Looking For Anything Specific?

பல்லவர் காலம் கி.பி.600-850

 

பக்தி இலக்கியங்கள் 

    சங்க காலத்துக்குப் பின்னே தமிழகத்தைக் களப்பிரர் கைப்பற்றி ஆண்டனர்.  தமிழ்நாடு அடிமைப்பட்டதுடன் தமிழ்மொழியும், தமிழர் சமயங்களும், தமிழர் கலைகளும் அடிமைப்பட்டன;  ஆதிக்கம் இழந்தன.  இந்நிலையில் பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் புகுந்து செங்கோல் செலுத்தின.

    கி.பி. நான்காம் நூற்றாண்டில் தென்னாட்டுக்கு வருகை தந்தார் பாஹியான் என்னும் சீனர்.  அக்காலத்தில் தென்னாட்டில் பல்லவர் ஆட்சி முளைத்து விட்டிருந்தது.  பாஹியான், குண்டூர் மாவட்டத்திலுள்ள நாகார்ச்சுன குண்டாவில் பெரிய புத்த விகாரம் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹியூன் சுவாங் என்னும் மற்றொரு சீனர் தென்னாட்டுக்கு வந்தார்.  அவர் ஆந்திர நாட்டில் சுமார் இருபது பௌத்த பள்ளிகளையும் அவற்றில் சுமார் மூவாயிரம் பூத்தத் துறவிகளையும் பார்த்ததாக எழுதியுள்ளார்.  காஞ்சி மாநகரத்தில் அதைச் சுற்றிலும் புத்த மதம் செழிப்புற்று விளங்கியதை அவர் குறிப்பிடுகிறார்.  காஞ்சிபுரம் தென்னகத்தைப் பொறுத்தவரை புத்த சமயத்துக்குத் தலைமைப் பீடமாகத் திகழ்ந்தது.  'நியாய பாடியம் ' என்னும் புத்தசமய நூலை எழுதிய வாத்சாயனர் என்பவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட திராவிட நாட்டினர் என்பர்.  திக்கநாகர், தருமபாலர், போதி தருமர் முதலியோர் காஞ்சியைச் சார்ந்தவர்கள்.  புத்த மதம் பல்லவராட்சிக்கு முன்பும், பல்லவராட்சியின் போதும் தமிழ்நாடு முழுவதிலும் பரவியிருந்தது.  கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை புத்த சமயம் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியது.  இச்சமயம் நிச்சயம் அரசர்களின் ஆதரவு பெற்றே வளர்ந்திருக்க வேண்டும்.  எந்த அரசரின் ஆதரவை எவ்வகையில் பெற்று வளர்ந்தது என்பது இப்போது தெரியவில்லை.  களப்பிரரின் ஆதரவும், புத்தவர்மன் போன்ற பல்லவ மன்னனின் ஆதரவும் பெற்று வளர்ந்திருக்கும் எனலாம்.

    கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் புத்த சமயம் செல்வாக்கு இழந்துவிட்டது.  தேவாரம் பாடிய மூவர் காலத்தில், புத்த மதத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.  இங்கும் அங்குமாகச் சில பௌத்த சங்கங்களே செயல்பட்டன.

    சமண சமயம் சங்க காலத்தில் நுழைந்து, களப்பிரர் காலத்தில் காலூன்றிப் பல்லவர் காலத்தில் ஆட்சிப் பீடத்தையே கைப்பற்றிவிட்டது.  திருப்பாதிரிப் புலியூரில் சமண சங்கம் நிலைபெற்றுத் தன் கோட்பாடுகளைத் தமிழகம் முழுவதும் பரப்பி வந்தது.  இத் திருப்பாதிரிப் புலியூரே 'பாடலிகா' என வழங்கப்பட்டது, 'உலோக விபாகம்' என்னும் சமண நூலைப் படியெடுத்தவர் இந்தப் பாடலிகாவைச் சார்ந்தவர் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.  இப்பாடலிகாவில் இருந்த சமணச் சங்கமே, பல்லவப் பேரரசனான முதலாம் மகேந்திர வர்மனையும், பாண்டியப் பேரரசனான நெடுமாறனையும் சமண சமயத்தை மேற்கொள்ளச் செய்திருக்க வேண்டும்.  களப்பிரரை வீழ்த்திய பல்லவரும் பாண்டியரும் சமண சமயம் தழுவிய சூழலில் சமண சமயம் எத்தகைய சிறப்பையும் செல்வாக்கையும் பெற்றிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

    சமண சமயத்தின் ஆதிக்கத்தால் சம்ஸ்கிருதம் உயர்நிலை எய்தியிருந்தது.  முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் முதலிய நூல்களை இயற்றுமளவு வடமொழிப் புலமைப் பெற்றிருந்தான்.

    தமிழ் இலக்கியமும், தமிழ் சமயங்களான சைவமும் வைணவமும் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சி தொடங்கிய கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை வீழ்ச்சி பெற்றிருந்தன.  இதை முற்றிலும் மாற்றிய மாபெரும் சமயப் புரட்சி இந்த ஏழாம் நூற்றாண்டிலே தான் தோன்றியது.  பிற மொழி, பிற சமய ஆதிக்கம் என்னும் பேரிருளை அழித்து ஒளிவெள்ளம் பாய்ச்சிய சைவக் கதிரோனாக உதயமானார்,திருநாவுக்கரசர்.

    திருநாவுக்கரசர், முதலில் சமண சமயத்தவராய் இருந்தார்.  பின் சைவரானார்.  மகேந்திர வர்மனையும் சைவனாக்கினார்.  சைவம் தழுவிய மகேந்திர வர்மன் (கி.பி. 600-630)  பாடலி புத்திரம் (பாடலிகா) என வழங்கப்பெற்ற திருப்பாதிரிப் புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளை இடித்து, அங்கிருந்து பெற்ற கற்களால் திருவதிகையில் குணவரேச்சுரம் என்னும் சைவக் கோயிலைக் கட்டினான்.

    திருநாவுக்கரசர், சமணத்தை விட்டுச் சைவத்துக்கு மாறிய செயலே அகச் சமயங்களுக்கு மறுமலர்ச்சி அளித்தது.  மகேந்திரன் சைவனாகி, குணவரேச்சுரம் எழுப்பிய செயல் அகச் சமயங்களில் எழுச்சியை அறிவிக்கும் வெற்றிச் சின்னமாக உயர்ந்து நின்றது.

    நாவுக்கரசர், ஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்களும் பொய்கையார், பூதத்தார், பெரியாழ்வார், நாச்சியார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும் பக்திப் பாடல்களைப் பண்ணோடு பாடிச் சமயமும் தமிழும் வளரத் துணை செய்தனர்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பிற்காலச் சோழர் எழுச்சி பெற்ற பத்தாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைச் சமய மறுமலர்ச்சிக் காலம் எனலாம்.  இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் பெரும்பான்மையானவை பக்தி இலக்கியங்களே.  பக்தி இலக்கியங்களுக்கு நாயன்மார்களும் ஆழ்வார்களும் செய்த தொண்டினை அடுத்து வரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்.   

கருத்துரையிடுக

0 கருத்துகள்