Looking For Anything Specific?

மூவருலா

     விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் சோழன் உலா ஆகிய மூன்றும் மூவருலா என வழங்கப் பெறும் மூன்றையும் இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.

    கலம்பகங்களில் நந்திக் கலம்பகம் தமிழக வரலாறு கூறும் நூலாகத் திகழ்வது போல, உலா நூல்களில் மூவருலா வரலாற்று நூலாக அமைந்துள்ளது.

    விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் அவையிலும் வீற்றிருந்த பேறு பெற்றவர், ஒட்டக்கூத்தர்.  இதனால் சோழர் வரலாற்றைத் துல்லியமாக அறியும் வாய்ப்புக் கிடைத்தது.  தாமறிந்த வரலாற்றை இம்மூன்று உலாக்களிலும் தொடுத்து, சோழர் வரலாற்றுக் களஞ்சியமாக இவற்றை மாற்றிவிட்டார்.

    பாட்டுடைத் தலைவர்கள் இவர்க்குத் தக்கபடி பரிசளித்தனர்.  இராசராச சோழன் உலாவை அரங்கேற்றிய போது , ஒவ்வொரு கண்ணிக்கும் அவ்வரசன் ஆயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.  மற்றொரு வேந்தன் அரிசிலாற்றங்கரையிலிருந்த ஓர் ஊரை இவருக்குப் பரிசாக அளித்தான்.  அவ்வூர் கூத்தனூர் என்று இவர் பெயரால் வழங்கி வருகின்றது.

     மூவருலாவின் வரலாற்றுச் சிறப்பினைப் பின்வரும் கண்ணிகளால் அறியலாம்.

விசயாலயச் சோழன் 

'சீறுஞ் செருவில் திருமார்பில் தொண்ணூறும் 
ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்'.

முதலாம் இராசராசன் 

'ஏறிப் பகலொன்றில் எச்சுரமும் போய் உதகை 
நூறித்தன் தூதனை நோக்கினான்."

முதலாம் இராசேந்திரன் 

'கங்கா நதியும் கடாரமும் கைவரச் 
சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன் "

    மேற்கண்ட மூன்று கண்ணிகளும் குலோத்துங்க சோழனின் உலாவில் வருபவை.  பேதைப் பருவம் என்பது காதலை அறியாச் சிறு பருவம்.  அந்தப் போதைச் சிறுமியைக் கவி மேதை ஒட்டக்கூத்தர் ஓவியமாய்த் தீட்டிக் காட்டுவதைக் காண்போம்.

பேதை 

'வந்த பிறந்து வளரும் இளந்திங்கள்  
கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து பைந்தழைத் 
தோகை தொடா மஞ்ஞை சூடுண்டுதோற்றவன் மேல் 
வாகை புனைய வளர் கரும்பு கோகுலத்தின் 
பிள்ளை இள அன்னப்பேடை பிறந்தணிய 
கிள்ளை பவளம் கிளைத்த கிளை."

(விக்கிரம சோழன் உலா )

    கவிச் சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தரின் புகழ் இம் மூவருலாவில் உலா வரக் காணலாம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்