முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதிற்றுப்பத்து

      


எட்டுத்தொகையில் புறப்பொருள் கூறும் மற்றொரு நூல் பதிற்றுப்பத்து.  புறநானூறு மூவேந்தரையும், வேறுள குறுநில மன்னரையும் பாடிய பாக்களைப் பெற்றது.  பதிற்றுப்பத்து சேர வேந்தர்களை மட்டுமே சிறப்பிக்கும் நூல்.  பத்துச் சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப்  புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாக்களைக் கொண்டது 10 X 10 என்னும் எண்ணின் தொகையே பதிற்றுப்பத்து எனும் பெயர்.  இதிலுள்ள பத்துகள், முதல் பத்து, இரண்டாம் பத்து, என்று எண்ணால் பெயர் பெற்றுள்ளன.  இவை யாவும் பாடாண் திணையில் அமைந்தவை.  எட்டுத் தொகையில் ஒரு திணைப் பாடல்களையே கொண்ட ஒரே நூல் இதுவே.  ஐங்குறு நூற்றில் தொண்டிப் பத்துப் போல இதன் நான்காம் பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது.

    பதிற்றுப்பத்தைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை.  தொகுப்பாசிரியர் சிறந்த முறையில் தொகுத்துள்ளார் என்பது தெரிகிறது.  ஏனெனில் பிற தொகை நூல்களில் இல்லாத பாடல் தலைப்பு (பெயர்) இத்தொகையில் உள்ளது. பாடலில் வரும் பொருள் நயமிக்க ஒரு தொடரைப் பாடலின் பெயராகத் தொகுப்பாசிரியர் சூட்டியிருக்கிறார், 'மறம் வீங்குபல் புகழ்' 'சான்றோர் மெய்மறை' 'ஏறாஏணி' 'நோய்தபு நோன் தொடை' ஆகியன, பாடல் பெயர்களில் சில.  ஒவ்வொரு பாடலும், துறை, வண்ணம், தூக்கு, பெயர் (தலைப்பு) ஆகிய நான்கு பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பத்துப் பாடலின் முடிவிலும் ஒரு பதிகம் உள்ளது. இது பிற்காலத்து மெய்க்கீர்த்தியைப் போலப் பாடப்பட்ட அரசின் புகழைப் பேசுகிறது; பதிகத்தைத் தொடர்ந்து பத்துப் பாடல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.  அதன் பின்னர் பாடிய புலவர் பெற்ற  பரிசும், பரிசளித்த அரசன் ஆட்சி   செய்த ஆண்டும் குறிக்கப்பெற்றுள்ளன.  நூல் தொகுக்கப்பட்ட காலத்துக்குப் பின்னே பாடிச் சேர்க்கப்பட்டவையே இப்பதிகங்களும், அவற்றின் கீழுள்ள குறிப்பும் எனக் கருதுவர்.

    பதிற்றுப்பத்து நூலிலே முதல் பத்தும் இறுதிப்  பத்தும் கிடைக்கவில்லை.

     இரண்டாம் பத்து: இமயவர்மன்  நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது.  பாடிய புலவர்க்கு ஐந்நூறு ஊர் அளித்து, முப்பது எட்டு ஆண்டு தென்னாட்டு வருவாயில் ஒரு பாகமும் கொடுத்தான் சேரலாதன்.  இவன் 58 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

    மூன்றாம் பத்து: நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியது.  புலவர் விரும்பியவாறு பத்து வேள்விகளை நடத்திப் புலவரும் அவர் மனைவியும் சுவர்க்கம் புகச் செய்தான் அரசன்.  இவன் 25 ஆண்டுகள் ஆண்டான்.

    நான்காம் பத்து: நெடுஞ்சேரலாதனின் மகன் களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. பாடிய புலவர்க்கு  நாற்பது நூறாயிரம் பொன்  ஒருங்கு கொடுத்துத் தன்  நாட்டின் ஒருபகுதியையும் கொடுத்தான், கொற்றவன். இச்சேரன் 25 ஆண்டுகாலம் அரசோச்சினான்.

     ஐந்தாம் பத்து: நெடுஞ்சேரலாதனின் மற்றொரு மகனான செங்குட்டுவனைப் பரணர் பாடியது.  பாடிய பாவலர்க்கு உம்பற்காட்டு  வருவாயையும், தன் மகன் குட்டுவன் சேரனையும் வழங்கினான் வேந்தன்.  இவன் 55 ஆண்டுகள் அரசுக் கட்டிலில் வீற்றிருந்தான்.

