திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள சௌந்தரராகவாப் பெருமாள் பவனி வரும்போது கண்டு காதல் கொண்ட தலைவி கிள்ளையைத் தூது விட்டதாக அமைந்த நூலே 'அழகர் கிள்ளை விடு தூது'. இதனைப் பாடியவர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இந்த நூலில் கிள்ளையின் பெருமையைக் கூறும் பகுதி நெஞ்சையள்ளும் சுவைமிக்கது.
பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால்பிடிப்பார் கோடிப்பேர் கண்டாயே - மால்பிடித்தோர்
கைச்சிலை வேலால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்.
வண்டுவிடு தூது
திருவாடுதுறை ஆதினத்தைச் சார்ந்த கச்சியப்ப முனிவர் இயற்றியது, 'வண்டு விடு தூது'. இது காஞ்சி புரத்திலுள்ள ஆனந்தபுரத்திலுள்ள ஆனந்த ருத்திரேசர் மீது காதல் கொண்ட தலைவி வண்டினைத் தூது விடுவதைக் கூறுகின்றது.
ஆனந்தருத்திரேசர் உலா வருவதால் விளையும் நன்மைகளை விளக்கும் பின்வரும் பகுதியைக் கொண்டே நூலின் முழுச் சிறப்பை உய்த்துணரலாம்.
வானுலகம் மேன்மைபெற மண்ணுலகம் செம்மாப்ப
ஈனஇடர் முற்றும் இரிந்தோட - ஆன
அறம் தழைப்ப அன்பர் அகம்தழைப்ப அன்பின்
திறம் தழைப்பச் செல்வம் தழைப்ப - மறந்தழைத்த
வேற்கணார் உள்ளம் விடை கொள்ள நல்லுலா
ஏற்குமா கொள்ள இனிதுறீஇ .
0 கருத்துகள்