முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொருநர் ஆற்றுப்படை,சிறுபாண் ஆற்றுப்படை

 2. பொருநர் ஆற்றுப்படை 

    


     கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் 248 அடிகளில் பாடியது பொருநர் ஆற்றுப்படை.  இது ஆசிரியப்பாவால் அமைந்ததே; எனினும் கற்போருக்குச் சுவை ஊட்டுவதாக இருசீர் வஞ்சியடிகள் 4 இடையே வருமாறு பாடப்பட்டது.  ஆசிரியப்பாவில் வஞ்சி வரிகள் வரலாம் என்பது, 'ஆசிரிய நடைத்தே வஞ்சி' என்று தொல்காப்பியர் கூறுவதால் உணரலாம்.  சங்க இலக்கியத்தில் முடத்தாமக் கண்ணியார் பாடியதாகக் கிடைப்பது இப்பாடல் ஒன்றே.

    பொருநர் என்பவர் மற்றவர் போல வேடமிட்டுப் பொருந்த நடிக்கும் கலைஞர்.  இவர், ஏர்க்களம்  பாடுவோர், பார்க்கலாம் பாடுவோர், பரணி பாடுவோர் என மூவகையினர்.  இப்பாட்டில் வரும் பொருநன், 'வெண்ணித்தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ணார் கண்ணிக்கரி கால் வளவன்' என்று போர்க்கள வெற்றியைப் பாடுவதாலும், 'கைக்கசடு இருந்த என் கண்ணகல் தடாரி!' என்பதால் தடாரிப் பறை கொட்டுவோன் எனத் தெரிவதாலும் இவன் போர்க்களம் பாடும் பொருநன் என்று உணர முடிகிறது.

    பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெறாத பொருநனைக் கரிகால் வளவனிடம் ஆற்றுப்படுத்துவதாக முடத்தாமக் கண்ணியார் கற்பனை செய்து பாடிய பாடல், இது.  இதில் பொருநர் ஓர் ஊர் விழாவில் தம் கலைத்திறனைக் காட்டிய பின் வேறூர் செல்லல், பாலையாழ் வருணனை, பாலைப் பண்ணைக் கேட்டு ஆறலைக் கள்ளர் கொடுஞ்செயல் துறந்து அருளுடையர் ஆதல், விறலியின் உபசரித்தல், பரிசளித்தல், காவிரி வளம் முதலியன இடம் பெறுகின்றன.

    பாலையாழ் மணப்பெண்ணை அலங்கரித்த கோலத்தைக் கொண்டது என்பதை,

மணம் கமழ் மாதரை மண்ணியன்ன 

அணங்கு மெய்நின்ற அமைவரு காட்சி'

என்று வருணிக்கிறது பாடல். 

    பரிசளித்த கரிகாலன் பொருநர் விடை பெற்றுச் செல்லும்போது "காலின் ஏழ் அடிப்பின் சென்று" வழி அனுப்புகிறான்.  சோழ வளநாடு சோறுடைத்து இக்காட்சி,

சாலி நெல்லின் சிறை கொள்வேலி 

ஆயிரம் விளையுட்டாக 

காவிரி புரக்கும் நாடு கிழவோனே 

என்று பாடலின் இறுதி அடிகளில் இடம் பெறுகிறது.

கரிகாலன் புகழைக் கூறும் மற்றொரு பாடல், 'பட்டினப்பாலை'.

3. சிறுபாண் ஆற்றுப்படை 

    ஓய்மானாட்டு நல்லியக் கோடனிடத்தில் பரிசு பெற்ற பாணன் ஒருவன், பரிசு பெறாத பாணனை அவனிடத்தில் ஆற்றுப்படுத்துவதாய்ப் பாடப் பெற்ற பாடலே சிறுபாண் ஆற்றுப்படை, இதை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.  இப்பாடல் 269 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா.

    இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பாணர்கள் பல்வகையினர்.  இப்பாட்டில் வரும் பாணன் யாழ்ப்பாணன்.  "இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ" யவனாக இருந்தான் எனப் பாடலில் வருவதால், இப்பாணன் சிறுபாணன் எனப்பட்டான்.  எனவே, இது சிறுபாண் ஆற்றுப்படை எனப் பெயர் பெற்றது.  பெரும்பாண் ஆற்றுப்படை 500 அடிகளைக் கொண்ட பாடல்! அதை நோக்கி, 269 அடிகள் கொண்ட இப்பாடல் சிறுபாண் ஆற்றுப்படை எனப் பட்டது எனவும் கூறுவர் .

    நத்தத்தனார், இடைக்கழி நாட்டில் உள்ள நல்லூரில் வாழ்ந்தவர்.  சென்னையருகே செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தை அடுத்த கடற்கரைப் பகுதியே இடைக்கழி நாடு.  இங்கே நல்லூர் இன்றும் இதே பெயரில் திகழ்கிறது.  திண்டிவனம் வட்டத்தின் பெரும் பகுதியும், வட்டத்தின் தென்கோடி பகுதியும் சேர்ந்த நிலப் பரப்பே ஓய்மானாடு.  இன்றைய திண்டிவனமே , இதன் தலைநகரமான கிடங்கில் ஆகும்.

    இந்நல்லியக் கோடனை நன்நாகனார் என்னும் மற்றொரு புலவரும் பாடியுள்ளார்.

    சிறுபாண் ஆற்றுப்படையில், விறலியின்  வருணனை, மூவேந்தர் தலைநகரச் சிறப்பு, கடையெழு வள்ளல்களின் கொடைப் பெருமை,மாவிலங்கை,எயில் பட்டினம் ஆகிய நகரங்களின் இயல்பு, நல்லியக் கோடனின் வீரமும் கொடையும்,நெய்தல் முல்லை மருதநிலம் - நிலத்தார் தன்மைகள், நல்லியக் கோடன் பாணனை உபசரித்துப் பரிசளிக்கும் பாங்கு முதலிய செய்திகள் உள்ளன.  நல்லியக் கோடனைக் காணும் பாணர்கள்,

'முதுவோர்க்கு முகிழ்ந்த கையினை எனவும் 

இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் 

ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் 

தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் 

    அவன் நல்லியல்புகளைச் சொல்லிச் சுகம் காண்கின்றார்கள்.  பாரி,ஓரி ,காரி முதலிய ஏழு வள்ளல்களின் கொடைச் சிறப்பு முழுவதையும் நல்லியக் கோடன் ஒருவனே தங்கினான்.  இதை,

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் 

விரிகடல் வேலி வியலகம் வினங்க

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் 

என்று பாடும் நத்தத்தனாரின் இப்பாடல், ஏழு புலவரின் கவிச் சிறப்பை நத்தத்தனார் ஒருவரே ஏற்றியிருந்தார் என்று நம்மைப் போற்றச் செய்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...