முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

களவழி நாற்பது



 12. களவழி நாற்பது 

    போர்க்களத்து நிகழ்ச்சிகளைப் பாடும் நாற்பது பாக்களைக் கொண்டது, களவழி நாற்பது.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் சார்ந்த போரைப் பற்றிக் கூறும் நூல் இஃது ஒன்றே.

'ஏரோர் களவழி அன்றிக் களவழித் 
தேரோர் தோற்றிய வென்றியும்'

    என்னும் தொல்காப்பிய நூற்பா, ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறுவது களவழி என்று தெரிவிக்கிறது.  களவழி, வாகைத் திணையில் ஒரு துறை, மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பாவுக்கு உரை எழுதியவர்கள் களவழி, நாற்பது நூலையும் பாடலையும் மேற்கோளாகக் காட்டியுள்ளனர்.  பரணி  நூலில் 'களம் பாடியது' என்னும் பகுதி களவழி போலவே போர்க்களத்து நிகழ்ச்சிகளை விளக்கும்.  களவழி நாற்பதில் உள்ள பாடல்களில் ஒவ்வொன்றும் 'களத்து 'என்னும் சொல்லைக் கொண்டு முடிகிறது.  இந்நூல் அம்மை என்னும் வனப்பு அமைந்தது.

    இந்நூலை இயற்றியவர் பொய்கையார்.  சோழன் கோச்செங்கணானும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்'என்னும் ஊரில் பொருதனர்.  அப்போது சோழன் சேரனை வென்று சிறையிட்டான்.  புலவர் பொய்கையார் இக் களவழியைப் பாடிச் சேரனைச் சிறை மீட்ட்டார்.  இச்செய்தியை நூலின் இறுதியில் காணப்பெறும் ஒரு குறிப்புக் கூறுகிறது.  இச் செய்தியினைக் கலிங்கத்துப் பரணி, மூவருலா, தமிழ்விடு தூது முதலிய நூல்களும் கூறுகின்றன.

'நல்லவன் பொய்கை களவம் நாற்பதுக்கு 
வில்லவன் கால்தளையை விட்ட கோன் '

என்பது 'மூவருலா'ப்  பாடல்.  

    புறநானூற்றில் 'குழவி இறப்பினும் ' எனத் தொடங்கும் பாடலின் குறிப்பு, "சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது , பற்றுக் கோட்பட்டு , குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு" என்று கூறுகிறது.

புறமும் களவழியும் ஒரே நிகழ்ச்சியைக் கூறுகின்றன என வாதிட்டு, களவழி நாற்பது சங்க கால நூல் என்றும், இதைப் பாடியவர் சங்கப் புலவர் பொய்கையாரே என்றும் கூறுவர் , சிலர்.  களவழி நாற்பது நூல் செங்கணான் பெயரையோ, இரும்பொறை பெயரையோ வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதால் அந்நூல் பிற்காலச் சோழர் காலத்தது என்றும், இதனைப் பாடிய பொய்கையார் சங்கத்துப் பொய்கையார் அல்லர் என்றும் கூறுவர் , சிலர்.  முதல் ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாரும் இந்நூலாசிரியரும் ஒருவர் அல்லர்.

    இந்நூலின் பெயர் 'நாற்பது' என இருப்பினும் நூலில் 41 வெண்பாக்கள் உள்ளன.  போர்க்களத்து நிகழ்ச்சிகளில், யானைப் போரையே இது மிகுதியாகக்  கூறுகிறது.  யானையின் துதிக்கையை வெட்ட, குருதி கொட்டுகிறது.  அது ஒரு பையிலிருந்து பவளத்தைக் கொட்டுவது போல அமைந்துள்ளது எனப் பொய்கையார் உவமிக்கும் பாடல் இலக்கிய நயம் பெற்றது.

'கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க ,

பவளம் சொரிதரு பைபோல், திவள்ஒளிய 

ஒண்செங் குருதி உமிழும், புனல்நாடன் 

கொங்கரை அட்ட  களத்து .'

    இப்பாடல் மூலம் சேரனுக்குத் துணையாகக் கொங்கரும் போரிட்டனர் என்பது தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...