Looking For Anything Specific?

தமிழ் விடு தூது

    தன் உள்ளத்துக்குகந்த ஒரு பொருளையே தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுப்பது சிறப்புடைத்து.  தமிழினும் உள்ளத்துகந்த பொருள் எது? அதனால் தமிழ் வளர்க்கும் மதுரையில் குடியிருக்கும்  சொக்கநாதர் மீது மிக்க காதல் கொண்ட காரிகை, தன்  காதல் நோயை அவரிடம் தக்கபடி உரைத்து  தமிழைத் தூது விட்டாள்.  அதுவே 'தமிழ் விடு தூது'.

    'தமிழ் விடு தூது' என்னும் சிறந்த தூது நூலை இயற்றியவர் இன்னார் என்பது தெரியவில்லை.  தமிழையே உணவாய், உணர்வாய், உயிராய்க் கொண்ட தண்டமிழ்ப் பக்தர் - தாய் மொழிப் பித்தர் இந்தக் கவிஞர் என்பது தெரிகின்றது. செந்தமிழும் சைவமும் இரு விழிகளாய்க் கொண்டவர் இந்த கவிஞர் என்பதும் புரிகின்றது.  இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்று கூற முடிகிறதேயன்றி, இவர் காலத்தை உறுதியாகக் கூற இயலவில்லை.

    தலைவி தமிழின் பெருமையைக் கூறும் பகுதி தமிழ் மொழியின் வரலாற்றையே உள்ளடக்கியதாகவுள்ளது.

    முதலில் சிவபிரான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன் ஆகிய நால்வருக்கும் நூல் வணக்கம் தெரிவிக்கின்றது.  பின் சம்பந்தர் முதலிய நால்வரையும், பின்னர் அகத்தியர், தொல்காப்பியர் முதலிய புலவர் பெருமக்களையும் குறிப்பிடுகின்றது.  தொடர்ந்து "எல்லாரும் நீயாய் இருந்தமையால்" என்று கூறுகின்றது.  எனவே,கவிஞர் தமிழைத் தெய்வமாகவும் செந்தமிழ்ப் புலவராகவும் கண்டு வணங்கும் சிறப்புப் புலப்படுகின்றது.


'அரியா சனம் உனக்கே யானால் உனக்குச் 

சரியாரும் உண்டோ தமிழே 

*****

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான 

முத்திக் கனியே என் முத்தமிழே புத்திக்குள் 

உண்ணப்படும் தேனே.

*****

முந்தியொளி யால்விளக்கும் முச்சுடர் என்பார் உனைப்போல் 

வந்தென் மனத்திருளை மாற்றுமோ?

    இவ்வாறு தமிழின் புகழைத் தலைவி உரைப்பதைப் படித்தாலும், நினைத்தாலும், தமிழன்பரின் உடல் சிலிர்க்கும், உயிர்சிலிர்க்கும்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் 

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் .

என்னும் புகழ் வாய்ந்த வரிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளவையே.

    'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்', 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்பன போன்ற தமிழ் சிறப்புக் கூறும் பாரதிதாசன் பாடல்களுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தவை இந்த வரிகள்.






 




கருத்துரையிடுக

0 கருத்துகள்