முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருண்ட காலம்

     


     சங்க காலம் என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலம்.  சிலர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் என்பர்.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் இருண்ட காலம் ஆகும்.  இது தமிழ்நாட்டு வரலாற்றிலும் இருண்ட காலம். தமிழிலக்கிய வரலாற்றிலும் இருண்ட காலம்.  இதே காலப்பகுதியைச் 'சங்கம் மருவிய காலம்' என்றும் குறிப்பிடுவார்கள்.

இருண்ட காலத்து இலக்கியங்கள் 

    தமிழ்நாடு முழுவதையும் அடிமைப்படுத்திய களப்பிரர் காலமாகிய இருண்ட காலத்தில் சங்க இலக்கியம் போன்ற - சிலம்பு, மேகலை போன்ற முழுநிலா உதயமாகவில்லை.  எனினும் செறிந்த இருளின் நடுவே கண்சிமிட்டும் விண்மீன்கள் போலச் சில நீதி நூல்கள் தோன்றின.  இவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.  அவற்றுள் நீதி நூல் அல்லாத வேறு நூல் சிலவும் உண்டு.

    புறச் சமயங்களின் ஆதிக்கத்துக்கு நடுவே அகச் சமயத்துக்கு ஆக்கம் தேடும் ஊக்கமும் உணர்வும் பெற்ற சிவனடியார் சிலர் செந்தமிழ்ப் பக்திப் பனுவல்கள் செய்தனர்.  திருமூலரின் திருமந்திரமும், காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு ஆகிய நான்கு நூல்களும் புறச் சமய இருட்டை விரட்டும் அகச் சமய அகல்விளக்குகளாகச் சுடர் விட்டன.  பௌத்தரும் சமணரும் புறச் சமயத்தாராயினும் இன்றமிழ் பயின்று பல அரிய தமிழ் நூல்களை இக்காலத்தே இயற்றினர் .  வச்சிரநந்தி என்னும் சமண முனிவர் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றும் நிறுவித் தமிழ் வளர்த்தார்.  அச்சங்கத்தில் பல நூல்கள் அரங்கேறின.

    இருண்ட காலத்து நூல்களில் இலக்கியச் சுவை மிகுந்தது முத்தொள்ளாயிரம்.  இது மூவேந்தரின் சிறப்புரைக்கும் நூல்.

    இருண்ட காலத்திலும் சில இலக்கியங்கள் இயற்றி இலக்கிய வரலாற்றில் பெரும் இடைவெளி தோன்றாமல் காத்த புலவர்களைப் போற்றுதல் நம் கடன்.

    இனி, மேல்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் தொகைகள் தோன்றியதை ஆராய்ந்து, அதன் பின்னர் இருண்ட காலத்தே எழுந்த நூல்களை ஆய்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...