Looking For Anything Specific?

நந்திக் கலம்பகம்

     கலம்பக நூல்களில் மிகப் பழமையான நந்திக் கலம்பகம், ஒரு வரலாற்று நூலாகத் திகழும் தனிச் சிறப்புப் பெற்றது.  தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என வழங்கப் பெறும் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் இது.  மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 825 முதல் 850 வரை ஆண்டவன்.

    நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் இன்னார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.  நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் நால்வரில் ஒருவன், இவனைக் கொல்வதற்காகவே வசை வைத்து இந்நூலைப் பாடினான் என்றும், பாடியவனின் பெயர் 'காடவன்' என்பதாக இருக்கலாம் என்றும் கருதுவர்.

    நந்திக் கலம்பகத்தின் பாடல் ஒன்றைத் தற்செயலாய்க் கேட்ட நந்திவர்மன், நூல் முழுவதையும் கேட்க விரும்பினான்.  நூல் முழுவதையும் கேட்டால், அவன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழ்ப் பாடல் கேட்கும் தணியாத ஆவலுக்குத் தன்னையே பலியாக, கொடுக்க முன்வந்தான்.  நூல் முழுவதையும் கேட்ட மன்னன் இறந்தான்.  தமிழுக்காக தமிழ்ப் பாடலுக்காகத் தரணியாளும் மன்னன் தன் உயிரையே உவந்தளித்தான் என்பது உலக வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத நிகழ்ச்சியாகும்.

    நந்திக் கலம்பகம் கேட்டு அரசன் இறந்தான் என்பது, "நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்" என்னும் சோமேசர் முதுமொழி வெண்பாவால் உறுதி பெறுகின்றது.  "கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காலம் விட்ட தெள்ளாறை நந்தி" என்னும் தொண்டை மண்டலச் சதகப் பாடலும் இதை வலியுறுத்தும்.  இதற்கேற்ப நூலுக்குள்ளும் வசைக் குறிப்புகள் பல இருக்கின்றன.

    அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் தொண்ணூறு பாடல்கள் கொண்டதாக அமைய வேண்டும் என்பது விதி. இதில் 144 பாடல்கள் உள்ளன.  நந்திவர்மனைப் பற்றிய சில தனிப் பாடல்களைப் பிற்காலத்தே நூலில் நுழைத்திருக்கலாம் என்னும் ஐயம் எழுகின்றது.

    சொற்சுவையும் பொருட் சுவையும் மிக்க இக் கலம்பத்தின் எல்லாப் பாடல்களும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்பவையே .

    நந்திக் கலம்பகத்தின் நகைச் சுவையை அறிந்து மகிழாத புலவர் இல்லை.  தலைவன் பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பினான்.  தான் தனது இல்லத்துக்குத் திரும்புமுன் பாணன் ஒருவனைத் தன் தூதுவனாகத் தலைவியிடம் அனுப்பினான்.  பாணம் உரை கேட்ட தலைவி அவனை இழித்துரைக்க விரும்பிக் கூறிய கூற்றாக வருவது இப்பாடல்.

ஈட்டுப் புகழ்நந்தி பாண! நீ எங்கையர் தம் 

வீட்டிலிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்

பேயென்றாள் அன்னை; பிறர்நரியென் றார்; தோழி 

நாயென்றாள்; நீ என்றேன் நான்.

    "பாண, நீ பரத்தையர்  வீட்டிலிருந்து பாடியதைக் கேட்டு என் தாய், பேயின் அழுகை என்றாள் .  பிறர் நரியின் ஊளை என்றார் ; தோழி நாய் குரைக்கின்றது என்றாள் ; உன்னையறிந்த நான், 'அது உன் குரல் ' என்றேன்" என்றாள் .

    கலம்பகத்தைக் கேட்டு உயிர்விட்டான் நந்திவர்மன்.  அவன் இறந்ததாகக் கொண்டு 'கையறு நிலை' யாகப் பாடிய பாடல், நந்தியின் சிறப்பையும், புலவரின் கவித் திறத்தையும்  ஒரு சேர விளக்கும் உயரிய பாடலாகும்.

வானுறு மதியை அடைந்ததுன் வதனம் 

    மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி 

கானுறு புலியை அடைந்ததுன் வீரம் 

    கற்பகம் அடைந்ததுன் கரங்கள் 

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் 

    செந்தழல் அடைந்ததுன் தேகம் 

நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் 

    நந்தியே நந்தயா பரனே 

இதுவே நந்திக் கலம்பகத்தின் இறுதிப் பாடல்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்