    ஆறாம் பத்து: நெடுஞ்சேரலாதனின் இன்னொரு மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது.  பதிற்றுப்பத்தில் இடம்பெறும் ஒரே பெண்பாற் புலவர், இவரே. இவருக்கு 'கலன் அணிக' என்று நூறாயிரம் காணம் (பொற்காசு)  கொடுத்துத் தன் பக்கத்தே கொண்டான் சேரலாதன்.  இவன் 88 ஆண்டுகள் செங்கோல் செலுத்தினான்.

    ஏழாம் பத்து: செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.  பாடிய கபிலருக்கு நூறாயிரம் காணம் பரிசளித்து 'நன்றா' என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம்  அவருக்கே உரிமையாக்கினான் சேரன்.  இவன் 22 ஆண்டுகள் அரியாசனத்தே இருந்தான்.

    எட்டாம் பத்து: செல்வக் கடுங்கோ வாழியாதனின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடியது.  புலவருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் கொடுத்து, தன் அரசாட்சியையும் அவர்க்கே அளித்தான் சேரன்.  புலவர் பொன்னைக் கொண்டு அரசை அவனுக்கே அளித்து அவன் அமைச்சராய் வீற்றிருந்தார்.  இரும்பொறை 17 ஆண்டுகள் ஆண்டான்.

    ஒன்பதாம் பத்து: பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.  புலவருக்கு அச்சேரன் முப்பத்தோராயிரம் பொன் கொடுத்தான்.  புலவருக்குத் தெரியாமல் ஓர் ஊரையும், மனையையும் உரிமையாக்கி அம்மனை நிறைய செல்வமும் வழங்கினான்.  இவ்வரசன் 16 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான்.

    பதிற்றுப் பத்துக்கு ஒரு பழைய உரை உண்டு.  இவ்வுரையுடன் இதனை முதன் முதலில் 1904 இல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தார்.  ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை பின்பு முழுவுரை வழங்கினார்.  ஈழத்துப் புலவர் சு. அருளம்பலனார் 1960இல் மிகச் சீரிய ஆராய்ச்சியுரை இயற்றினார்.

    பதிற்றுப்பத்து நூலின் பெரும்பகுதி சேரர் வீரத்தையும் கொடையையுமே விளக்குகிறது.  பகை நாடுகளை வெல்லும் சேரர் அங்கே கைக்கொள்ளும் செல்வத்தைக் கொடையாக வாரி வழங்கினர்;

    பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்ற 

    அரிய என்னாது ஓம்பாது வீசி 

    கலம் செலச் சுரத்தல் அல்லது கனவினும் 

    களைக என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,

    ஆடுநடை அண்ணல்   

என்று செங்குட்டுவனின் கொடைச் சிறப்பைக் கூறுகிறார் பரணர்.

    இமயவர்மன் நெடுஞ்சேரலாதனின் சிறப்புகளைக் குமட்டூர் கண்ணனார் பாராட்டும் பாடலின் ஒருபகுதி பின் வருமாறு:

    நிலம், நீர், வளி, விசும்பு என்ற நான்கின் 

    அளப்பு அரியையே!

    நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல் 

    ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையே!

    ..................................................................

    அக் குரன் அனைய கைவண்மையையே!

    அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் 

    போர்பீடு அழித்த செருப்புகல் முன்பே 

    கூற்று வெகுண்டு வரினும் மாற்று ஆற்றலையே 

    எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து    

    நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை!

    (அக்குரன் - இடையெழு வள்ளல்களில் ஒருவன்! சான்றோர்-வீரர்: மெய்ம்மறை -கவசம் போன்றவனே)

    பதிற்றுப்பத்து, சேரர் திறத்தைச் சீரிய முறையில் கூறுகிறது.  இச்சேரர் வாழ்ந்த நாடு இன்று செந்தமிழ் வழக்கற்றுக் கேரளமாகத் திகழ்வது தமிழரின் உள்ளத்தை வருத்தும் என்பது உறுதி.  பல இலக்கண இலக்கியத்தைத் தமிழர் இழந்ததுபோல, தமிழ் வழங்கிய நாடு நகரங்கள் பலவற்றையும் இழந்ததை எண்ணும்போது 'நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!'என்று அரற்றவே தோன்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...