நக்கீரர் இயற்றிய அகப்பொருள் பாடல் ' நெடுநல் வாடை'. இது 188 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா. இப்பாடலைப் பாடிய நக்கீரர் சங்க காலத்துச் சான்றோர் என்பது உறுதி.
தலைவனைப் பிரிந்து வருத்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழி (யுகம்) போல நெடியதாகி வருத்தும் வாடைக் காலம்; பகை ஒருபுறம் இருக்க, மறுபுறம் தலைவியோடு போகம் நுகர்வதை வெறுத்த தலைவன் பகைவன் இருக்கும் வேற்று நாட்டுக்குச் சென்று வெற்றி என்னும் நல்ல விளைவைப் பெறக் காரணமான வாடை-இவ்வாறு நெடுநல் வாடை என்பதற்கு நச்சினார்க் கினியர் காரணம் கூறுவர் . பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தது போன்று அல்லலுறும் அன்றிலைப் போன்ற தலைவிக்குப் பிரிந்த ஒரு பொழுதும் ஓர் ஊழியாய் நீளல் இயற்கையே. துன்பம், எதிர்பார்ப்பு, ஐயம் முதலிய உணர்வுகள் நிறைந்த ஒரு நாளுக்கும் 24 மணி நேரந்தான்: எனினும் அது 240 மணி நேரம் போலத் தோன்றுவதை அனைவரும் எப்பொழுதேனும் அனுபவித்தே இருப்பர். நேச நாடுகள் ஜெர்மனியில் படை வீரரை இறக்கிய இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய நாளைக் குறித்த நாவலுக்கு The Longest Day எனப் பெயரிட்ட பொருத்தம் இங்கே எண்ணி இன்புறத்தக்கது. தலைவிக்குத் துன்பமும் தலைவனுக்கு இன்பமும் கொடுத்த ஒரு வாடைக்காலத்தைப் பற்றிய பாடல் இது. இதன் பெயர்க் காரணத்தை, "வாடை துன்பத்தைக் குறிப்பது; நல்ல அன்பை உணர்த்துவது நெடு அழியாமையைத் தெரிவிப்பது. அழியாது நீளும் நல்வாடை" என்று கூறுவார் திரு.வி.கல்யாண சுந்தரனார்.
பிரிந்து வருந்துவது பாலைத்திணைக்கு உரிப்பொருள். தலைவியைப் பிரிந்து வினைமேல் சென்ற வேந்தன் பகைவர் நாட்டில் தங்கி இருப்பது வாகைத் திணைப் பொருளாம். காலத்தை காவலன் வென்றதும் வாகையே. பாலைக்குப் புறன் வாகை என்பது தொல்காப்பியம். வணங்காத பகைவரை நாடிச் செல்வதால் வஞ்சித்திணைப் பொருளும் இப்பாட்டில் உள்ளது எனினும் பிரிவே தலையாயதாகிய இப்பாடல் பாலை என்னும் அகத்திணைக்கு உரித்தாகிறது.
தலைவனைப் பிரிந்த தலைவியின் துயர் தொலையத் தலைவன் பகை வென்று விரைந்து மீண்டு வருமாறு வேண்டிக் கொற்றவையை வழிபடுவதாக அமைந்த இந்த அகத்திணைப் பாடலை பாலைத்திணைப் பாடலைப் புறத்திணையைச் சார்ந்தது என்று கூறுவர் . அகப்பாட்டில் தலைவன், தலைவி, பெயர்களைக் கூறக் கூடாது. படை வீரர்களை அரசன் பார்க்கச் செல்லும்போது முன்னோனாகிய படைத் தலைவன் அரசனுடன் சென்று புண்பட்ட வீரரைக் காட்டுகிறான். அப்படைத் தலைவன் கையிலிருந்த வேலில் வேப்பம்பூ மாலை சுற்றியிருந்தது. இதை "வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு " என்று நக்கீரர் குறித்தார். படைத் தலைவனின் வேலில் வேம்பு இருப்பதால் அது பாண்டியர் படை என்றும், அரசன் பாண்டியன் என்றும் தெரிந்து கொள்ளலாம். தலைவன் பாண்டியன் எனத் தெரிந்ததால், நக்கீரர் காலத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனே எனக் கொள்கிறோம். ஆனால் வேறு தக்க சான்றில்லை. பத்துப் பாட்டுள் பாடப்பட்ட தலைவர்களின் பட்டியல் தரும் வெண்பாவும் "பொருநாறு , பாலை கரிகால்" என்று கரிகாலனுக்கு உரிய நூல்கள் இரண்டையும் குறிப்பிடும். ஆனால் "நெடுஞ்செழியன் காஞ்சி" என்று மதுரைக் காஞ்சி ஒன்றை மட்டுமே பாண்டியனுக்கு உரியதாகக் கூறுகிறது; நெடுநல் வாடையைக் கூறவில்லை.
இப்பாட்டில், வாடைக் காலத்தே மக்கள் -விலங்கு-பறவைகள் குளிரால் வருந்துதல், அரிசி இருக்கும் அரண்மனை அமைப்பு, கோபுர வாயிலின் தன்மை, அரசி துயிலும் கட்டிலின் சிறப்பு புனையா ஓவியம் போல அரசி இருத்தல், பாசறையில் அரசன் புண்பட்ட வீரரைக் காணல் , கொற்றவை வழிபாடு முதலியன விளக்கப் படுகின்றன.
நெடுநல் வாடை காட்டும் காட்சிகள் யாவும் அன்புக் காட்சிகள்; படிக்க அகம் சிலிர்க்கும் காட்சிகள், இப்பாடலின் சிறப்பை நன்குணர்ந்த திரு.வி.க. "ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித் துளியினிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருகிறது. அதுபோலச் சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம், இவற்றின் திங்கள் முதலியன காட்சி தருகின்றன" என்றும், "நெடுநல் வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச் சுரங்கம்" என்றும் பாராட்டுகிறார்.
நெடுநல் வாடையின் சிறப்புக்களை விளக்கி, கு.கோதண்டபாணி பிள்ளை அவர்கள், "நெடுநல் வாடை -பாநலன் " என்னும் ஆய்வு நூலையும் செ .வேங்கடராமச் செட்டியார் "புனையா ஓவியம்" என்னும் அரிய நூலையும் இயற்றி உள்ளனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக