தான் போற்றும் தெய்வத்தையோ அரசனையோ, சான்றோரையோ குழந்தையாக்கிப் பார்த்துப் பரவசத்துடன் பாடப்படும் சிற்றிலக்கியம், "பிள்ளைத் தமிழ்". இதனைப் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக்கலி என்றும் வழங்குவது உண்டு.
குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒரு பருவமாகப் பகுத்துக் கொள்வது மரபு. எனவே மூன்று, ஐந்து , ஏழு, ஒன்பது, பதினொன்று, பதிமூன்று, பதினைந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று எனப் பத்துப் பருவங்கள் அமையும்.
அவ்வப் பருவத்தில் குழந்தைக்கு இயல்பாக உள்ள நிலை, செயல், தன்மை முதலியவற்றை அமைத்துப் பாடுவர் . இப்பிள்ளைத் தமிழ் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும்.
காப்புப் பருவம், தாலப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப்பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப் பருவம், என்னும் பத்தும் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன, இதை
சாற்றறிய காப்ப தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே ஆய்த்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.
என்று 'வெண்பாப் பாட்டியல்' எனும் இலக்கண நூல் இயம்பும்.
பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் மேற்சொன்னவற்றுள் முதல் ஏழு பருவங்கள் பொருந்தும்; இறுதியிலுள்ள சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகிய மூன்று பருவங்களை நீக்கி, அவற்றுக்குப் பதில், கழங்குப் பருவம், அம்மானைப் பருவம், ஊசற் பருவம் என்னும் மூன்றையும் கொள்வர்.
இறுதி மூன்று பருவங்களுக்கு 17, 19, 21 திங்கள் எனக் கொள்வதற்குப் பதிலாக மூன்றாம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, ஏழாம் ஆண்டு என்று ஆண்டு முறையைக் கொள்வது உண்டு. சிற்றில் சிதைத்தல், சிறுபறை கொட்டல் முதலிய செயல்களுக்கு 21 திங்கள் என்னும் பருவ முறை பொருந்தவில்லை. 3, 5, 7 என்னும் ஆண்டு முறையே பொருந்துதல் காண்க.
பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் ஆசிரிய விருத்தப்பாவில் அமையும்.
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ், திருநாவுக்கரசர் பிள்ளைத் தமிழ், சுந்தரமூர்த்தி பிள்ளைத் தமிழ், மாணிக்க வாசகர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன பிள்ளைத் தமிழ் நூல்களில் புகழ்பெற்ற சிலவாகும். தற்காலத்தே முகியித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ், பாரதிதாசன் பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் முதலிய பிள்ளைத் தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன.
0 கருத்துகள்