வைணவம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றிய சமயம். "மாயோன் மேய காடுறை உலகம்" என்றும்,
"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்தாவா விழுப்புகழ் பூவைநிலையும்'
என்றும் தொல்காப்பியம் கூறும் நூற்பாக்கள் மாயோனாகிய திருமாலின் சிறப்பை உணர்த்தும்,
'கணங்கொள் அவுணர் கறந்து பொலந்தார்மாயோன் மேயஒண் நன்னாள்; - மதுரைக் காஞ்சி
'புள்ளணி நீள்கொடிச் செல்வன்'. - திருமுருகாற்றுப்படை
'காந்தளம் சிலம்பில் களிறுபடிந் தாங்குப்பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ' - பெரும்பாண் ஆற்றுப்படை
மேற்கண்டவாறு சங்க இலக்கியங்கள் திருமாலைப் போற்றுகின்றன. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை மூலம் மாலின் மாண்பினைக் கூறும்.
சங்கம் மருவிய காலமான இருண்ட காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது. களப்பிரர் ஆட்சியகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோலோச்சிய போது சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.
வைணவ சமயத்தை வாழ்விக்க வந்த சான்றோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசார்யர்கள் என்றும் கூறுவர். இறைவனாகிய திருமாலின் குணங்களில் ஈடுபட்டு ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் என வழங்கினர். ஆழ்வார்களுக்குப் பின்னே தோன்றி, அவர்களுடைய சொல்லையும் செயலையும் பின்பற்றி, வைணவத்தை வளர்த்தவர்கள் ஆசார்யர்கள் எனப்பட்டனர்.
ஆசார்யர்களுக்குத் தலைமையானவர் நாதமுனிகள். இவர் கி.பி. 825 இல் அவதரித்தார். அதனால் ஆழ்வார்கள் எனப்படுவோர் கி.பி. 825க்கு முன்னே தோன்றியவர்கள் ஆவார்கள். இவ்வைணவப் பெரியோர்களின் வரலாற்றைக் கூறும் நூல்கள் பல உள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டவை இரண்டு: 1. இராமானுசர் காலத்திலிருந்த கருட வாகன பண்டிதர் கவிதையில் இயற்றிய திவ்விய சூரி சரிதை. 2. நம்பிள்ளை காலத்தவரான பின் பழகிய பெருமாள் ஜீயர், மணிப்பிரவாள நடையில் இயற்றிய ஆறாயிரப்படி குருப் பரம்பரை.
ஆழ்வார்கள் பதின்மர் என்றும் பதினொருவர் என்றும் கூறுவோர் உண்டு. எனினும் ஆழ்வார்கள் பன்னிருவர் என்பதே பெருவழக்கு. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் என்போரே அப்பன்னிருவர். இவருள் முதல் மூவரும் முதலாழ்வார்கள் என வழங்கப்பெறுவர். ஆழ்வார்களின் பாடல்களை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்னும் தொகை நூலில் காணலாம்.
0 கருத்துகள்