முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை

     


     குறிஞ்சித்திணைப் பொருளைக் கூறுவதே குறிஞ்சிப் பாட்டு.  இது 261 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு இதைப் பாடினார் கபிலர் எனும் குறிப்புத் தருகிறார் நச்சினார்க்கினியர், அகப்பொருளே தமிழின் மிகப் பெருஞ்சிறப்பு எனக்கருதியும், ஏறத்தாழ நூறுவகைப் பூக்களின் வேறு வேறு பெயர்களை உரைக்கும் தமிழின் வளத்தையும் தமிழரின் பயிர் நூல் நலத்தையும் கூற ஏற்றது குறிஞ்சித் திணை எனக் கருதியும் கபிலர், இப்பாடலைப் பாடி ஆரிய அரசன் தமிழாற்றலை அறியச் செய்தார் போலும்!  கபிலர், குறிஞ்சி பாடுவதில் வல்லவர்.  அகத்தொகை நூல்களிலும்,பதிற்றுப் பத்து, புறநானூறு ஆகிய புறத்தொகை நூல்களிலும் இவர்தம் புலமை விளங்கும் பாடல்கள் உள்ளன.

    தலைவியின் சீரிய அழகு சிதைவதற்குரிய காரணம் களவு என அறியாத செவிலித் தாய்க்குத் தோழி உண்மையை உணர்த்தி அறத்தொடு நிற்றலைத் தெரிவிப்பது இப்பாட்டு.  தோழி அறத்தொடு நிற்றல் ஏழு வகையின என்பர், தொல்காப்பியர்.  அவற்றுள் ஆறு வகையினை உள்ளடக்கியது கபிலரின் பாட்டு.  இதை 'பெருங்குறிஞ்சி' என்று நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் பாராட்டினர் .

    இக்குறிஞ்சிப் பாட்டினுள், தலைவி தினை காத்தல், அருவி நீராடல், தலைவியும் தலைவனும் காணல் ,காதல் பூணல், குறிஞ்சியின் கொள்ளை அழகு, குறிஞ்சி நிலத்தில் குவித்த மலர்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறல் முதலியன இடம் பெறுகின்றன.

    தலைவியும் தோழியும் மலையில் பூத்த மலர்களைப் பறித்துப் பாறையில் குவித்ததைக் கூறும் பகுதியில் கபிலரின் குறிஞ்சி பாடும் வல்லமை அறிகிறோம். ஒண் செங்காந்தட் பூ முதல் மலை எருக்கம் பூவரை மொத்தம் 99 மலர்களின் பெயர்களைக் கூறும் பா மணக்கிறது!

    தலைவனும் தலைவியும் புணரும் குறிஞ்சிப் பாட்டில், தமிழும் தாவர இயலும் புணர்ந்து நிற்பது உணர்ந்து உவகையுறத் தக்கது.

10. பட்டினப் பாலை 

    பட்டினப் பாலையை  இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.  இவர் பெரும்பாண் ஆற்றுப்படையையும் இயற்றியவர்.  இப்பாடல் 301 அடிகளைக் கொண்டது.  இவற்றுள் ஆசிரியப்பா அடிகள் 138; வஞ்சிப்பா அடிகள் 163. எனவே இப்பாட்டை ஆசிரிய அடி விரவி வந்த வஞ்சிப்பா என்றும் வஞ்சியடி விரவிவந்த ஆசிரியப்பா என்றும் இரு வகையாகக் கூறுவர் .  இளம்பூரணர் இதை வஞ்சிப்பா என்றே கூறியுள்ளார்.  இதை 'வஞ்சி நெடும் பாட்டு' எனவும் சிலர் வழங்கியுள்ளனர்.

    இது அகத் திணையான பாலைத் திணை பற்றிய பாடல்.

    'தலைவியைப் பொருள் வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்' என்பது இதன் துறை, குறிஞ்சிப்பாட்டு என வருவது போல இதுவும் பாலைப் பாட்டு என்று திணைப் பெயர் ஏற்கத் தக்கது.

பட்டினம் என்பது காவிரிப்பூம் பட்டினத்தைக் குறிக்கும்.

'முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் 
வார்இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய 
வாரேன் வாழிய நெஞ்சே..........
..............................................................................
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் 
திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய 
வேலினும் வெய்ய கானம்; அவன் 
கோலினும் தண்ணிய தடமென்தோளே!

    "நெஞ்சே, காவிரிப் பூம்பட்டினமே பெறுவதாக இருப்பினும் திருமாவளவனின் செங்கோலைக் காட்டிலும் குளிர்ந்த என் தலைவியின் தோளைப் பிரிந்து, வளவன் பகைவர் மீது ஓங்கிய வேலைக் காட்டிலும் வெம்மை மிகுந்த காட்டு வழியில் வரமாட்டேன்"  என்று கூறுகிறான் தலைவன்.  இவ்வாறு கூறும் போக்கில் பாலையைக் காட்டிலும் பட்டினத்துச் சிறப்பையே மிகுதியாகப் பேசுவதால், இப்பாட்டு 'பட்டினப்பாலை' என அழைக்கப் பெற்றது.

    பாட்டுக்குக் கிளவித் தலைவன், பாட்டுடைத் தலைவன் என்று தலைவர் இருவர் உள்ளனர். "வாரேன்" என்று கூறுபவன் கிளவித் தலைவன்.  அகப்பொருள் மரபின்படி இவன் பெயர் குறிக்கப் பெறவில்லை.  பாட்டுடைத் தலைவன் கரிகாலன் என்பது, "சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர்  உருத்திரங்கண்ணனார் பாடியது" என்னும் நச்சினார்க்கினியர் உரையால் அறிகிறோம்.  பாடப் பட்டோரின் பட்டியல் தரும் வெண்பாவும், "பொருநாறு பாலை கரிகால்" என்று கூறிப் பட்டினப் பாலையும் கரிகாலனுக்கே உரியது என்பதை உறுதிசெய்கிறது.

    இப்பாட்டினுள், சோழநாடு - காவிரிப் பூம்பட்டினம் - காவிரி ஆறு ஆகியவற்றின் சிறப்பு, கடல் வாணிகம் , வாணிகச் சிறப்பு, கரிகாலனின் வீரம், வெற்றி முதலியன விளக்கம் பெறுகின்றன.

கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை 
பொற்கால் புதல்வர் புரவி இன்றி உருட்டும் 
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்.

என்பது வணிகர்களின் செல்வ வளத்தை விளக்குகிறது.

கொள்வ தூஉம் மிகைகொளாது,
கொடுப்பதூஉம் குறைகொடாது 
பல்பண்டம் பகர்ந்து வீசும்.

என்பது வணிகர்களின் வாய்மையினையும் தூய்மையினையும் சொல்லும்.

'மலை அகழ்க்குவனே கடல்தூர்க் குவனே !
வான் வீழ்க்குவனே; வளிமாற்றுவனே.

என்பது திருமாவளவனின் வீரத்தைக் கூறும்.

    சுருங்கச் சொன்னால், பட்டினப்பாலை ஒரு பைந்தமிழ்ச் சோலை.

    இதன் சிறப்பை உணர்ந்தே கரிகாலன், இதை இயற்றிய புலவருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு கொடுத்தான்.  இதை,

'தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன் 
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப் 
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்'

    என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.  கரிகாலன் கொடை அதோடு நிற்கவில்லை, பட்டினப்பாலை அரங்கேறிய பதினாறு கால் மண்டபத்தையும் கரிகாலன் கவிஞர்க்கே பரிசாகக் கொடுத்து விட்டான்.  அம்மண்டபம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே நின்று நிலைத்தது.

    பட்டினப் பாலைக்கு மறைமலை அடிகளும், ரா. இராகவையங்காரும் ஆராய்ச்சி உரை நூல்களை எழுதியுள்ளனர்.

    பத்துப் பாட்டுகள் யாவும் முத்துப் பாட்டுகளே.  பழந்தமிழரின் அகப்பொருள், புறப்பொருள் என்னும் இரு பெருங்கூறுகளை இனிய முறையில் எடுத்துக் கூறும் இப்பாட்டுகள் பத்தையும் பயில்வோர் இலக்கிய இன்பத்தை முழுமையாக அடைய முடியும்; அனுபவிக்க முடியும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...