3. நான்மணிக்கடிகை
நன்கு உயரிய மணிகளாய் இயன்ற ஒரு வகை அணிகலன் போல நான்கு நீதிமணிகளால் இயன்ற அற அணியே இந் நான்மணிக்கடிகை . இதனை இயற்றியவர் விளம்பி நாகனார். விளம்பி என்பது ஊர்ப்பெயர். இவர் வைணவர் என்பது இந்நூலில் உள்ள இரண்டு கடவுள் வாழ்த்துப் பாடலால் உறுதியாகிறது. இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பர், டி .வி. சதாசிவ பண்டாரத்தார். இந்நூல் தொல்காப்பியர் கூறும் 'அம்மை' எனும் வனப்பு பெற்றது.
இந்நூலில் இரண்டு கடவுள் வாழ்த்துச் செய்யுள் உட்பட மொத்தம் 104 பாடல்கள் உள்ளன. நான்கு சிறந்த கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிடையே ஓர் இயல்பு தோன்றப் பாடியிருக்கும் விளம்பி நாகனாரின் புலமை போற்றத் தக்கது. அணி என்பன நான்கும் ஒரு பாடல். இல்லை என்பன நான்கும் ஒரு பாடல், அணி என வருபவை நான்கு மாணிக்க மணிகளால் ஓர் அணி, நான்கு மரகத மணியால் ஓர் அணி என்று இனப்படுத்திச் செய்த அணிகலன்கள் போல ஒருமையும் பெருமையும் மிக்கனவாய்த் திகழ்கின்றன. இல்லை என வரும் பாடலை இங்கே காண்க.
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை; ஈன்றாரோடுஎண்ணக் கடவுளும் இல்.
4. இன்னா நாற்பது
இன்னாதது இது, எனக் கூறும் வெண்பாக்கள் நாற்பதைக் கொண்டதே இன்னா நாற்பது கடவுள் வாழ்த்துப் பாடலைச் சேர்த்தால் நூலின் மொத்தப் பாடல் 41. இந்நூல் தொல்காப்பியம் சொல்லும் அம்மை வனப்பு அமைந்தது.
இந்நூலை எழுதியவர் கபிலர். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர்.
'மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்அட்டு அன்று ஆனா கொழுந்துவை ஊன்சோறும்'
என்ற மதுவையும் மாமிசத்தையும் சிறப்பித்துப் பாடியவர் சங்கத்துக் கபிலர். இன்னா நாற்பது இயற்றிய கபிலரோ, கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை ஆகியவற்றை இந்நூலில் வற்புறுத்திக் கூறுகிறார். எனவே இருவரும் ஒருவர் அல்லர் என்பது உறுதி. இந் நூலாசிரியர் கி.பி. நான்காம் நூற்றாண்டினர் .
இவர் சமய சமரச நோக்குள்ளவர். தம் கடவுள் வாழ்த்துப் பாடலில், சிவன், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால்வரையும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வுலகில் 'இன்னா' இவையெனக் கண்டு அந்த இன்னாதவற்றை 'இன்னிசை' வெண்பாவில் கபிலர் கூறியுள்ளமை நினைந்து இன்புறத்தக்கது. இந்நூலுள் ஒரே கருத்துக் கூறியது கூறலாக வெவ்வேறு பாடல்களில் இடம் பெற்றிருப்பதையும் காணலாம்.
இன்னாது நான்கினை எடுத்துக் கூறும் ஒரு பாடலை இங்கே கற்பது இனிது!
ஆற்றல் இல்லாதான் பிடித்தபடை இன்னா;நாற்றம் இலாத மலரின் அழகு இன்னாதோற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னாமாற்றம் அறியான் உரை.
5. இனியவை நாற்பது
இனிது இது என வரையறுத்துக் கூறும் நாற்பது வெண்பாக்களால் ஆன நூல் என்பதால் இந்நூல், 'இனியவை நாற்பது' என்னும் பெயர் பெற்றது. இதனை; 'இனியது நாற்பது' 'இனிது நாற்பது', எனவும் வழங்கியுள்ளனர். கடவுள் வாழ்த்துப் பாடலைச் சேர்த்து இந்நூலில் மொத்தம் உள்ள பாடல்கள் 40. இந்நூல், தொல்காப்பியம் வனப்பில் ஒன்றாய் வழங்கும் 'அம்மை' என்பது அமையப் பெற்றது.
இந்நூலை எழுதியவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். தொல்காப்பியத்தில் வரும் அப்பெயர் 'மெய்யொழித்து' எனத் தொடங்கும் நூற்பா மூலம் பூதன், சேந்தன் என்னும் இரு மொழிகள் 'பூதஞ் சேந்தன்' எனப் புணர்ந்தமை அறியலாம். எனவே பூதன் மகன் சேந்தன் என்பதையும் அறிகிறோம். சேந்தன் என்பது நூலாசிரியர் பெயர். சேந்தனின் தந்தையார் பூதன். பூதனின் சிறப்புப் பெயர், மதுரை தமிழாசிரியர். பூதனாரின் புதல்வரான சேந்தனார் தம் தந்தையிடம் கல்வி பயின்று புலமை பெற்று இந்நூல் இயற்றினார் என்க.
சேந்தனார் சமயப் பொது நோக்குள்ள புலவர். இவர் கடவுள் வாழ்த்துப் பாடலில், கண் மூன்று உடையான், துழாய் மாலையான், முகம் நான்கு உடையான் என்று முறையே சிவன், திருமால், பிரமன் ஆகிய மும் மூர்த்திகளையும் குறிப்பிடுகிறார். எனவே கபிலரைப் போலவே சேந்தனார் சமயப் பொறை அமையப் பெற்றவர். கபிலர் மாயோன், பலராமன் ஆகியோரைத் தனித்தனியே குறிப்பிட, சேந்தனார் திருமாலாகிய ஒருவரை மட்டும் குறிப்பிடுகிறார். எனவே சேந்தனார் கபிலருக்குப் பின்னே, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதலாம்.
'இன்னா நாற்பது' நூலைக் கண்டே சேந்தனார் இனியவை நாற்பது இயற்றினார் எனக் கொள்வது பொருந்தும். சேந்தனார் காலத்தால் பிற்பட்டவர். இவர் பாடல்கள், இன்னா நாற்பது வழங்கும் தொடர்களை அப்படியே எடுத்து இனியவையாக்கி வழங்குகின்றன. 'ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா ' 'குழவிகள் உற்ற பிணி இன்னா' என்னும் கருத்துக்களை 'ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே' 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே' என வழங்குகிறார், சேந்தனார்.
இன்னா நாற்பது பாடல் ஒவ்வொன்றும் நான்கு இன்னாதவற்றைக் கூறும். இனியவை நாற்பது பாடல்களில் 36 பாடல்கள் மூன்று இனிய பொருளையே கூறுகின்றன. நான்கு பாடல்களே நான்கு கருத்துக்களைக் கூறுகின்றன. இனியவை மூன்றை இயம்பும் முழுப்பாடல் ஒன்று காண்க.
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதேமிக்காரைச் சேர்தல் மிக மாணமுன் இனிதேஎள்துணை யானும் இரவாது தான் ஈதல்எத்துணையும் ஆற்ற இனிதே.
இலக்கிய நயத்திலும், பா அமைப்பிலும் இன்னா நாற்பதைக் காட்டிலும் சிறப்புக் குறைந்த நூலாகவே இனியவை நாற்பது அமைந்துள்ளது.

0 கருத்துகள்