Looking For Anything Specific?

சிற்றிலக்கியங்கள்

 V . நாயக்கர் காலம் 

கி.பி. 1350 - 1750

சிற்றிலக்கியங்கள் 

    சங்க காலத்தில் குறுகிய அடிகளைப் பெற்ற தனிப் பாடல்களும், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாட்டுகளும், பொருள் தொடர்நிலையாக வரும் காப்பியங்களும் பெற்றுச் சிறந்திருந்தது, தமிழ்.  தனிப் பாடல்களின் தொகுதிகள், எட்டுத் தொகை நூல்கள்.  பாட்டுகள் பத்தின் தொகுப்பே, பத்துப்பாட்டு.  காப்பியங்களாக உருவானவையே சிலம்பும் மேகலையும்.

    தமிழ் மொழியின், இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர், ஏற்கனவே இருந்த இலக்கியங்களைக் கண்டு அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுடன் அமையாது, எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய இலக்கியங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையில்,

'விருந்தே தானும் 
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'.

என்று கூறினார்.

     யாப்பு என்னும் சொல், யாக்கப்படுவது, பிணைக்கப்படுவது என்னும் பொருளுடையது.  செய்யுள் என்னும் பொருளுடையது.  செய்யுள் என்னும் சொல்லின் பொருளும் இதுவே.  எழுத்து, சொல் முதலிய உறுப்புகளால் அகத்திணை, புறத்திணைக்கு இடமாக இயற்றப்படுதலின் இது யாப்பு எனப்பட்டது.  யாப்பு என்னும் சொல் தனிச் செய்யுளையும், தொடர்நிலைச் செய்யுளையும் குறிக்கும்.  இளங்கோ அடிகள், 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்ற இடத்து, செய்யுள் என்பது காப்பியத்தைக் குறித்தது.  அது போலவே, "புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்னும் தொடரில் யாப்பு என்னும் சொல் ஆக்கப்படும் இலக்கியத்தைக் குறிக்கும்.  பிற்காலத்தே எழுந்த சிற்றிலக்கியம், தொல்காப்பியம் கூறும் "விருந்து" என்பதனுள் அடங்கும்.

    சிற்றிலக்கியத்தை வடமொழியில் 'பிரபந்தம்' எனக் கூறுவர் .  'பிரபந்தம்' என்னும் சொல்லுக்கு, நன்கு கட்டப்பட்டது என்பது பொருள். செய்யுள், யாப்பு போன்றதே 'பிரபந்தம்' என்னும் சொல் வழக்கு.

    பெருங்காப்பியத்தில் உலா, தூது, குறம்  முதலியன அதன் உறுப்புகளாக இடம் பெறும் .  அவ்வுறுப்புகளின் வளர்ச்சியாகவே, சிற்றிலக்கியங்கள் எழுந்துள்ளன.  இவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் வளரத் தொடங்கின.  இவற்றின் இலக்கணத்தைப் பிற்காலத்தே தோன்றிய பன்னிரு பாட்டியல், வச்சணந்தி மாலை என வழங்கும் வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் முதலிய இலக்கண நூல்கள் விரிந்துரைக்கின்றன.

    'தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள்' என்னும் வழக்கு உள்ளது.  மேலே குறிப்பிட்ட இலக்கண நூல்களில் எதுவும் 96 வகைச் சிற்றிலக்கியங்களைக் கூறவில்லை.  இவ்விலக்கண நூல்கள் கூறாத சிற்றிலக்கியங்களும் பின்னே எழுந்துள்ளன.  அண்மைக் காலத்தில் 96 வகைச் சிற்றிலக்கியங்களின் பெயர்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுவர்.

 1. பிள்ளைக் கவி - இது பிள்ளைத் தமிழ் 

 2. பரணி - போர்க்களத்தின் வெற்றியைக் கூறுவது. 

3. கலம்பகம் - பதினெட்டு வகை உறுப்புகளோடு பல்வகைப் பாக்கள் கலந்து இயற்றப்படும் நூல்.

4.  அகப்பொருட் கோவை - களவொழுக்கத்தினையும் கற்பொழுக்கத்தினையும் கூறும் நானூறு பாக்கள் கொண்டது.

