முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குண்டலகேசி

      ஐம்பெருங் காப்பியங்களுள் மணிமேகலையைப் போலக் குண்டலகேசியும் பௌத்த காப்பியம் ஆகும். சிலம்பு, சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் காப்பியங்கள். குண்டலகேசி சமய வாதம் பேசும் காப்பியமாகும். இக்காப்பியம் கிடைக்கவில்லை. பழைய உரையாசிரியர்கள் இக்காப்பியக் கவிதைகளைத் தம் நூல்களில் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளனர். அப்பாடல்களைக்  கொண்டும், அவை பயன்படுத்தப்பட்ட நூல்களைக் கொண்டும், குண்டலகேசி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்த நூல் எனக் கூறுவர்.

      குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார்.  இவர் பௌத்த மதத்தினர்.  சமண சமயக் கொள்கைகளை மறுப்பதற்காகவே இவர் இக்காப்பியம் செய்தார்.

     பத்தரை என்பவள் வணிகன் பெற்ற பாவை. களவுக்காகக் காவலில் இருந்த காளன் என்னும் வைசிய புத்திரனைக் கண்டு காதல் கொண்டாள்; தந்தையின் துணையால் அவனை மீட்டு மணந்து கொண்டாள். இருவரும் இல்லற இன்பம் துய்த்து இனிதிருந்த காலத்தில் ஒருநாள் ஊடற் காலத்தில் "நீ கள்வன் அன்றோ" என்று சினந்து பேசினாள் பத்தரை. அதனால் சினம் கொண்ட காளன் அவளை வஞ்சகமாக மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அவனைக் கொல்ல முயன்றான். அதனை அறிந்த பத்தரை 'தற்கொல்லியை முற்கொல்லல் தகும்' என்று முடிவு செய்து உயிர் துறக்கும் முன் அவனை மும்முறை வலம் வர அனுமதிக்க வேண்டினாள்.  காளன் அனுமதித்தான். பத்தரை அவனை வலம் வருவது போல நடித்து அவனை மலை உச்சியில் இருந்து பிடித்துத் தள்ளிக் கொன்றாள். அதன் பின் வாழ்வில் வெறுப்புக் கொண்டு சமண நூல்களை நன்கு கற்று நிக்கந்தத் துறவியானாள். துறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் சுருள் சுருளாகத் தொங்கியதால் "சுருள் முடியினாள்" எனப் பொருள் தரும் 'குண்டலகேசி' என்னும் பெயர் பெற்றாள். குண்டலகேசி சமய வாதம் புரிந்து பிற சமயத்தாரை வென்று வாகை சூடி வந்தாள். முடிவில் புத்தரின் சீடரான சாரி புத்தரிடம் வாதிட்டுத் தோற்றாள். பின்னர் அவரிடம் உபதேசம் பெற்றுப் பௌத்த துறவியாகிப் பௌத்த தரிசனம் கொணடு முக்தி பெற்றாள்.

     இதுவே குண்டலகேசிக் காப்பியக் கதை. இதை  'நீலகேசி' உரையினால் காண்கின்றோம்.

     குண்டலகேசியை மறுக்கப் பிறந்த காப்பியமே நீலகேசி. மொக்கலன் என்பவனிடம் நீலகேசி, யான் இரண்டு பௌத்த சமயக் கணக்கர்களை வென்று வாகை சூடினேன். அவருள் ஒருத்தி 'குண்டலகேசி' என்பவள். மற்றொருவன் "அருகச்சந்திரன் காண்" என்றாள். இதைக் கேட்ட மொக்கலன், "குண்டலகேசி பேராசிரியை; அவளை நீ வெல்லுதல் எங்கனம்?" என்று கேட்க, நீலகேசி, குண்டலகேசியை வென்ற வகையை விளக்கினாள் ஒன்று 'நீலகேசி, கூறும். எனவே நீலகேசியின் காலமான கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அல்லது அதற்குச் சில ஆண்டுகள் முன்னே தோன்றியது குண்டலகேசி என்பது தெளிவு.

      குண்டலகேசி காப்பியத்தின் பாடல்களில் இன்று கிடைப்பன பத்தொன்பது செய்யுள்களே. இவற்றின் சிறப்பினை இரு பாடல்கள் மூலம் கண்டு அறிவது ஏற்புடையத்து:

     ஒருவன் இறந்த பின்னர், அவனைச் சுற்றிக் கூடி மற்றவர் அழுவதைக் காண்கின்றோம். அதைக் கண்டு எள்ளி  நகைக்கின்றார்,  நாதகுத்தனார். 'நாம் தாய் வயிற்றில் கருவாக இருந்த நிலை இறந்து,  பாலகப் பருவம் இறந்து, முடிவில் இறப்பதற்கான  முதுமைப் பருவம் எய்தி நிற்கின்றோம். இவ்வாறு நாள்தோறும் இறந்த நாம்,  பிறர் இறப்பதற்கு அழுகின்றோம்‌. நம் இறப்பினைக் கண்டு அழாமல் இருப்பது ஏன்?" என்று கேட்கும் பாடல் இளமை முதலிய பருவங்கள் நில்லா- யாக்கை நில்லாது என்னும் பேருண்மையைச் சீருற உரைக்கின்றது.

"பாளையாம் தன்மை செத்தும்

     பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும்

     காமுறும் இளமை செத்தும் 

மீளும்இவ் இயல்பும் இன்னே 

     மேல்வரும் மூப்பும் ஆகி

நாலுநாள் சாகின் றாமல் 

     நமக்கு நாம் அழாதது என்னோ?"

     'நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே' என்று முழங்கினார் நக்கீரர். அதே கொள்கையைக் குண்டலகேசியும் கூறுகின்றது. சாதாரண மனிதன் செய்தால் குற்றம்; சான்றோன் செய்தால் குற்றமில்லை' என்று கூறக் கூடாது. மெய்யுணர்வு பெற்ற மேலோரிடம் குற்றம் தோன்றினும் அது குற்றமே' எனக் கூறும் நாதகுத்தனார், "தேவரும் போற்றும் சிறப்பு மிக்கவர் சிவனார் என்பதால், அவர் கழுத்திலே உள்ள கறையை அது கறையன்று என்று யாரேனும் சொல்லுவார்களா? என்று கேட்கின்றார்.

  'மண்ணுளார் தம்மைப் போல்வார் 

       மாட்டதே அன்று வாய்மை 

நண்ணினார் திறத்தும் குற்றங்

      குற்றமே நல்ல ஆகா 

விண்ணுளார்  புகழ்வதற்கு ஒத்த

      விழுமியோன் நெற்றி போழ்ந்த

 கண்ணுளான் கண்ட தன்மேல்

     கறையை யார் கறையன்று என்பார்?'












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...