முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருஞான சம்பந்தர்

     


     சோழ நாட்டில் சீகாழியில் தோன்றியவர், நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர். அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர்.  இவர் ஆளுடைய பிள்ளையார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். மூன்றாண்டுப் பிள்ளையாக இருந்த போதே, உமாதேவியாரின் ஞானப் பாலைப் பருகித் தோடுடைய செவியன்' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்.  அது முதல் சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று பதிகங்களைப் பண்ணமையைப் பாடிச் சைவ நெறியையும் செந்தமிழ் இலக்கியத்தையும் வளர்த்து வந்தார்.

    சம்பந்தர் காலத்தில், பாண்டிய நாட்டை ஆண்ட நெடுமாறன் சமண சமயத்தவனாய் இருந்தான்.  பாண்டிமாதேவி மங்கையற்கரசியின் வேண்டுகோளின் படி சம்பந்தர் பாண்டிநாடு சென்று நெடுமாறனின் வெப்பு நோயினை "மந்திரமாவது நீறு" என்னும் பாடல்படி , நீரணிவித்து நீக்கினார்.  அனல் வாதம், புனல் வாதம் முதலியன புரிந்து சமணரை வென்றார்.

    திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், சிறுத்தொண்டர் முதலிய தம் காலத்து அடியார்களைக் கண்டு, பழகி மகிழ்ந்தார், சம்பந்தர்.  இவர் பெரியோர்களின் விருப்பப்படி, திருநல்லூர் நம்பாண்டார் என்பவரின் புதல்வி சொக்கியாரை மணந்து கொள்ளச் சம்மதித்தார்.  திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி, மணம் காணவந்தார்.  அனைவருக்கும் முக்தியளித்துத் தாமும் மணப் பெண்ணோடு இறைவனடியடைந்தார்.

    ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் முன்பகுதியினர் இவர் பதினாறு ஆண்டுகள் இம்மண்ணுலகில் வாழ்ந்தார்.  ஆதிசங்கரர் தமது 'சௌந்தரிய லகிரி' யில் சம்பந்தரைத் 'திராவிட சிசு' என்று குறிப்பிடுகிறார்.

    சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணமான பெரிய புராணத்தில் ஞானசம்பந்தரின் வரலாற்றை விரிவாக, ஏறத்தாழ நூலின் சரிபாதி அளவாகப் பாடியுள்ளார்.  அதனால் 'பிள்ளை பாதி, புராணம் பாதி' என்னும் பழமொழி, எழுந்தது.

    சம்பந்தர் பாடிய பதிகங்கள் மொத்தம் பதினாறாயிரம் என்று நம்பியாண்டார் நம்பி  குறிப்பிட்டுள்ளார்.  எனினும் திருமுறை கண்ட காலத்தில் கிடைத்தவை 381 பதிகங்களே.  இப்பதிகங்கள் சைவத் திமுறை பன்னிரண்டுகள், முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிகத்திலும் பதினோரு பாடல்கள் உள்ளன.  இப்போது நமக்குக் கிடைப்பவை மொத்தம் 4181 பாடல்கள்.

    திருவையாற்றுள் இறைவன் பெருமை கூறும் பாடலிலே அத்திருப்பதியின் இயற்கை அழகையும் இணைத்துக் கூறுகிறார் சம்பந்தர்.

'புலனைந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கி 
    அறிவழிந்திட்டு, ஐம்மே லுந்தி,
அலமந்த போதாக அஞ்சேல் என்று 
    அருள் செய்வான் அமரும் கோயில்,
வலம் வந்த மடவார்கள் நடமாட,
    முழவதிர மழையென் றஞ்சி,
சிலமந்தி அலமந்து மரமேறி 
    முகில் பார்க்கும் திருவை யாறே '

    'தோணிபுரமாகிய சீர்காழி  உறையும் சிவபெருமானின் திருநாமம் ஒரு முறை உரை' என்று தலைவி கிள்ளையிடம் கேட்பதாக ஆளுடைய பிள்ளை பாடிய பாடல் தேனொடு பால் கலந்த சுவை தருவது:

'சிறையரும் மடக்கிளியே !
    இங்கே வா; தேனோடு பால் 
முறையாலே உணத்தருவேன்;
    மொய்பவளத் தொடுதரளம் 
துறையாரும் கடல் தோணி 
    புரத்தீசன், துளங்கும் இளம் 
பிறையாளன் திருநாமம் 
    எனக்கொரு கால் பேசாயே'

    திருஞானசம்பந்தரின் ஒரு பாடலை ஒருகால் கற்றாலும் துன்பம் அருகும் ; இன்பம் பெருகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...