முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதுமொழிக் காஞ்சி - ஏலாதி

   

 10. முதுமொழி 

     முதுமொழி என்பது பழமொழி என்னும் பொருள் தருவது.  மூதுரை என்பதும் இதுவே, காஞ்சி என்பது பல்வகை நிலையாமையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் கூறும்.  முதுமொழிக் காஞ்சி நூல் தொல்காப்பியரின் காஞ்சித் திணைக்குப் பொருந்துவதாய் இல்லை.  புறப்பொருள் வெண்பா மாலை 'முதுமொழிக் காஞ்சி' என்று ஒரு துறை கூறுகிறது.

'பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் 
உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று '

    என்பது  துறை விளக்கம்.  முதுமொழிக் காஞ்சி நூற்பொருள் இத்துறைக்குப் பொருந்துகிறது.

    காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவை.  பல மணிகள் கோத்த காஞ்சி அணிகலன் போலப் பல முதுமொழிகளைக் கோத்த காஞ்சியே இந்நூல் எனவும் கூறுவர் :

    முதுமொழிக் காஞ்சியை ஒரு நீதி நூலாகக் கொள்வதே பொருந்தும்.

    இந்நூலாசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார்.  இவர் சங்ககாலத்துப் புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் அல்லர்.  இவர் வச்சிரநந்தியின் தமிழ்ச்சங்க காலத்தைச் சேர்ந்தவர்;  எனவே இவரது காலமும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும் . கிழார் என்னும் சொல்லால் இவர் வேளாண் மரபினர் எனக் கொள்வர்.

    இந்நூல் - பத்துப் பத்துக்களைக் கொண்டது.  ஒவ்வொரு பத்தும் 

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்று தொடங்கிப் பத்து வரிகளில் பத்து முதுமொழிகளைத் தருகிறது.  எனவே இந்நூல் நூறு குறள்  வெண்செந்துறைப் பாக்களைக் கொண்டதாகும்.  ஒவ்வொரு பத்தும், இல்லைப் பத்து, எளிய பத்து என்று தனித்தனித் தலைப்பு பெற்றுள்ளது.  'சிறந்த பத்து' என்னும் தலைப்பில் வரும் சில வரிகள் இவை:

'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் 
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை '
'வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை'
இளமையின் சிறந்தன்று மெய் பிணி இன்மை'
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று'

(சிறந்தன்று - சிறந்தது )

11. ஏலாதி 

    'ஏலாதி' என்பது ஏலம் முதலிய ஆறு பொருள்களாலான ஒருவகைச் சூர்ணத்தைக் குறிக்கும் என மருத்துவ நூல்கள் கூறும்.  ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்னும் அளவின்படி சேர்த்து இடித்துச் செய்த சூரணமே (பொடியே ) மருந்து.  இது உடலுக்கு நலம் செய்யும் ஆறு உண்மைப் பொருள்களை ஒவ்வொரு பாடலிலும் பெற்ற இந்நூல் 'ஏலாதி' என்னும் பெயர் பெற்றது.  இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன.  தொல்காப்பியம் சொல்லும் அம்மை என்னும் பெயர்பெற்றது, இது.

    இந்நூலாசிரியர் பெயர் கணிமேதாவியார்.  கணி  என்பது கொண்டு இவர் சோதிட நூற்புலமை பெற்றவர் என்றும் கணிதத்தில் புலமை பெற்றவர் என்றும் கொள்வர்.  இது சிறப்புப் பெயர் இயற்பெயர் தெரிந்திலது.  இவர் சிறுபஞ்ச மூலம் இயற்றிய காரியாசானை அறிந்தவர்; சிறு பஞ்ச மூலத்தையும் கற்றவர்.  இருவரும் மாக்காயனாரின் மாணவர்கள்.  கணிமேதாவியார், திணைமாலை நூற்றைம்பது என்னும் வேறொரு நூலையும் இயற்றி உள்ளார்.  நூலுள் அமைந்த சமணசமயக் கருத்துக்களைக் கொண்டு இவரது சமயம் சமணம் என்பர்.  இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.

    கணிமேதாவியார் எளிது, அரிது என்னும் இரு கூறுகளை ஒரு பாடலில் இணைத்துக் கூறுகிறார்.

'சாவது எளிது ; அரிது சான்றாண்மை; நல்லது 
மேவல் எளிது; அரிது மெய்போற்றல் - ஆவதன்கண் 
சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியராய் 
வேறல் எளிது; அரிது சொல்.'

(சொல் எளிது, வேறல் அரிது எனக் கூட்டுக)

    சாவது எளிது; சாவதன் முன் சான்றோனாதல் அரிது.  நல்ல பொருளை - நிலைய - மேவல் எளிது; அதன் கண் மெய்யைப் போற்றல் அரிது.  துணையாகும் துறவறத்தில் சேர்தல் எளிது; அங்கே நிலைத்தல் அரிது.  எதையும் சொல்லல் எளிது ; சொல்லியவாறு செய்து வெல்லல் அரிது;  என்னும் அப்பாடலைக் கற்றல் எளிது! கற்றபடி நிற்றல் அரிதினும் அரிது.

    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...