கணக்கு - நெடுங்கணக்கு
சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு. இவற்றைத் தமிழ்விடு தூது,
'மூத்தோர்கள்பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'
என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.
கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.
தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி மூலம் அறிகிறோம்.
'உணற்கு இனியஇன்னீர் பிறிதுழி இல் என்னும்கிணற் றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினைமுற்றுப் பகலும் முனியாது இனிதோதிக்கற்றலின் கேட்டலே நன்று'.
கணக்கு என்னும் சொல்லினடியாகப் பிறந்த கணக்காயர் என்னும் பெயர், எழுத்தையும் இலக்கியத்தையும் கற்பித்த ஆசிரியருக்கு வழங்கப்பட்டது; இதனை நாலடியாரின் பின்வரும் பாடலால் அறியலாம்.
'கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்பெற்றதூஉம் பேதையோர் சூத்திரம் - மற்றதனைநல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்புல்லறிவு காட்டிவிடும்.
ஒரு புலவரின் பெயர், 'மதுரைக் கணக்காயனார்' என வழங்கியதையும் நாம் அறிகிறோம். வீரமாமுனிவர் 'கணக்காயர்' என்பதற்கு 'அறிஞர்' என்று பொருள் கூறுகிறார். கா. ர . கோவிந்தராச முதலியார் "கணக்காயர்" நூல்களைக் கற்பிப்பவர் எனக் குறிப்பிடுகிறார். எனவே கணக்கு என்பது நூல்களைக் குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது.
கீழ்க்கணக்கு என்பது எண்ணிக்கையினையே குறிக்கிறது என்று கருதுவோரும் உண்டு. தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த ஒருவகைக் கணக்கு முறைக்குக் கீழ்க்கணக்கு என்பது பெயர் என்று அவர்கள் கூறுவர் . கீழ் என்னும் சொல்லக் கொண்டு கீழ்க்கணக்கு என்பதைக் குறித்திருக்கலாம். அல்லது கைக்கணக்கு என்பதைக் குறிக்கலாம். இதற்கு எதிர்ச் சொல்லாக மேல் கணக்கு என்பதைக் கொள்ளலாம். கீழ்க்கணக்கு என்பது சிற்றெண்ணைக் குறித்து, ஆகுபெயராகச் சிறு எண்ணிக்கை கொண்ட அடிகளையுடைய நூல்களைக் குறித்தது என்பது இவர் கருத்து.
திருநாவுக்கரசர் கீழ்க்கணக்கு என்னும் சொற்றொடரை மேற்சொன்ன பொருளில் பயன் படுத்தி இருத்தலைக் கீழ்வரும் தேவாரப் பாடலால் அறிக :
'தொழுது தூமலர் தூவித் துதித்து நின்றுஅழுது காமுற்று அரற்று கின்றாரையும்பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
கணக்கு - இலக்கணம்
மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களைப் 'பன்னிரு பாட்டியல்' இரண்டு சூத்திரங்கள் மூலம் இலக்கணம் வகுக்கிறது. முதல் சூத்திரம் கணக்கு இருவகைப்படும் என்பதைக் கூறுகிறது.
'மேல்கீழ்க் கணக்கென இருவகைக் கணக்கே'
இந்தச் சூத்திரத்திற்கு மேற்கோள் சூத்திரமாகப் பின்வரும் சூத்திரம் இடம் பெற்றுள்ளது.
'மேற்கணக்கு எனவும் கீழ்க்கணக்கு எனவும்
பாற்படு வகையால் பகர்ந்தனர் கொளலே'
அடுத்து, பன்னிரு பாட்டியல், கணக்கு நூல்களின் இலக்கணத்தை வகுக்கிறது.
'அகவலும் கலிப்பா வும்பரி பாடலும்பதிற்று ஐந்து ஆதி பதிற்று ஐம்பது ஈறாமிகுத்துடன் தொகுப்பன மேல்கணக்கு எனவும்வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே'
(பதிற்று ஐந்து - 10 X 5=50)
(பதிற்று ஐம்பது - 10 X 50 = 500)
ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய பாக்களில், அமைந்த ஒவ்வொரு பாடலும் அதிக அடிகள் கொண்டதாக ஐம்பது முதல் ஐந்நூறு பாடல்களை ஓர் இனமாகத் தொகுத்தால், அவை மேல்கணக்கு நூல் என வழங்கவேண்டும். வெண்பாக்களின் தொகுதியும், அடியளவு குறைவாகப் பெற்று, மேலே சொன்ன பாடல்களின் எண்ணிக்கை 50 முதல் 500 வரை பெற்று வந்தால் அது தொகை நூல் கீழ்க்கணக்கு எனப்படும். இதுவே மேற்கண்ட சூத்திரத்தின் பொருள். இச்சூத்திரத்துக்கு மேற்கோள் சூத்திரங்களாகப் பின்வருபவை காட்டப்பட்டுள்ளன.
