முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரைக் காஞ்சி ,முல்லைப்பாட்டு

 புறப்பொருளில் காஞ்சித் திணை 

6. மதுரைக் காஞ்சி 



    தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடு பேறு உணர்த்துவதற்காக பல்வேறு நிலையாமைகளை அறிவுறுத்தி மாங்குடி மருதனார் பாடியது, மதுரைக்காஞ்சி.  இது 782 அடிகள் கொண்டது.  பத்துப்பாட்டில் இதுவே மிகப் பெரிய பாடல் எனவே, 'பெருகு வளமதுரைக் காஞ்சி' என்று சிறப்பிக்கப் பட்டது.  இது வஞ்சி அடிகள் விரவி வந்த ஆசிரியப்பாவால் அமைந்தது.

    'மதுரைக் காஞ்சி' என்பதற்கு மதுரை நகரின்கண் மன்னனுக்கு உணர்த்திய காஞ்சித்திணை என்பது பொருள்.  முல்லைத்திணை பற்றிய பாடல் முல்லைப்பாட்டு என வழங்கப்பட்டது போல இதுவும் திணையால் பெயர் பெற்று 'காஞ்சிப்பாட்டு' என வழங்கத்தக்கது.  புறத்திணையின் பெயரால் அமைந்தது, பத்துப்பாட்டில் இது ஒன்றே.

    காஞ்சி என்பது புறத்திணைகளில் ஒன்று 'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே' என்பது தொல்காப்பியம்.

பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும் 
நில்லா உலகம் புல்லிய நெறித்தே 

என்ற  இதன் இலக்கணத்தைத் கூறுகிறார்.  தொல்காப்பியர், 'தனக்கு நிகரற்ற வீடுபேறு பெறும் பொருட்டு அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் அதற்கு உட்பகுதியாகிய உயிரும் உடலும் செல்வமும் இளமையும் இன்ன பிறவும் நிலைத்து நிற்காத உலக வாழ்வும் புன்னெறியை உடையது' என்று சான்றோர் சாற்றுவதே காஞ்சித் திணையாகும் .  இத் தொல்காப்பிய இலக்கணத்துக்கு ஏற்பவே மாங்குடி மருதனார் இப்பாடல் பாடியுள்ளார்.  பிற்காலத்தே தோன்றிய பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை முதலிய நூல்கள், 'உட்காது (அஞ்சாது) எதிர் ஊன்றல் காஞ்சி' என்று வஞ்சி வேந்தனை எதிர்த்து நிற்றலே காஞ்சி என்று கூறும்.  இது மதுரைக் காஞ்சிக்குப் பொருந்தாது.

    பாண்டியன் நெடுஞ்செழியன் சிறந்த பாவலன்.  இவன் கூறிய 'நகுதக்கனரே ' என்னும் வஞ்சினப் பாடல் புறநானூற்றில் உள்ளது.  அதில் 'ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலை இயப் பலர்ப் புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை " எனக் கூறியிருப்பது மருதனாருக்கு மன்னன் அளித்த மதிப்பை வெளிப்படுத்தும்.  மருதனார் இயற்றிய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன.

    இப்பாட்டில் பாண்டியன் படையெடுப்பு, போர் நிகழ்ச்சிகள், பகை நாடுகளைப் பாழ் செய்தல், வேந்தர் எழுவரை வெற்றி கொள்ளல், பாண்டியனின் கொடை முதலிய சிறப்புகள், பாண்டி நாட்டின் ஐந்திணை வளம், மதுரையின் மாட்சி, மன்னனின் ஆட்சி ஆகியன கூறப்பட்டுள்ளன. 

அகப் பொருள் பாட்டுகள் 

7. முல்லைப் பாட்டு 

    முல்லைத் திணையைப் பற்றிய பாடலே முல்லைப் பாட்டு.  வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வரும்வரை தலைவி பிரிவுத் துயரை ஆற்றியிருத்தலை உரிப்பொருளாகக் கொண்ட அகத்திணையே , முல்லைத் திணையாகும் . இப்பாடலைப் பாடியவர் நப்பூதனார்.  இவர் காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகன் ஆவார்.  முல்லைப் பாட்டு 103 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா.  பத்துப் பாட்டில் மிகச் சிறிய பாட்டு இதுவே.

    இம் முல்லைப் பாட்டின் தலைவன் இன்னான் என்று கூறுதல் இயலாது.

'மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் 
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் 

என்னும் தொல்காப்பிய நூற்பாவின் படி, அகப்பாட்டில் வரும் மாந்தரின் பெயரைக் குறிப்பிடுதல் மரபன்று.  நப்பூதனாரும் தலைவன் தலைவி பெயரைச் சுட்டாது விட்டார்.  எனினும் முல்லைப் பாட்டின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று சிலர் கருதுவர்.  ஆயினும் இதற்குத் தக்க ஆதாரம் இல்லை.

    தலைவன் வரும் வரை ஆற்றியிருக்கும் தலைவி, அவன் சொன்ன கார்காலம் வந்ததும் ஆற்றாளாகி அல்லல் அடைகிறாள்.  அதை மாற்றப் பெருமுது பெண்டிர் முயல்கின்றனர்.  தலைவி அவர் சொல் கேட்டு ஆற்றியிருக்க, வினை முடித்த தலைவன் வந்து சேருகிறான் என்று கூறுகிறது முல்லைப் பாட்டு.  இதில் தலைவன் வருவான் என்பதை அறிய விரிச்சி கேட்டல் (சகுனம் பார்த்தல்), தலைவனது பாசறை அமைப்பு, பள்ளியறை, போரிட்டுத் துன்புற்ற படைகளை அரசன் பார்வையிடுதல், தலைவியின் துயரம்.  கார்காலத்தே மீளும் தலைவன் வழியிலே காணும் காட்சிகள் முதலியன இடம் பெறுகின்றன.

    முல்லைத் திணைக்கு உரிய பெரும் பொழுது, கார்காலம், சிறுபொழுது, மாலைக்காலம், இவ்விரு பொழுதுகளையும் பொலிவுறக் கூறும் பகுதியுடன் முல்லைப்  பாட்டுத் தொடங்குகிறது.

    மறைமலை அடிகள் முல்லைப் பாட்டிற்கு ஓர் அரிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...