முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வளையாபதி

     ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூல் கிடைக்கவில்லை. இதன் கதையை வைசியபுராத்தால் அறியலாம் என்பர். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனினும் 'நிக்கந்த வேடத்து இருடி கணம்' என்றும், 'அறிவன்' என்றும் இதன் பாடல்கள் கூறுவதால் இக்காப்பியம் சமண நூல் என்பதனையும், இயற்றியவர் சமணப் புலவர் என்பதனையும், அறிகின்றோம்.  கிடைத்த பாடல்களில் சில ஆறடிப் பெற்ற பாடல்களாக இருக்கின்றன. நாலடியாக வரும் பாடல்களில் சில, இரண்டு வெவ்வேறு எதுகையைப் பெற்று வருவதால் இந்நூல் இளம்பூரணம், யாப்பருங்கல விருத்தி விருத்தி ஆகியவற்றுக்கு முற்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கூறலாம்.  

     வளையாபதி பாடல் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பரிமேலழகர் ஆகியோர் உரைகளிலும் யாப்பருங்கல உரையிலும், புறத்திரட்டு எனும் தொகை நூலிலும் காணப்படுகின்றன. இவற்றில் இருந்து திரட்டப்பட்ட பாடல்கள் மொத்தம் எழுபது. இப்பாடல்களுக்குப் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்துள்ளது.

     'தக்கயாகப் பரணி' யின் உரையாசிரியர், பரணியின் நூலாசிரியரான ஒட்டக்கூத்தரைப் பற்றி எழுதும் போது, இவர் வளையாபதியை நினைத்தார், கவியழகு வேண்டி' என்று குறிப்பிடுகின்றார். இதனால் கவிராட்சதனாகிய ஒட்டக்கூத்தர் நினைக்குமளவு கவிதைச் சிறப்பு மிக்க நூல் வளையாபதி என்பதும் செல்வராகிய ஒட்டக் கூத்தர் நினைக்குமளவு இச்சமண நூல் சிறந்து நின்றது என்பதும் விளங்குகின்றது.

     ஒட்டக்கூத்தர் மகிழ்ந்த கவியழகை இரண்டு பாடல் மூலம் நாமும் காண்போம்:

     'களவுத் தொழிலால் வந்த பொருளைக் கைப்பற்ற வேண்டாம்; கொலையோடு கூடிவரும் அறங்களை (வேள்வி செய்தல், கடவுளுக்கு உயிர்ப் பலியிடுதல் முதலிய செயல்கள்) மேற்கொள்ள வேண்டாம்; பொருள் இல்லாதவர் என்று எவரையும் இகழாதீர்கள்; ஆராயாமல் எவருடனும் நட்புக் கொள்ளாதீர்கள்; பிறர் மனைவியை நாட வேண்டாம்' என்னும் அறங்களைச் சீரியல் தீஞ் சொற்களால் கூறுகின்றார் வளையாபதி ஆசிரியர்:

'கள்ளன்மின் களவு ஆயின யாவையும்;

கொள்ளன்மின் கொலை கூடிவரும் அறம்;

எள்ளன்மின் இலர் என்று எண்ணி யாரையும்

 நள்ளன்மின் பிறர் பெண்ணோடு நண்ணன் மின்' 

     "இளமை, இன்பம் , பொருள் வளமை ஆகியன நிலைத்து நிற்பவை அல்ல. அவை நாளும் துன்ப வெள்ளத்தைப் பெருகச் செய்யும். ஆதலால், இளமையும், இன்பமும் வளமையும் நம்மிடம் உள்ளன என்று செருக்குறாமல் நிலத்தை உழும் உழவர்கள் அடுத்த பருவத்து உணவுக்கு இன்றே விதை விதைப்பதைப் போல, நீங்களும் இனி வரும் பிறப்புக்காக இப்போதே நாள்தோறும் அறமாகிய வித்தினை விதைத்துப் பயன் அடைவீர்களாக" என்று மனிதகுலம் உய்யும் புனித மார்க்கம் காட்டும் இனிய பாடல் இது:

"இளமையும் நிலையாவால்;  இன்பமும் நின்ற அல்ல ;

வளவையும் அஃதே போல்; வைகலு இல்லைம் துன்ப வெள்ளம்

 உள என நினையாதே; செல் கதிக்கு என்றும்

விளைநிலம் உழுவார் போல் வித்து வித்துநீர் செய்து கொண்மின்"

     வளையாபதி நான்கடியில் நவின்ற இவ்வறக் கருத்தினை, இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்துள்,

" இளமையும் செல்வமும் யாக்கையும் நில்லா;

 உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;

செல்லும் தேஎத்து உறுதுணை தேடுமின்"

 என்று மூவடியில் வழங்கி இருப்பதை அறிந்து இன்புறுகின்றோம்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...