'ஐம்பது முதலா ஐந்நூறு ஈறாகஐவகைப் பாவும் பொருள் நெறி மரபில்தொகுக்கப்படுவது மேல் கணக்காகும்'
அடி நிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதிஅறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும் '
பன்னிரு பாட்டியலின் சூத்திரத்தைவிட, "அடிநிமிர்பு இல்லா" என்னும் மேற்கோள் சூத்திரத்தையே கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி விளக்கும் அனைவரும் எடுத்துக் காட்டுவர். இவற்றின் சுருக்கமான பொருள், மேல்கணக்கு நூல்களின் செய்யுள் வரிகள் மிக்கவனாக இருக்கும்; கீழ்க்கணக்கு நூல்களின் செய்யுள் அடிகள் குறைந்தனவாக இருக்கும் என்பதே மேல் , கீழ் என்பன உயர்வு தாழ்வு குறிப்பன அல்ல; அடிகளின் மிகுதி, குறைவைக் குறிப்பனவே!
'அம்மை தானே அடி நிமிர்ந்து இன்றே' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரை வரைந்த பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதரும் மேல், கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றித் தம் உரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
பண்டைத் தமிழகத்தில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் இருந்து தமிழ் வளர்த்தன. தமிழர் ஆட்சி நீங்கிக் களப்பிரர், பல்லவர் ஆட்சி ஓங்கிய காலத்தில் சமணர்கள் ஒரு தமிழ்ச் சங்கத்தை மதுரையில் அமைத்துத் தமிழ் வளர்த்தமை தெரிகிறது. பொதுவாகச் சமணர்கள் தங்கிய இடம் பள்ளி என வழங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியும் கல்வி கற்பிக்கும் நிலையமாக விளங்கியது. எனவே அப்பள்ளிகள் பழைய தமிழ் நூல்களைத் திரட்டிக் காக்கும் பணியும், புதிய நூல்களை இயற்றிச் சேர்க்கும் பணியும் மேற்கொண்டிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். இன்னும் தமிழ் நாட்டுக் கல்வி நிலையங்களைப் 'பள்ளி' என வழங்கி வருவதை இங்கு நினைவு கொள்ளல் தகும். கல்விப் பணி புரிந்த சமணப் பள்ளியோடு அமைதியடையாத வச்சிர நந்தி என்னும் வண்டமிழ்த் தொண்டரான சமணத்துறவி மேலே குறிப்பிட்ட தமிழ்ச் சங்கமாகும். இச்சங்கத்தார் பல புதிய நூல்களை இயற்றினர். பழைய தமிழ் நூல்களைத் தேடிச் சேர்த்தனர். இவற்றை ஆராய்ந்த வச்சிர நந்தியாரே இவற்றைப் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்றும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் பிரித்துத் தொகுத்தார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மதுரையில் (மதுரையில் தமிழ் சங்கத்தில்) இருந்த புலவர்கள் எழுதினார்கள் என்று ஒரு வெண்பா கூறுகிறது.
திரிகடுக நூலின் பாயிரச் செய்யுள், அந்நூல் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய, "சங்கம் மருவிய" காலத்து நூல் என்பதைக் குறிக்கிறது.
'திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்மருவு நல்லாதன் மருந்து'
இவ்வெண்பா குறிப்பது நான்காம் தமிழ்ச் சங்கத்தையே வச்சிரநந்தி, மேல், கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்த காலம், இருண்ட காலத்தின் (கி. பி. 300 முதல் 600 வரை ) இறுதிப் பகுதியாகலாம்.
வச்சிரநந்தி தமிழ் நூல்களை இவ்வாறு தொகுத்து அளிக்காமல் இருந்தால், இருவகைக் கணக்கு நூல்களில் பலவற்றை நாம் இழந்து இருப்போம் என்பது உறுதி. இருபதாம் நூற்றாண்டில் உ.வே . சாமிநாதையர் செய்த தொண்டை வச்சிரநந்தி செய்துள்ளார். இருண்ட காலத்தே தோன்றிய தமிழ் நிலவு வச்சிரநந்தி எனக் கூறல் பொருந்தும்.
மேல்கணக்கு நூல்கள்
பதினெண் மேல்கணக்கு நூல்கள் எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். இவற்றைச் சுருக்கமாகப் 'பாட்டும் தொகையும்' எனக் கூறுவர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டுப் பற்றி முன்னரே விரிவாகக் கண்டோம்.
0 கருத்துகள்