5. ஐந்திணைச் செய்யுள் - புணர்தல் முதலிய ஐந்து உரிப் பொருள்கள் விளங்கக் குறிஞ்சி முதலிய ஐந்திணையில் கூறுவது .

6. வருக்கக் கோவை - அகரம் முதலாகிய எழுத்து வருக்க மொழிக்கு முதலாம் எழுத்தாகிக் காரிகைத் துறைப் பாட்டாகப் பாடப்படுவது.

7. மும்மணிக் கோவை - ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை, ஆகிய மூன்று பாக்களும் முறையே முப்பது பாடல்களாக, அந்தாதி தொகை பெறப் பாடுவது.

8. அங்கமாலை - ஆண் அல்லது பெண்ணின் உறுப்புகளை வெண்பா அல்லது வெளிவிருத்தத்தில் , பாதாதி கேசம், கேசாதி பாதம் என்னும் முறை தவறாமல் தொடர்புறப் பாடுவது.

9. அட்டமங்கலம் - ஆசிரிய விருத்தம் எட்டினால் அந்தாதித் தொடையில் கடவுள் காக்குமாறு பாடுவது. 

10. அநுராக மாலை - தலைவன் , தலைவியைக் கனவில் கண்டு இன்புற்றதைப் பாங்கனுக்கு நேரிசை கலி வெண்பாவில் கூறுவது.

11.  இரட்டை மணிமாலை - வெண்பாவும், கலித்துறையுமாக மொத்தம் இருபது பாடல்களால் இயற்றுவது.

 12. இணை மணிமாலை - வெண்பாவும் அகவலும் , அல்லது வெண்பாவும், கலித்துறையும் வர நூறு பாடல்களை அந்தாதித் தொடையில் பாடுவது.

13. நவமணிமாலை - வெண்பா முதலிய ஒன்பது வகைப் பாட்டால் அந்தாதித் தொடையில் பாடுவது.

14. நான்மணிமாலை - வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் வர அந்தாதித் தொடையில் 40 பாடல் இயற்றுவது.

15. நாம மாலை - அகவலடி , கலியடி மயங்கி வர வஞ்சிப் பாவில் ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது.

16. பலசந்த மாலை - ஒரு சந்தத்தில் 10 செய்யுள் வரப் பத்து சந்தத்தில் நூறு பாடல் பாடுவது.

17. பன்மணி மாலை - ஒரு போகு , அம்மானை, ஊசல் நீங்க மற்றக் கலம்பக உறுப்புகள் பெற்று வருவது.  இதற்குக் கலம்பக மாலை என்றும் பெயர்.

18. மணி மாலை - வெண்பா இருபதும் , கலித்துறை நாற்பதும் விரவிவரத் தொடுப்பது.

19. புகழ்ச்சி மாலை - வஞ்சிப் பாவால் மாதர்களின் சிறப்பைப் பாடுவது.

20. பெருமகிழ்ச்சி மாலை - தலைவியின் அழகு , குணம், ஆக்கம் கூறுவது.

21. வருக்க மாலை - மொழிக்கு முதலில் வரும் வருக்க எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பாடல் பாடுவது.

22. மெய்கீர்த்தி மாலை - குல முறையில் செய்த கீர்த்தி கூறுவது.

23.  காப்பு மாலை - கடவுள் காக்குமாறு 3 அல்லது 5 அல்லது 7 செய்யுளால் பாடுவது.

24. வேனில் மாலை - இளவேனிலையும், முதுவேனிலையும் சிறப்பித்துப் பாடுவது.

25. வசந்த மாலை  தென்றலைச் சிறப்பிப்பது .

26. தாரகை மாலை - அருந்ததி போன்ற கற்புடையவளின் சிறப்பைச் செப்புவது.

27. உற்பத மாலை - திருமாலின் பத்து அவதாரம் பாடுவது.

28. தானை மாலை - முன்னே செல்லும் கொடிப் படையைப் பாடுவது.

29. மும்மணி மாலை - வெண்பா, கலித்துறை, அகவலால் முப்பது பாடல் பாடுவது.

30. தண்டக மாலை - வெண்பா, கலித்துறை, அகவலால் முப்பது பாடல் பாடுவது.

