முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார் நாற்பது - ஐந்திணை ஐம்பது

 

13. கார் நாற்பது

    கார் காலத்தைச் சிறப்பிக்கும் நாற்பது வெண்பாக்களைக் கொண்டது, "கார் நாற்பது".

'காலம் இடம் பொருள் கருதி நாற்பான் 
சால  உரைத்தல் நானாற் பதுவே'

என்று  இலக்கண விளக்கப் பாட்டியல் கூறும்.  இதன்படி இந்நூல் காலம் பற்றியது.  பாட்டியல் முதலில் காலத்தைக் குறிப்பிடுவது கொண்டு நானாற்பதில் முதலில் பிறந்த நாற்பது கார்நாற்பது என்று கருதுவர்.  அகப்பொருள் கூறும் கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது இது.

     இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங் கூத்தனார்.  இப்பெயரைக் கொண்டு இவரது இயற்பெயர் கூத்தன்.  தந்தையார் பெயர் கண்ணன்.  சொந்த ஊர் மதுரை என்பனவற்றை அறியலாம்.  இவர் தம் நூலின் முதற்பாடலில், 'பொருகடல் வண்ணன் புனை மார்பில் தார் போல திருவில்' என்னும் வரியில், 'வானவில் திருமாலின் மார்பில் தவழும் மாலை போன்றது' என்று உவமிக்கிறார்.  பத்தொன்பதாம் பாடலில், 'நாஞ்சில் வளவன்' என்று பலராமனைக் குறிப்பிடுகின்றார்.  எனவே இவர் வைணவர் என்பர்.  எனினும் சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிட்டு விழாவைக் குறிப்பிடுவதால் இவ்வைணவர் சமயப் பொறை உடையவர் எனக் கொள்வர்.  திணை மாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது முதலிய அகப் பொருள் நூல்களுக்கு முன்னே தோன்றியது கார் நாற்பது எனத் துணியலாம்.  எனவே கூத்தனார் கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்பது ஒருதலை.

     கார் காலம், முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது.  இத்திணையின் சிறுபொழுதாகிய மாலை, உரிப்பொருளாகிய ஆற்றி இருத்தல், கருப்பொருள்கள் ஆகியன அமையப் பாடப் பெற்ற நூல் இது.  போர் கருதிப் பிரியும் தலைவன் கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்றான்; கார் வந்தது; காதலன் வரவில்லை.  கவலையுற்றாள் தலைவி; அதை மாற்ற முயன்றாள் தோழி.  அதே நேரத்தில் தலைவன் திரும்பி வந்து ‌‌‌‌‌தலைவியை அணைகிறான்.  இதை ஒரு நாடகம் போல அமைத்துப் பாடல்களைத் தோழி, தலைவி, தலைவன், பாகன் ஆகியோர் கூற்றுகளாக இயற்றியுள்ளார் கூத்தனார்.  இந்நூல் கற்போர் இதயத்தைக் களிக்கச் செய்யும்.

     தலைவன்'கார் காலத்தே வருவேன்' எனப் பிரிந்தான்.  தலைவி பசலை நோயுற்று நலிந்தாள்.  மயில்கள் நடன மாதரைப் போல, காட்டிலே கொன்றை மரங்களில் பூவிரிய, அப்பூக்களைப் பாடும் வண்டுகள் மொய்க்கக் கார்காலம் வந்தது.  அதுவே தலைவியின் பசலை போக்கும் மருந்து எனக் கூறுகிறாள் தோழி.  'தோழி, பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தியது'  என்னும் துறையில் அமைந்த பாடல் இது.

'ஆடு மகளிரின் மஞ்ஞை அணிகொள 
காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன 
பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி 
வாடும் பசலை மருந்து.

14. ஐந்திணை ஐம்பது 

    அகத்திணை ஒன்றுக்குப் பத்துப் பாடல் வீதம் ஐந்திணைக்கும் ஐம்பது பாடல் கொண்ட நூலாதலால் இது 'ஐந்திணை ஐம்பது' என்னும் பெயர் பெற்றது.  முல்லை, குறிஞ்சி , மருதம், பாலை, நெய்தல் என்னும் முறையில் திணைகள் அமைக்கப்பட்ட முறை, 'மாயோன் மேய காடுறை உலகமும்' என்னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள முறையாகும்.  இந்நூற்பாவில் இல்லாத பாலை ஈற்றயலாக இணைக்கப் பட்டுள்ளது.

    இந்நூலாசிரியர் மாறன் பொறையனார்.  இதனால் இவர் மாறன் மகனான பொறையன் எனக் கொள்ளலாம்.  மாறன் என்பது பாண்டியன் பெயராகவும், பொறையன் என்பது சேரனின் பெயராகவும் இருப்பதால் இவர் இவ்விரு பேரரசர்களுடன் தொடர்பு கொண்டவர் என்றும், தென்பாண்டி நாட்டினர் என்றும் உய்த்து உணருவர்.  இந்நூலின் பாயிரம் இவரை 'வண்புள்ளி மாறன் பொறையன்' எனக் கூறுவதால், இவர் அரசாங்க வரவு - செலவுக் கணக்கு அதிகாரியாவார் என்போரும் உண்டு.  புள்ளி என்பது ஊரின் பெயர் எனவும் சிலர் கருதுவர்.

    முதற் பாடலில், கண்ணன் நிறம் போல இருண்டு எழுந்து, முருகன் வேல் போல் மின்னி, சிவனுக்குரிய கொன்றைப் பூக்கள் மலரும்படி வலமாக எழுந்தன மேகங்கள் எனக் கூறுவதால் இவர் சமயப் பொறையுடைய வைதிக மதத்தினர் என்பர்.

    மாறன் பொறையனார் காட்டும் அகப் பொருட்காட்சிகள் உள்ளத்தை அள்ளுவன .  பாலை வழியில் ஒரு சுனையில் ஒரு மானுக்கும் போதாத சிறிதளவு நீர் இருக்கிறது.  அதை உண்ண ஆணும் பெண்ணுமான இரு மான்கள் வருகின்றன.  ஒன்றை விட்டு மற்றொன்று நீர் பருக விரும்பாமல் இரண்டும் ஒரே நேரத்தில் சுனை நீரை அருந்துகின்றன.  அந்நீரைப் பிணைமான் தாகம் தணியப் பருக வேண்டும் என்று எண்ணிய கலைமான், நீரில் வாய் வைத்துப் பருகுவது போலப் பாவனை செய்து உறிஞ்சியதே அன்றி உண்மையில் நீர் பருகவில்லை.  இதை அறியாத பிணைமான் நீர் பருகுகிறது.  இத்தகைய அன்புக் காட்சிகள் நிறைந்தது தலைவன் செல்லும் நெறி என்கிறாள் தோழி.

'சுனைவாய்ச் சிறு நீரை 'எய்தாது' என்று எண்ணிப் 
பிணைமான் இனிது உண்ணவேண்டி கலைமாதன் 
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர் 
உள்ளம் படர்ந்த நெறி.'

    இந்நூலின் சிறப்பை உணர்ந்தே பாயிரப் பாடல் 'ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர் ' எனச் செப்புகிறது.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...