகுதிகள் பிற்கால நூல்கள் பலவற்றோடு ஒப்புமை உடையன.  இப்பிறப்பில் செய்த தீவினை, நல்வினைப் பயன் மறுபிறப்பில் அவனை அடையும் என்பது பொது நம்பிக்கை.  கணிமேதாவியாரோ, 'இம்மையில் செய்த தன் பயன் இம்மையிலேயே தெரியும்' என்று புதுமை பேசுகிறார்.

'இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும் 
உம்மையே ஆம் என்பார் ஓரார் காண் '

    இத்திணைமாலை  நூற்றைம்பதின் கருத்தையே சுந்தரரின் தேவாரப் பாடல், 'செற்றொருவரை செய்த தீமைகள் இம்மையே வரும். திண்ணமே' என்று உறுதி செய்கின்றது.

    உடன்போக்கு மேற்கொண்ட தலைவியையும் தலைவனையும் தேடிச்செல்லும் செவிலித் தாய் எதிரே வந்த கணவனும் மனைவியுமான இருவரைக் காண்கிறாள்; அக்கணவன் வழியில் தலைவனைத் தானும், தலைவியைத் தன்  மனைவியும் கண்டதாகக் கூறுகிற பாடல் 'ஆடவனின் பிறன்மனை நோக்காத பேராண்மை' யினையும் , பெண் மகளின் பிற ஆணைக் கண்ணாலும் காணாத கற்புத் திண்மையினையும் தெரிவிக்கும் உயரிய பாடலாகும்.

'நண்ணி நீர்சென்மின்; நமர் அவர் ஆவரேல் 
எண்ணிய எண்ணம் எளிது அரோ எண்ணிய 
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன்; கண்டாளாம் 
தண்சுடர் அன்னாளைத் தான்!

    இக்கருத்து, 'யாளி அன்னானைக் கண்டேன்; அயலே தூண்டா விளக்கு அனையாய் என்னயோஅன்னை சொல்லியதே' என்னும் மணிவாசகப் பெருமானின் திருக்கோவையார் பாடலிலும் இடம் பெறுகிறது.  இவற்றால் கணிமேதாவியார் ஒரு கவி மேதாவியார் என்பதை ஐயமற அறிகிறோம்.

18. கைந்நிலை 

    திணைக்குப் பன்னிரண்டு பாடல் வீதம் ஐந்திணைக்கு மொத்தம் அறுபது பாடல்களைக் கொண்ட நூல் கைந்நிலை.  ஐந்திணை ஒழுக்கம் பற்றிய பிற அகப்பொருள் நூலைப்போல இதையும், 'ஐந்திணை அறுபது' என அழைப்பது பொருந்தும்.  ஐந்திணை என்னும் சொல்லோடு பல நூல்கள் இருந்தமையால் 'கைந்நிலை' என்று இதற்கு ஆசிரியர் பெயரிட்டிருக்கலாம்.  கை  என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள்.  ஐந்திணை ஒழுக்க நிலையை கூறும் நூல் எனும் பொருளில் 'கைந்நிலை' என்னும் பெயர் அமைந்துள்ளது.  இதில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசையில் திணைகள் அமைந்துள்ளன. இந்நூலின் 18 பாடல்கள், சொல்லும் அடியும் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன.

    இந்நூலை இயற்றியவர் மனோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.  எனவே ஆசிரியரின் இயற்பெயர் புல்லங்காடனார்;  இவரது தந்தையார் பெயர் காவிதியார்.  அரசன் வழங்கும் சிறப்புப் பட்டம் காவிதி .  புல்லங்காடனாரின் தந்தையார்  அரசுப் பணி மேற்கொண்ட அதிகாரியாய் இருந்தார் என்று தெரிகின்றது.  மனோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதிக்குப் பெயர்.  அக்கொற்கைக்கு அருகேயிருந்த முள்ளி நாட்டைச் சார்ந்த நல்லூரில் வாழ்ந்தவர் புல்லங்காடனார்.  இவர், இந்நூலின் இறுதிப்பாடலில் கொற்கையையும் அதன் கொற்றவனான பாண்டியனையும் குறிப்பிட்டுள்ளார்.  இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.

    பிரிவால் மெலிந்த தலைவியின் கைவளைகள் சொரிந்து உகும் காட்சியைச் சொல்லும் பாடல், குறிஞ்சி நிலத்தில் வளமும் வனப்பும் இணைந்திருக்கும் ஏற்றத்தைப் போற்றுகிறது.

'கல்வரை ஏறி, கடுவன் கனிவாழை 
எல்உறு  போழ்தின் இனிய பழம் கடவுள் கொண்டு 
ஒல்லென ஓடு மலை நாடான் கேண்மை 
சொல்ல, சொரியும் வளை .'

இன்னிலை 

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கைந்நிலைக்குப் பதில் 'இன்னிலை ' என்னும் நூலை இணைப்பர் சிலர். வ.உ. சிதம்பரனார், 'இன்னிலை'  நூலைக் கீழ்க்கணக்கு நூலாகக் கருதி உரை எழுதி வெளியிட்டுள்ளார்.  இது ஒரு நீதி நூல்,  கடவுள் வாழ்த்து உட்பட 49 வெண்பாக்கள் உள்ளன.  இவை, அறத்துப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என நான்கு பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளன.

    இந்நூலைப் பாடியவர் பொய்கையார்.  இவர் சங்கத்துச் சான்றோர் அல்லர் என்பது தெளிவு.  பெண்ணின் பெருமையைக் கூறும் ஒரு பாடல் மூலம் இன்னிலையின் கவி நிலையைக் காண்போம்.

'ஒத்த உரிமையளாக ஊடற்கு இனியளாக 
குற்றம் ஒருஉம் குணத்தளாக - கற்றறிஞர்ப் 
பேணும் தகையளாக , கொண்கண் குறிப்பு அறிந்து 
பேணும் தகையினாள் பெண்'

கருத்துரையிடுக

0 கருத்துகள்