    31.வீரவெட்சி மாலை, 32.வெற்றிக் கரந்தை மஞ்சரி, 33.போர்க்கெழு வஞ்சி, 34.வரலாற்று வஞ்சி, 35.செருக்கள வஞ்சி, 36.காஞ்சி மாலை , 37.நொச்சி மாலை , 38.உழிஞை மாலை , 39.தும்பை மாலை, 40.வாகை மாலை, 41.வாதோரண மஞ்சரி, 42.எண் செய்யுள், 43.தொகை நிலைச் செய்யுள், 44.ஒலியல் அந்தாதி, 45.பதிற்றந்தாதி, 46.நூற்றந்தாதி, 47.உலா, 48.உலாமடல், 49.வளமடல், 50.ஒருபா ஒரு பஃது, 51.இருபா இரு பஃது , 52.ஆற்றுப்படை, 53.கண்படை நிலை , 54.துயிலெடை நிலை, 55.பெயரின்னிசை , 56.ஊரின்னிசை , 57.பெயர் நேரிசை, 58.ஊர் நேரிசை, 59.ஊர் வெண்பா, 60.விளக்கு நிலை.

    61.புறநிலை, 62.கடை நிலை , 63.கையறு நிலை, 64.தசாங்கப்பத்து, 65.தசாங்கத் தயல், 66.அரசன் விருத்தம், 67.நயனப்பத்து, 68.பயோதரப் பத்து, 69.பாதாதிகேசம், 70.அலங்காரப் பஞ்சகம், 72.கைக்கிளை, 73.மங்கல வள்ளை , 74.தூது, 75.நாற்பது, 76.குழமகன், 77.தாண்டகம், 78.பதிகம், 79.சதகம்.

    80. செவியறிவுறூஉ, 81. வாயுறை வாழ்த்து, 82. புறநிலை வாழ்த்து, 83.பவனிக் காதல், 84.குறத்திப் பாட்டு, 85.உழத்திப் பாட்டு, 86.ஊசல், 87.எழுகூற்றிருக்கை, 88.கடிகை வெண்பா, 89.சின்னப் பூ

    90. விருத்த விலக்கணம், 91. சாதகம், 92.முதுகாஞ்சி, 93.இயன் மொழி வாழ்த்து, 94.பெருமங்கலம், 95.பெருங்காப்பியம், 96.சிறு காப்பியம்.

    வீரமாமுனிவர் தாம் இயற்றிய சதுரகராதியுள் 'பிரபந்தம் 96 வகை' எனக் கூறி மேற்கண்டவற்றைக் குறிப்பார்.  இவற்றுள் கூறப்படாத சிற்றிலக்கியங்கள் சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.  எனினும் பொதுவாக 96 வகைப் பிரபந்தங்கள் என இவற்றைக் கொள்க.வீரமாமுனிவர், 'பிரபந்தம் செய்யப்படுவது எனக் கொண்டு பெருங்காப்பியத்தையும், சிறு காப்பித்தத்தையும் இத்தொகையுள் சேர்த்துள்ளார்.

    பொதுவாகச் சிற்றிலக்கியங்கள் தனிப் பாடல்களின் தொகையாகவும், தொடர் நிலைச் செய்யுளாகவும் அமைகின்றன.  கலம்பகம், பிள்ளைத்தமிழ்,முதலியன தனித் தனிப் பாடல்களின் தொகுதி.  உலா, தூது, முதலியன தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த சிற்றிலக்கியங்கள்.  அந்தாதி, கலம்பகம், ஆகியன சொற்றொடர் நிலையாக (அந்தம் ஆதியாக) அமைந்துள்ளன. பிள்ளைத்தமிழ், தூது, உலா போன்றவை அந்தாதியாக அமையவில்லை .

    ஆண்டவன், அரசன், வள்ளல், குரு  முதலியோரின் சிறப்புகளை எடுத்துச் சொல்வதே பொதுவாகச் சிற்றிலக்கியங்களின் நோக்கம். உரைநடையே ஆட்சி செய்யும் தற்காலத்தில் கூடக் காந்தி அம்மானை, அண்ணாக் கோவை, பெரியார் பிள்ளைத்தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் முதலியன தோன்றியவாறுள்ளன.  இதுவே சிற்றிலக்கியத்தின் பெருஞ் சிறப்பினைப் பறைசாற்றும்.

    அடுத்துவரும் பகுதிகளில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம் ஆகிய சிற்றிலக்கியங்களை விரிவாகக் காண்போம்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்