Looking For Anything Specific?

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்





     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும்.

"வீயாத் தமிழுடையான் 
பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"
          - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள் 

"பாடு தமிழ் வளர்த்த கூடல் "
           -புறத்திரட்டு 

"சோமன் வழிவந்த பாண்டிய நின் 
நாடுடைத்து நல்ல தமிழ்"
          திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் .

"வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"
          -பதிற்றுப்பத்து பதிகம் 

     பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த வரலாற்றை இறையனார் களவியல் உரை விளக்குகிறது.

     குமரிக்கண்டம் நிலைத்திருந்த காலத்தே மதுரையில் தமிழ் வளர்த்த வரலாற்றை இறையனார் களவியல் உரை விளக்குகிறது.

     குமரிக்கண்டம் நிலைத்திருந்த காலத்தே மதுரையில் தமிழ் வளர்க்கத் தமிழ்ச் சங்கம் நிறுவினான், பாண்டியன்.  அச்சங்கமே முதற்சங்கம் அல்லது தலைச்சங்கம் ஆகும்.  தலைச் சங்கத்தில் அகத்தியன்,திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவன், குன்றம் எறிந்த முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலிய 549 பேர் வீற்றிருந்தனர்.  4449 புலவர்கள் தமிழாய்ந்தனர் .  இச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்தது.  இச்சங்கத்தைக் காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாக 89 பாண்டியர் காத்து வந்தனர்.  இக்காலத்தில் எத்துணையோ பரிபாடல், முதுநாரை, முதுகுருகு முதலிய நூல்கள் தோன்றின. இச்சங்கத்தார்க்கு நூல் அகத்தியம். கடற்கோளுக்குச் சங்கமும் மதுரையும் இரையாயின.

     அடுத்து, கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கம் அல்லது இடைச்சங்கம் தோன்றியது.  அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி மோசியார், சிறு பாண்டரங்கன், கீரந்தை முதலிய 59 பேர் அச்சங்கத்தில்  வீற்றிருந்தனர்.  370 புலவர்கள் அங்குத் தமிழாய்ந்தனர்.  3700 ஆண்டுகள் இடைச்சங்கம் நிலைத்தது.  அக்காலத்தில் கலியும் , குருகும், வெண்டாளியும், வியாழமாலையும் பாடப்பட்டன.  அச்சங்கத்தார்க்கு நூல்கள் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், பூதபுராணமும், இசை நுணுக்கமும் ஆகும்.  சங்கத்தை வெண்தேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டியர் ஆதரித்தனர்.  கபாடபுரத்தையும் கடல்கொள்ள, இடைச்சங்கம் மறைந்தது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் அல்லது கடைச்சங்கம் இன்றுள்ள மதுரைத் திருநகரில் எழுந்தது.  நக்கீரர் முதலிய 49 புலவர்கள் சங்கத்தே வீற்றிருந்தனர்.  449 புலவர்கள் பாடல் பாடினர் . கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் நிலைத்தது.  முடத்திருமாறன் முதலாக உக்கிரப்  பெருவழுதி ஈறாகப்  பாண்டியர் 40 பேர் சங்கத்தை ஆதரித்தனர்.

     முச்சங்கங்கள் முத்தமிழை வளர்த்த வரலாற்றுக்குக் கலவியலுரை தவிர வேறு சான்றுகள் இல்லை.  எனவே சிலர் சங்கம் என்பதே கற்பனை எனக் கூறினர் .  சங்கம் என்பது வடசொல் என்பதையும், அவ்வடச்சொல்லும் சங்க இலக்கியத்தில் இடம் பெறவில்லை என்பதையும் அவர்கள் தம் கூற்றுக்குச் சான்றாக்கினர்.  அவர்கள், கடவுளர் சங்கத்தில் வீற்றிருந்தமையும், சங்கம் நிலைத்த கால அளவும் நம்பத்தக்கன அல்ல என்றனர்.

     கா.சுப்பிரமணிய பிள்ளை, ரா.இராகவையங்கார் ஆகியோர் முச்சங்கம் உண்மை என்பதை ஆய்ந்து நிறுவினர் .

'நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி 
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்'
          -அப்பர் தேவாரம் 

'சங்கத் தமிழ்'      -ஆண்டாள் திருப்பாவை 

'சங்கமுகத் தமிழ்'     - திருமங்கை யாழ்வாரின்                                                        பெரிய திருமொழி 

'உறைவான் உயர்மதிற் கூடலில் 
ஆய்ந்த ஒண் தீந்தமிழின் 
துறைவாய் நுழைந்தனையோ'
          - மாணிக்கவாசகரின் திருக்கோவையார் 

'மகாபாரதம் தமிழ் படுத்தும் மதுராபுரிச் 
சங்கம் வைத்தும்'     - சின்னமனூர்ச் செப்பேடுகள் 

     இக் கூற்றுகள் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையாயினும் 'தமிழ்ச் சங்கம் உண்மை! கற்பனையன்று' என்பதை நிறுவுகின்றன.

'தொல்லாணை நல்லாசிரியர் 
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் 
நிலந்தரு திருவின் நெடியோன்'
                                                       - மதுரைக்காஞ்சி 
'தமிழ்நிலை பெற்ற  தாங்கரு  மரபின் 
மகிழ்நனை மறுகின் மதுரை'
                                                     - சிறுபாணாற்றுப்படை 

'இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும் 
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே'
                                                      - புறநானூறு 

'நிலனாவில் திரிதரூஉ  நீள்மாடக் கூடலார் 
புலனாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ '
                                                       - கலித்தொகை  

'ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி 
மாங்குடி மருதன் தலைவன் ஆக 
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் 
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை '
                                                             -புறநானூறு 

     மேற்கண்ட சங்கப் பாக்களின் வரிகள் பாண்டிய நாட்டில் மதுரையில் சங்கம் இருந்ததை ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.  'தமிழ்நிலை' என்னும் சொற்றொடர் 'ஆநிலை' என்பதைப்  போன்றது.  ஆக்கள் நிலைத்து நிற்கும் தொழுவத்துக்கு ஆநிலை என்று பெயர்.  தமிழ் நிலைத்து நிற்கும் தமிழ்ச் சங்கத்துக்குத் 'தமிழ் நிலை'என்று பெயர்.  தமிழ் நிலை என்னும் தொடர், சங்கம் என்பதற்குப் பதிலாக அக்காலத் தமிழர் வழங்கிய பெயர் என்று ரா.இராகவயங்கார்  நிறுவுகிறார்.

     எனவே தமிழ்ச்சங்கம் இயங்கி, இன்றமிழை ஏற்றமுறச் செய்தது எனும் கூற்று ஐயத்திற்கிடமின்றி நிறுவப்படுகிறது.

     கடைச்சங்க காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்கின்றனர் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்