Looking For Anything Specific?

கலிங்கத்துப் பரணி

     பரணி இலக்கியங்களில் மிகவும் பழமையானது 'கலிங்கத்துப் பரணி'.  இதுவே பரணி நூல்களில் தலை சிறந்தது என்று, அன்று முதல் இன்று வரை போற்றப்படுகின்றது.

    கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.  இவர் தீபங்குடி என்னும் ஊரினர்.  இவர் கி.பி. 1070 முதல் 1118 வரை ஆண்ட முதல் குலோத்துங்கன் காலத்தவர்.  குலோத்துங்கனின் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான், சோழப் பெரும் படையுடன் கலிங்க நாடு சென்று, வாகை சூடித் திரும்பினான்.  அதன் பின் குலோத்துங்கன் , சயங்கொண்டாரிடம் உரையாடிய போது , "கலிங்கம் வென்றமையால் யானும் சயங்கொண்டான் ஆயினன் "  என்று கூறினான்.  அதைக் கேட்ட புலவர், "அப்படியாயின் சயங்கொண்டானான உன்னைச் சயங்கொண்டானான யான் பாடுவது தகும் " என்று கூறினார்.  அதனால் பிறந்ததே 'கலிங்கத்துப் பரணி' என்று கூறுவர் .

    கலிங்கத்துப் பரணி மொத்தம் பதின்மூன்று பகுதிகளைக் கொண்டது.  அவையாவன: கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு , காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திரசாலம், இராச பாரம்பரியம், பேய்முறைப்பாடு, அவதாரம், காளிக்குக் கூளி கூறியது.  போர் பாடியது, களம் பாடியது.  இவற்றுள் 'போர் பாடியது' பகுதியே கவிஞரின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்துகின்றது. 

    'போர் பாடியது' என்னும் பகுதி போலவே 'களம் பாடியது' பகுதியும் சிறப்பு மிக்கது.  வீரன் ஒருவன் களத்தே உயிர் துறந்து வீழ்கின்றான்.  அவன் உடல் நிலத்தைத் தீண்டுவதற்கு முன் அவன் மனைவி களத்தே ஓடி அவனைத் தாங்கிக் கொள்கின்றாள்.  வீரனின் உயிர் விண்ணுலகம் செல்கின்றது.  அங்கேயும் அவனை, தேவ மகளிர் தழுவா முன்னம், தானே சென்று தழுவிக் கொள்ள, அவள் உயிர் விட்டாளாம்.  களத்தே கணவன் இறக்க அவன் மனைவி அக்கணமே உயிர் துறக்கும் கற்பின் மேன்மையைச் சயங்கொண்டாரின் பின் வரும் பாடல் விளங்குகின்றது.

'தரைமகள் தன் கொழுநன்தன் உடலம் தன்னைத் 
    தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு 
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் 
    ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்."

    களத்தே வீழ்ந்து  கிடக்கும் கணவனைக் கண்டு மறக்குலத்து மனைவி கேட்கும் வினாக்கள், அவலச்சுவை மிக்க அழியாத கவிதையாகும்.

"பொருதடக்கை வாளெங்கே? மணிமார் பெங்கே ?
    போர் முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத 
பருவயிரத் தோளெங்கே? எங்கே? என்று 
    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின் '

    'கலிங்கத்துப் பரணி' யின் இத்தகைய சிறப்பைக் கண்டே இதனை, 'தென் தமிழ்த் தெய்வப் பரணி' என்று கூத்தர் பாராட்டினார்.  சயங்கொண்டாரையும் 'கவிச் சக்கரவர்த்தி' என்று தமிழுலகம் போற்றி வருகின்றது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்