முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பரிபாடல்

   



  "எட்டுத் தொகையுள் அகப்பொருள், புறப்பொருள் என்னும் இரு பொருளையும் கூறும் ஒரே நூல், பரிபாடல்.  பாட்டு வகையில் ஒன்றே பரிபாடல்.  "இது தொகை நிலை வகையால் பா என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி எல்லாப் பாவிற்கும் பொதுவாக நிற்றற்கு உரியதாய், இன்பப் பொருளைப் பற்றிக் கூறும்.  இது, இருபதடிச் சிறுமையும் 400 அடிப் பெருமையும் பெற்று வரும்"என்று பரிபாடலை விளக்குகிறது, தொல்காப்பியம்.  தொல்காப்பியருக்குப் பின்னே புறப்பொருளும் பரிபாடலில் பாடப்பெற்றது.  அத்தகைய பாடல்கள் இந்நூலில் உள்ளன.  உறுதிப் பொருள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவை பற்றி இப்பாடல் வரும் என்பர் பேராசிரியர்.  இது தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலைப் பற்றி வரும் என்பர் நச்சினார்க்கினியர்.  மலையும் யாறும் ஊரும் பரிபாடலில் வருணிக்கப்படும் என்பர், இளம்பூரணர். 

    பரிபாடலில்  70 பாடல்கள் உள்ளன என்று இலக்கண உரைகள் கூறுகின்றன.

    திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்(து)

    ஒரு பாட்டு; காடு காட்கு ஒன்று; மருவினிய 

    வையை இருபத்தாறு; மாமதுரை நான்கு என்ப 

    செய்ய பரிபாடல் திறம்.

    என்னும் வெண்பா, திருமால்-8, செவ்வேள் -31, காடு காள்  (காளி)-1, வையை-26, மதுரை-4 எனும் முறையில் பாடல்கள் உள்ளன என்பதைக் கூறும்.

    எழுபது பாடல்களில் இப்போது நமக்குக் கிடைப்பவை 22 பாடல்களே.  இவை திருமாலுக்கு 6, முருகனுக்கு 8, வையைக்கு 9 பாடலாக அமைந்துள்ளன.  புறத்திரட்டுத் தொகையிலிருந்து இரு பரிபாடல்கள் முழுமையாய்க் கிடைத்துள்ளன.  இவற்றைச் சேர்த்து, இப்போது கிடைப்பவை மொத்தம் 24 பாடல்களாகும்.

    இந்நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை.  ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 1.துறை, 2.இயற்றிய புலவர் பெயர், 3.இசை வகுத்தார் பெயர், 4. பண்ணின் பெயர் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.  எடுத்துக்காட்டாக, இரண்டாவது பாடலில் இவை முறையே 1. கடவுள் வாழ்த்து, 2. கீரந்தையார் பாட்டு, 3. நன்னாகர் இசை, 4. பண்ணுப் பாலையாழ் என்று குறிக்கப்பட்டுள்ளன. 22 பாடல்களில் கடவுள் வாழ்த்துப் பொருளில் 14 பாடல்களும், வையை பற்றி எட்டுப் பாடல்களும் உள்ளன.  22 பாடல்களைப் பாடிய புலவர் தொகை 13, இசை வகுத்தோர் தொகை 10.

     பரிபாடலக்குப் பரிமேலழகர் உரை வகுத்துள்ளார்.  இவ்வுரையுடன் பரிபாடலை முதன் முதலில் 1918-இல் டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பித்துள்ளார்.  பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பின்னர் ஓர் உரை வழங்கியுள்ளார்.  இவர் வேறு சில தொகை நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

     பரிபாடலின் மூன்றாம் பாடலில் திருமாலின் பெருமையைக் கடுவன் இளவெயினனார் தெளிவுற உரைக்கிறார்:

    'தீயினுள் தென்றல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;

    வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களும் அளியும் நீ;

    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ'

    நான்காம் பாடலில் இதே புலவர் செவ்வேள் பெருமையை உரைக்கிறார், முருகனிடம் 

    'யாம் இரப்பவை 

    பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் 

    அருளும் அன்பும் அறனும் மூன்றும்'

என அடியவர்கள் வேண்டும் பகுதி, முருகன் பெருமையைப் போலவே அடியவர்களின் பெருமையினைப் பேசும் பகுதியாகும்.

    வையையாற்றையும் மதுரை நகரையும், திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை, மலை ஆகிய பாண்டி நாட்டுத் திருத்தலங்களையும் பற்றிய செய்திகளே இந் நூலில் உள்ளன.  எனவே பரிபாடல் பாண்டியனின் புகழ் பாடும் தொகை நூல் எனக் கூறலாம்.

    தமிழரின் இருவிழி போன்ற அகம், புறம் என்னும் இரு பொருளின் கூடலே , பரிபாடல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...