பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பின்வரும் வெண்பா கூறுகிறது.
'நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவேகைந்நிலையும் அம்கீழ்க் கணக்கு '
இந்த வெண்பா எந்த வரிசையில் அவற்றைச் சொல்கிறதோ அதே வரிசையில் கூறுவது மரபு. அவ்வரிசை முறை இது. 1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இனியவை நாற்பது, 4. இன்ன நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமொழி ஐம்பது, 9. ஐந்திணை எழுபது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. திருக்குறள் (முப்பால்), 12. திரிகடும், 13. ஆசாரக் கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை அல்லது இன்னிலை .
இவற்றுள் நீதி நூல்கள் 11, அகப்பொருள் நூல்கள் 6, புறப்பொருள் நூல் 1. இதே வரிசை முறையில் இவற்றைக் காண்போம்.
நீதிநூல்கள்
1. திருக்குறள்
நீதி நூல்கள் காலத்தால் முற்பட்டது திருக்குறள். இதனை, சங்க காலத்தது என்றும், சங்க காலத்துக்கும் முற்பட்டது என்றும் அறிஞர் கூறுவர். எஸ். வையாபுரி பிள்ளை குறளின் காலத்தை ஏழாம் நூற்றாண்டாக இருக்க முயன்றதை எதிர்த்துத் திருக்குறள் சங்க காலத்துக்கு முந்தியதே அன்றி பிந்தியது அன்று என்பதை, நாவலர் சோமசுந்தர பாரதியாரின் 'திருவள்ளுவர்', பி.எஸ். சுப்பிரமணிய ஆச்சாரியாரின் "திருக்குறள் காலமும்" டாக்டர் மா. இராசமாணிக்கனாரின், 'திருவள்ளுவர் காலம்' முதலிய பல்வேறு நூல்கள் தக்க சான்றுகள் காட்டி நிறுவியுள்ளன .
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் மயிலையில் பிறந்தார். வாசுகியை மணந்தார். மதுரையில் குறளை அரங்கேற்றினார். என்பன போன்ற செவிவழிச் செய்திக் கதைகள் மிகப் பல உள . அறிஞர் இவற்றை ஒப்புவதில்லை. திருவள்ளுவர் என்பது குடிப் பெயராக அல்லது தொழிற் சார்ந்த பெயராக இருத்தல் வேண்டும். அரிய குறளை அளித்தவரின் உண்மைப் பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. திருவள்ளுவரின் வேறு பெயர்களாக நாயனார், தேவர், முதற் பாவலர், தெய்வப் புலவர், செந்நாப் போதார், பெருநாவலர் எனப் பலவற்றை வழங்குவர். சிறப்புப் பெயருடன் இயற்பெயரைப் பின்னே இணைத்து வழங்குவதற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் முதலிய உரையாசிரியர் 'தெய்வப் புலவன் திருவள்ளுவன்' எனக் குறித்துள்ளனர். எனவே திருவள்ளுவன் என்பதையே அவர்கள் இயற் பெயராகக் கருதினார்கள் என்பதும் சிறப்புப் பெயர்கள் பலவற்றுள்ளும் 'தெய்வப் புலவன்' என்பதையே சிறந்ததாகக் கருதினார்கள் என்பதும் தெளிவாகின்றன.
குறள் வெண்பாவால் இயன்ற முதல்நூல் திருக்குறளே. முதலடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் கொண்ட குறுகிய பாடலில் பெருகிய பொருளைக் கொடுப்பது திருக்குறள். இந்நூலைத் 'திருவள்ளுவப் பயன்' என்று நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர் குறிப்பிடுகிறார்கள். சில ஏட்டுச் சுவடிகளிலும் இதன் பெயர் 'திருவள்ளுவப் பயன்' என்று காணப்படுகிறது. சில ஏடுகளில் 'திருவள்ளுவர்' என்பதே நூலின் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. உத்தரவேதம், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை என வேறு பெயர்களும் இந்நூலுக்கு உண்டு.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளை உடையது . ஒவ்வொரு பாலும் பல இயல்களாகப் பிரிக்கப்பட்டு, பாயிரம் உட்பட மொத்தம் ஒன்பது இயல்கள் உள்ளன. ஒவ்வோர் இயலும் அதிகாரத்துக்குப் பத்துப் பாக்கள் வீதம் மொத்தம் 133 அதிகாரங்களுக்கு 1330 அருங்குறல்கள் பெற்ற நூல் இது.
திருக்குறள் எச்சமயத்தாரும் ஏற்கும் பொதுமறை. இதனை இயற்றிய திருவள்ளுவர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பதை உறுதியாக உரைத்தல் இயலாது. எனினும் இவரைச் சமணர் எனக் கூறுவதற்குச் சில சான்றுகள் உள்ளன. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள 'மலர்மிசை ஏகினான்', 'எண்குணத்தான்' முதலிய தொடர்கள் சமணர் சார்புடையவை என்பர். 'சீவக சிந்தாமணி' உரையில் திருக்குறளை மேற்கோளாகக் காட்டிய நச்சினார்க்கினியர், 'என்றார் தேவரும்' 'தேவரும் கூறினார்' (பாடல் 1927-28) என்று குறிப்பிடுகிறார். சான்றோரைத் தேவர் என அழைப்பது பல சமயத்தாருக்கும் இயல்பு; எனினும் சமணரிடையே தேவர் என்பது பெரு வழக்காய்த் திகழ்கிறது. திருத்தக்க தேவர், தோலாமொழித் தேவர் முதலிய பெயர்களைக் காண்க. அன்றியும் நீலகேசிக்கு உரை வழங்கிய சமய திவாகர வாமன முனிவர், தம் உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி, 'இது எம் ஒத்து ஆதலின்' என்று குறிப்பிடுவது உணரத்தக்கது. திருக்குறளைச் சமணர் 'தம் வேதம்' எனக் கொண்டாடுவதை அறிகிறோம். எனவே, பிற சமயத்தார் எவரினும் சமண சமயத்தவர்க்கே 'வள்ளுவர் எம் சமயத்தவர்' எனக் கூற அதிக உரிமை இருப்பதை உணரலாம்.
