முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திணைமொழி ஐம்பது - ஐந்திணை எழுபது

 

15. திணைமொழி ஐம்பது 

    இந்நூல், ஐந்திணை ஐம்பது போலவே திணைக்குப் பத்துப்பாடல் வீதம் ஐம்பது பாடலைக் கொண்டது.  எனவே திணைமொழி ஐம்பது எனும் பெயர் பெற்றது.  திணை வரிசை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என அமைந்துள்ளது; ஐம்பது பாடல்களில் 46 இன்னிசை வெண்பாக்கள்; எஞ்சிய நான்கே நேரிசை வெண்பாக்கள்.

    இந்நூலாசிரியப் பெயர் கண்ணஞ் சேந்தனார்.  இவர் சாத்தந்தையாரின் புதல்வர்.  புறநானூற்றில் சோழன் போரவைக் கோப்பெருநற் கிள்ளியைப் பாடிய சாத்தந்தையாரே கண்ணஞ் சேந்தனாரின் தந்தையார் என்று, டாக்டர். உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டார்.  அதனைப் பலரும் மறுத்து, இவர் இருண்ட காலத்துப் புலவரே அல்லாமல் சங்கத்துச் சான்றோர் அல்லர் என்பர்.  கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனாரும், இந்நூலாசிரியர் கண்ணஞ் சேந்தனாரும் உடன் பிறந்தார் ஆகலாம் எனப் பெயர் ஒற்றுமை கண்டு கூறுவோர் உண்டு, சேந்தனார் வைணவ, சைவ வேறுபாடு கருதாத ஒரு வைதிகர். 

    சேந்தனாரின் செந்தமிழ்ப் புலமை அறிய, ஒரு பாடலை நோக்குவோம்.  'இரவுக் குறி விலக்கி வரைவு கடாயது' என்னும் துறையில் அமைந்த பாடலில் 'நீ இரவில் வரின் ஊரில் அலர் எழும் ' எனத் தோழி உரைக்கிறாள்.  இப்பாடலில் மலையருவி விழும் ஓசை, யாழ், குழல், முழவு ஆகிய இசைக் கருவிகளின் இன்னோசை கலந்ததைப் போல இருந்தது என வரும் உவமை உள்ளுந்தோறும் உள்ளம் உவகையுறும்.

'யாழும் குழலும் முழவும் இயைந்தென
வீழும் அருவி விறல்மலை நன்னாட 
மழைமான் நோக்கியும் ஆற்றாள்; இரவரின் 
ஊர்அறி கௌவை தரும்.

16. ஐந்திணை எழுபது 

    திணைக்குப்  பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் சேர்த்து எழுபது பாடல்களைப் பெற்ற நூல், இது.  இதில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் முறையில் திணைகள் அமைந்துள்ளன.  எழுபது பாடல்களில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை.  தற்போது கிடைத்துள்ளவை 66 பாடல்கள்.

    இந்நூலாசிரியர் பெயர் மூவாதியார்.  இவர் சமணர் எனச் சிலர் கூறும் கூற்றுக்குப் போதுமான சான்று இல்லை.  நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல், விநாயகர் வணக்கம் கூறும்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் நுழைந்தது.  இக்கடவுள் வாழ்த்தை மூவாதியார் இயற்றவில்லை என்பது, 1. கீழ்க்கணக்கு அகப்பொருள் நூல் எதிலும் கடவுள் வாழ்த்துப் பாடல் பெறவில்லை.  2. கடவுள் வாழ்த்துப் பாடல் இந்நூலின் புறத்தே உள்ளது.  3.  இந்நூலின் பழைய உரையாசிரியர் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதவில்லை என்னும் முக்காரணங்களால் உறுதியாகிறது.  இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினர் எனக் கொள்வது பொருந்தும்.

'கள்ளத்தின் ஊச்சும் என்பர் காதலர் 
உள்ளம் படர்ந்த நெறி'

என்னும் ஐந்திணை ஐம்பதின் ஒரு பாடலின் பாதிப்பகுதி,

'கள்ளர் வழங்கும் சுரம் என்பர் காதலர் 
உள்ளம் படர்ந்த நெறி'

என்று ஏறத்தாழ அப்படியே இந்நூலில் எடுத்தாளப் பட்டுள்ளது.  இது மூவாதியார், மாறன் பொறையனாருக்குப் பிற்பட்டவர் எனக் கருதச் செய்கிறது.

    தலைமகள் இயற்பட மொழிந்ததாக அமைந்த ஒரு பாடல், 'சான்றோர் நட்புச் சிதையாமல் சிறந்து பயன்தரும்.'  என்னும் நற்கருத்தை நவில்கிறது. 'தலைவன் சான்றோன்; ஆதலால் அவன் நட்பும் நலம் தரும்' என்று தலைவியின் நெஞ்சு நம்புகிறதாம்.

'சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல் 
கயம் திகழ் சோலைமலை நாடன் கேண்மை 
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு'

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...