முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமந்திரம் - முத்தொள்ளாயிரம்



திருமந்திரம்  

     'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

    தமிழரின் தலையாய கொள்கையை விளக்கும் இத்தொடரை அறியாதார் தமிழுலகில் இலர்.  இவ்வுரை பெற்ற நூலே தமிழ் மந்திரம் எனச் சிறப்பிக்கப் பெறும் 'திருமந்திரம்'.  இதனை இயற்றியவர் திருமூலர்.  இவரைத் திருமூல நாயனார் என வழங்குவர்.

    திருமூலர், திருக்கயிலையில் நந்தியின் திருவருள்பெற்ற சிவயோகியருள் ஒருவர்.  எண் பெருஞ்சித்தி கைவரப்பெற்ற சித்தர்; செந்தமிழ் பக்தர்; திருவாவடுதுறைக் கோயிலில் உள்ள அரசமரத்தடியில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல் பாடியவர்.  இக்குறிப்புகளைப் பெரிய புராணம் தருகிறது.  திருமந்திரம் நூலில் வரும் பாடல்கள் சிலவும் இவற்றிற்கு அகச்சான்றாய் நிற்கின்றன.  திருமூலர் நெடுங்காலம் வாழ்ந்த சான்றோர் என்பதில் ஐயம் இல்லை.

    திருமந்திரம் நூலில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன.  இவை 232 அதிகாரங்களாகப் பகுக்கப் பட்டுள்ளன.  இவற்றுள் உள்ள பாடல்கள் மூவாயிரம்.  'மூலம் உரைசெய்த மூவாயிரத் தமிழ்' என்பது பாயிரக் கூற்று, தற்போது திருமந்திரத்தில் 3071 பாடல்கள் உள்ளன.  எனவே இடைச் செருகலாக 71 பாடல்கள் உட்புகுந்தமை அறிகிறோம்.  இவ்விடைச் செருகல் பாடல்களினால், கடுக்கன்,ஒட்டியாணம், வட்டி, மல்லாக்கத் தள்ளல் முதலிய பிற்காலச் சொல் வழக்குகள் நூலில் உள்ளன.

    பழைய தமிழ்ச் சிவாகம நூல்கள் ஒன்பதைத் தழுவி ஒன்பது தந்திரங்களில் திருமூலர் திருமந்திரத்தை இயற்றினார்.  இது, சைவ சித்தாந்தக் கொள்கையை உணர்த்தும் தமிழ் ஆகம நூல்.  இது வடநூலின் தழுவல் அன்று.

    இந்நூல் மறைந்து போன காலம் ஒன்றிருந்தது.  திருவாவடுதுறைக்கு வந்த திருஞான சந்பந்தர், புதைந்திருந்த இந்நூலைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்ததாக ஒரு செவி வழிச் செய்தி உண்டு.  இதன் மூலம் ஏழாம் நூற்றாண்டினரான சம்பந்தருக்குக் காலத்தால் முற்பட்டவர் திருமூலர் என்பதை அறியலாம்.  இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்.  திருமந்திரத்தின் முதற்பாடலாக ஆனைமுகனைப் பற்றிய கடவுள் வாழ்த்து உள்ளது.  இது இடைச் செருகல் பாடலே.  விநாயக வணக்கம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது என்பது யாவரும் அறிந்ததே.

    திருமந்திரம் கூறும் அருளுரைகளில் சிலவற்றை இங்கே கற்றுக் களிப்போம் .

'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே'

'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
 
'உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்'
 
'ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின்'.

    திருமூலரின் தலையாய கொள்கை "அன்பே சிவம்" என்பதாகும்.  இதனை அறியாதார் அறிவிலார் என்பது அவருடைய கருத்து.

"அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்! அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்."

சிவன் அன்பு வடிவமானவன் என்னும் இவ்வுண்மையை வற்புறுத்தும் திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூலாகும்.  