சங்க காலத்துச் சான்றோர்கள் கள்ளுண்டு களித்தமையும் , புலால் உண்டு மகிழ்ந்ததையும் காண்கிறோம். வள்ளுவர் இரண்டையும் 'கள்ளுண்ணாமை' 'புலால் மறுத்தல்' என்னும் அதிகாரங்களில் கண்டிக்கிறார். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி எனும் பெயர்கள் சங்ககால வேந்தர்கள் வேள்வியை விழைந்தமையை விளக்கி நிற்கின்றன. வள்ளுவரோ,
'அவிசோரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று '
என்று கூறுகிறார். பரத்தையர் பிரிவுக்கு மருதம் என்னும் ஒரு தனித்திணையினை உருவாக்கினர், சங்கத் தமிழர். வள்ளுவர், அதனை முற்றிலும் மறுத்து, 'வரைவின் மகளிர்' என்னும் அதிகாரம் வகுக்கிறார். இப்புரட்சிப் பண்புகளும் சமணக் கொள்கைகளோடு பொருந்தியவையே.
திருக்குறளின் பெருமையைக் கூறும், 'திருவள்ளுவ மாலை' என்னும் நூல் ஒன்று உண்டு. 'கபிலர்' பரணர் உட்பட சங்கப் புலவர்கள் ஐம்பத்து எழுவர், வேண்பாயாப்பில் குறளின் பெருமையை விளக்கும் நூல் இது. பிற்காலத்தே யாரோ ஒரு புலவர் இதனை இயற்றி முற்காலப் புலவர் பெயர்களை இணைத்திருக்க வேண்டும். ஒரு நூலைப் பாராட்டி மற்றொரு நூல் இச்சிறப்பினை பெறவில்லை. திருவள்ளுவ மாலை திருக்குறளின் பலவகைச் சிறப்புகளைத் தெளிவாகக் கூறுகிறது.
'எல்லாப் பொருளும் இதன்பால் உள ; இதன்பால்இல்லாத எப்பொருளும் இல்லையால் '
அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்'
குறள் எல்லார்க்கும் எல்லாக் காலத்துக்கும் பொது. இதனைச் சுத்தானந்த பாரதியார்,
'எம்மதமும் எவ்வினமும் எந்நாளும்சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்'
எனக் குறிக்கிறார்.
திருக்குறளின் பெரிதினும் பெரிதான பெருமையை, டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் விளக்கிக் கூறினார்:
"With sure strokes, the 'Kural' draws the ideal of simple ethical humanity. On the most varied questions concerning the conduct of man to himself and to the world, its utterances characterised by nobility and good sense. There hardly exists in the literature of the world a collection of mazimam in which we find so much lofty wisdom."
"உலக இலக்கியங்களில் திருக்குறளைப் போலச் சிறந்த அறம் உரைக்கும் நூல் வேறு இல்லை" என்பது குறளைச் சுவைத்த சுவைட்சரின் அனுபவவுரை.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப்படும்ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்பொன்றாது நிற்பது ஒன்று இல்ஈன்றான் பசிகாண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினைகண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள
இவை திருக்குறளின் சில பாக்கள். கற்கண்டு சுவைத்த இடமெலாம் இனிப்பதுபோல, கற்பூரம் தொட்ட இடமெல்லாம் மணப்பது போல, திருக்குறள் இனிக்கும்; மணக்கும். பொற்கட்டியின் எந்த அணுவும் மதிப்புப் பெற்றுள்ளது போலாக் குறளின் எந்த வரியும், தொடரும் மதிப்புள்ளதாகும்.
குறளின் பெருமையைக் கருதியே இதற்குப் பதின்மர் உரை வகுத்தனர்.
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,பரிமேலழகர், பருதி , திருமலையர்,மல்லர் , பரிப்பெருமாள், காளிங்கர் , வள்ளுவர் நூற்குஎல்லை உரைசெய்தார் இவர்.
இவ்வெண்பா கூறும் பதின்மரில், மணக்குடவர்,காளிங்கர் , பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் செய்த உரைகளே இப்போது கிடைக்கின்றன. இந்த ஐந்து உரைகளை 'திருக்குறள் உரைவளம்' என்னும் பெயரில் தருமபுர ஆதினம் வெளியிட்டது. இதைப்போலவே 'திருக்குறள் உரைக்கொத்து' என்று பலவுரைகளின் தொகுப்பு நூலைத் திருப்பனந்தாள் காசி மடம் வெளியிட்டது.
குறள் உரைகள் அனைத்திலும் சிறந்தது, பரிமேலழகர் உரையே. இவர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டினர். பிற்காலத்தே பெருமக்கள் பலர் குறளுக்கு உரை வகுத்தனர். கா. அப்பாதுரையின் 'முப்பால் ஒளி' ஒரு விரிந்தவுரை. அண்மையில் திருக்குறள் முனுசாமி அவர்களும் ஒரு பேருரை வழங்கியுள்ளார். சிற்றுரைகளில் டாக்டர் மு.வ. வின் 'திருக்குறள் தெளிவுரை', பால்வண்ணனாரின் 'திருக்குறள் சிறப்புரை' முதலியன குறிப்பிடத்தக்கன.

0 கருத்துகள்