ஐந்தாண்டு வரை பேசாத ஊமைக் குழந்தையாயிருந்து பின்னர் தமிழ் வெள்ளம் பெருகிப் பாடும் பாடல்கள் பாடித் தமிழை வளர்த்த பெரும் புலவர் குமர குருபரர். இவர் கி.பி. 17ம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, பிள்ளைத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது. திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மையே சிறுமி வடிவில் அவைக்கு வந்து இந்நூலைக் கேட்டு அகமகிழ்ந்து அருள் புரிந்தாள் எனக் கூறுவர் .
முத்தப் பருவத்தில்,
காலத் தொடுகற் பனை கடந்த
கரு வூலத்துப் பழம் பாடல்
கலைமாச் செல்வர் தேடி வைத்த
கடவுள் மணியே .....
எனத்தொடங்கும் பாடலைக் குமரகுருபரர் அரங்கேற்றுகையில் குழந்தையாய் வந்த மீனாட்சியம்மை, தம் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றிக் கவிஞர்க்கு அணிவித்து மறைந்து விட்டாள் என்பர். இந்நிகழ்ச்சி,
தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
சுவையே அகந்தைக் கிழங்கையகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே ; எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோடு வியமே மதுகரம் வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும் இளம்
வஞ்சிக் கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே.
என்னும் பாடலை அரங்கேற்றும் போது நிகழ்ந்தது என்பர். குமரகுருபரரின் இப்பாடல், படித்தோர் மனத்தில் உயிரோவியமாய்த் திகழ்கின்றது.
0 கருத்துகள்