சிற்றிலக்கியங்களில் ஒன்றான 'தூது' தொல்காப்பியக் காலத்தும் இலக்கியப் பிரிவாக இருந்த ஒன்று. ஒருவரிடம் ஒரு பொருளைப் பெற்று வருவதற்கு ஆற்றல் மிக்க மற்றொருவரை அனுப்புவது தூது. போர்க்காலத்தே மன்னர் தூதனுப்புவது பண்டைய மரபு. ஒளவையாரும் அதிகமானின் தூதராகத் தொண்டைமானைக் கண்டு வந்ததைப் புறநானூறு உணர்த்தும். இது புறத்திணை சார்ந்த தூது.
அகத்திணை சார்ந்த தூது, "காமம் மிக்க கழிபடற்கிளவி" யாகவே அமைந்துள்ளது. அஃறிணைப் பொருள்கள் தாம் கூறுவனவற்றைப் பிறரிடம் கூறும் ஆற்றலோ, அவர் கூறும் விடையை அறிந்து வந்து கூறும் ஆற்றலோ, அற்றவை. இதை உணர்ந்தும் தமது காதல் உணர்வின் மிகுதியினால் அஃறிணைப் பொருள்களைக் காதல் தூதாக அனுப்புதல் வழக்கமாகும்.
இதனை இலக்கணம் ஏற்றுக் கொண்டது.
'சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபில் தொழில்படுத் தடக்கியும்'
என்று தொல்காப்பியமும்,
'கேட்குந போலவும் கிளக்குந போலவும்இயக்குந போலவும் இயற்றுந போலவும்அஃறிணை மருங்கினும் அறையப் படுமே'
என்று நன்னூலும் கூறுகின்றன.
தற்போதுள்ள நூல்களில் புறத்திணைத் தூது நூல்கள் ஒன்றேனும் இல்லை. இருப்பன யாவும் அகத்திணை நூல்களே.
தூதின் இலக்கணம் :
தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி ஒருத்தி, தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்குக் கூறி , 'மாலை வாங்கி வா' என்றோ தூது சொல்லி வா என்றோ உயர்திணைப் பொருளை அல்லது அஃறிணைப் பொருளை அனுப்புவதே 'தூது' என்னும் சிற்றிலக்கியமாகும். காதலனும் காதலியிடம் தூதனுப்புவதுண்டு. இது அருகிய வழக்கே. 'விறலி விடு தூது' என்பது தலைவன் தன் மனைவியிடம் அனுப்பும் தூதாகும். பெரும்பான்மையான தூது நூல்கள், காதலி அனுப்பும் தூதுக்களாகவே அமைந்துள்ளன.
'பயில்தருங் கலிவெண்பாவினாலே, உயர்திணைப் பொருளையும், அஃறிணைப் பொருளையும், சந்தியின் விடுத்தல் முந்துறு தூது' என்று கூறுகின்றது இலக்கண விளக்கம். தூத்துக்குரிய பொருள்கள் இவை என்பதைப் பின்வரும் வெண்பா விளக்குகின்றது.
இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளைபயம்பெறு மேகம் பூவை பாங்கி - நயந்த குயில்பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமேதூதுரைத்து வாங்கும் தொடை
இப்பாடல், அன்னம் (எகினம்), மயில், கிளி, மேகம், நாகணவாய்ப்புள்(பூவை), பாங்கி (தோழி), குயில், நெஞ்சம், தென்றல், வண்டு (பிரமரம்) ஆகிய பத்தும் தூது விடுவதற்குரிய பொருள்கள் எனக் கூறுகின்றது. பத்தில் பாங்கி மட்டுமே உயர்திணைப் பொருளாகும். எனினும் 'பாங்கி விடு தூதாக' ஒரு நூலும் கிடைக்கவில்லை.
பிற்காலப் புலவர்கள் மேற்குறித்த பத்துப் பொருள்களோடு நிறுத்திவிடாமல், வேறு பொருள்களையும் தூத்துக்குரிய பொருள்களாக்கிப் பாடியுள்ளார். நெல்விடு தூது, மான்விடு தூது, துகில் விடு தூது, பணவிடு தூது, புகையிலை விடு தூது, தமிழ் விடு தூது முதலிய பல்வேறு நூல்கள் வெளி வந்துள்ளன.
காப்பியங்களிலும், புராணங்களிலும், தூது ஒரு பகுதியாக அமைந்துள்ளது. கலம்பகம், அந்தாதி ஆகிய சிற்றிலக்கியங்களிலும் தூது ஓர் உறுப்பாக இடம் பெற்றுள்ளது.
0 கருத்துகள்