முத்தொள்ளாயிரம்:

    மூவேந்தரான சேர சோழ பாண்டியரை ஒவ்வொருவர்க்கும் தொள்ளாயிரம் பாடல் வீதம் சிறப்பிக்கும் 2700 பாடல்கள் கொண்ட நூலே 'முத்தொள்ளாயிரம்'  இந்நூல் மறைந்தது.  நூலின் 109 பாடல்கள் புறத்திரட்டில் உள்ளன, அவற்றைத் திரட்டி முத்தொள்ளாயிரம் என்னும் நூலாக வெளியிடுகின்றனர்.  இது தொல்காப்பியம் கூறும் 'விருந்து' என்னும் வனப்பு அமைந்தது.

    இந்நூலாசிரியர் இன்னார் என்பது தெரியவில்லை.  இவர் சங்க காலத்துச் சான்றோர் அல்லர் என்பது, முத்தொள்ளாயிர ஆசிரியரைப் 'பிறசான்றோர்' என்று பேராசிரியர் கூறுவதால் உறுதி பெறுகிறது.  முத்தொள்ளாயிரப் பாடல் தொடர்களைப் பெரியாழ்வார் தம் நூலில் பயன்படுத்துகிறார்.  எனவே பெரியாழ்வார் காலமான எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் இந்நூலாசிரியர்.  இவர் இருண்ட காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர், சதாசிவப் பண்டாரத்தார்.

    மூவேந்தர்களை அவர் சிறப்புப் பெயர்களைக் குறிக்காமல் பொதுப் பெயர்களைக் குறித்துப் பாராட்டுவது முத்தொள்ளாயிரத்தின் தனிச் சிறப்பு.  மூவேந்தரின் நாடு நகரம், வெற்றி, கொடை முதலியவற்றை இந்நூல் சிறப்பிக்கிறது.

    சேரன் கோதையைக் காணச் சென்று நாணிக் கதைவடைத்தாள் ஒரு கன்னி.  அவளைப் போல், நில்லாது செல்லும், திரும்பும், பெயரும், அவளது நெஞ்சின் செயலே நம்மை நெகிழச் செய்கிறது.  இதற்கு ஓர் அரிய உவமை தந்தார் ஆசிரியர்.  செல்வக்குடியில் பிறந்த பின் வறுமையுற்றவர், உதவி நாடி ஒருவர் இல்லத்துக்குச் செல்லவும் விரும்பாமல், திரும்பவும் விரும்பாமல், பல்கால் சென்று திரும்பிப் பெயரும் துயர நிலையைத் தலைவியின் காதற் நெஞ்சத்தின் செயலுக்கு உவமை ஆக்குகிறார், புலவர்.

'ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் 
காணிய சென்று கதைவடைத்தேன் - நாணிப் 
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல 
வரும் செல்லும் பேரும் என்நெஞ்சு .'

இருண்ட காலத்து விருத்தம் மூன்று 

    இருண்ட காலத்தே கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் என்னும் மூன்று நூல்கள் தோன்றின.  இவற்றின் பெயர் வீரசோழிய உரையில் இடம் பெற்றுள்ளன.  இவை சமண நூல்கள், சமணர்கள் இவற்றைப் பல்கால் பயின்று வந்தனர் என்பதை, சம்பந்தர் நாவுக்கரசர் தேவாரப் பாடல்கள் உரைக்கின்றன.  ஏழாம் நூற்றாண்டினரான சம்பந்தரால் குறிப்பிடப்படும் இம் மூவிருத்தங்களும் சமண சமய ஆதிக்கம் இருந்த இருண்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.  இவற்றின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனலாம்.  இம்மூன்று நூல்களைப் பற்றி வேறு செய்திகள் கிடைக்கவில்லை.

    இங்கே குறிப்பிட்ட நரி விருத்தம் , திருத்தக்கதேவர் எழுதிய நரி விருத்தம் அன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...