சங்ககாலத்துக்குப் பின்னே தோன்றிய காப்பியங்கள் யாவும் சமயக் காப்பியங்களே. பெரிய புராணமும் ஒரு சமயக் காப்பியம்; சைவக் காப்பியம்; மற்றக் காப்பியங்கள் வடமொழித் தழுவலாக வந்த காப்பியங்கள். பெரிய புராணமோ, சிலப்பதிகாரம், மணிமேகலை போலத் தமிழ் நாட்டின் சொந்தக் காப்பியம்; தமிழக வரலாற்றுக் காப்பியம்.
காப்பியக் கவிஞர் சேக்கிழார்
பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார். தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றியவர், செங்குட்டுவன் என்னும் சேரமன்னனின் தம்பி. சைவத்தின் முதல் தமிழ்க் காப்பியத்தை இயற்றிய சேக்கிழாரோ இரண்டாம் குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனின் முதலமைச்சர்; இளங்கோ அரசைத் துறந்து அடிகளானபிறகு காப்பியம் இயற்றினார்.' சேக்கிழார் காப்பியம் இயற்றியப் பிறகு அமைச்சைத் துறந்து அடிகளானார் ; சேக்கிழாரடிகள் என அழைக்கப் பெற்றார்.
சைவத்துக்குக் கற்கோயிலாகப் பெரிய கோயில் அமைத்த இராசராசனின் இயற்பெயர், அருள்மொழித் தேவன். சைவ சமயத்துக்குச் சொற்கோயிலாகப் பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரின் இயற்பெயரும் அருள் மொழித் தேவர்.
சேக்கிழார் எனபது குடிப்பெயர். இவர் தொண்டை நாட்டில் உள்ள புலியூர்க் கோட்டத்தில் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் தோன்றியவர். இவருடைய தம்பியின் பெயர் பாலறாவாயர்.
சேக்கிழார் வாழ்ந்த காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. அப்போது சோழநாட்டை இரண்டாம் குலோத்துங்கன் ஆண்டு வந்தான். இவனுக்கு அநபாயச் சோழன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. குலோத்துங்கன் முதல் அமைச்சரை நியமிக்க விரும்பினான். முதலமைச்சராகும் அறிவும் திருவும் பெற்ற ஒருவரை அவன் தேர்ந்தெடுத்த முறைபற்றிய ஒரு கதையுண்டு.
சோழன் நிலத்தைக் காட்டிலும் பெரியது எது, கடலைக் காட்டிலும் பெரியது எது , வானத்தைக் காட்டிலும் பெரியது எது என்னும் மூன்று கேள்விகளை அறிவித்தான். இவற்றுக்குத் தக்க விடை தருவோரைத் தன் தலைமை அமைச்சராக்கிக் கொள்ள விரும்பினான் சோழன். சேக்கிழார் இக்கேள்விகளுக்கு விடையளித்தனர்.
'காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது'
'பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது'
'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.'
என்னும் மூன்று குறள்களையும், முறையே மூன்று கேள்விகளுக்கும் விடையாகத் தந்த சேக்கிழாரின் நுண்ணறிவைப் பாராட்டிய சோழன் இவரை முதலமைச்சராக்கினான்.
கதையானாலும் இது உணர்த்தும் உண்மையில் சில வரலாற்றோடு ஒத்துப் போகின்றன. சேக்கிழார் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றவர். சோழன், இலக்கியப் பற்று மிக்கவன். அதனால் தான் குறளை விடையாக்கிய வேளாளரை வேந்தனின் அமைச்சருக்குத் தலைமை ஆக்கினான். இவ்வுண்மைகள் சோழனின் சிந்தாமணிப்பித்தையும், சேக்கிழார் அவனுக்குச் சிவனடியார் வரலாற்றைக் கூறித் தெருட்டியதையும், பெரிய புராணம் என்னும் காப்பியம் இயற்றும் புலமை பெற்றிருந்ததையும் அரண் செய்கின்றன.
வேளாளர் குடிப்பிறந்த சேக்கிழார் வையகம் காக்கும் கடமையைச் செம்மையாய்ச் செய்து சிறப்புற்றார். அதனால் சோழன் இவருக்கு 'உத்தம சோழப் பல்லவராயன்' என்னும் பட்டமளித்தான். சேக்கிழார், சோழ நாட்டில் உள்ள திருநாகேச்சுரம் என்னும் பட்டமளித்தான். சேக்கிழார், சோழநாட்டில் உள்ள திருநாகேச்சுரம் என்னும் தலத்தில் உள்ள பற்றினால் தம் ஊரான குன்றத்தூரில் ஒரு கோயில் அமைத்து அதற்குத் 'திருநாகேச்சுரம்' என்று பெயரிட்டு, அதன் வழிபாட்டுக்குப் பொருள் அளித்தார்.
சைவனான குலோத்துங்கன் சமணக் காப்பியமான சீவக சிந்தாமணியைப் பயின்று பரவச மெய்தியதைப் பல முறை கண்ட சேக்கிழார் துன்புற்றார். 'உமி குத்தி கை வலிப்போர் போலவும், கரும்பிருக்க இரும்பு கடித்தோர் போலவும், விளக்கிருக்க மின்மினி கொள்வார் போலவும், சிவ கதை இருக்க அவ கதையான சிந்தாமணி கற்கலாமோ' என்று இவர் சோழனைக் கேட்டார். சோழன் 'சிவகதையாது' எனக் கேட்க, சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் முதலாகத் திரு நீலக் கண்டத்துப் பாணர் ஈறாகத் திருத் தொண்டத் தொகை குறிப்பிடும் சிவனடியார்களின் வரலாற்றை முறையாகக் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சோழன் அக்கதையைத் 'தமிழில், பெருங்காவியமாய் விரித்துச் செய்து தருவீராக' என்று சேக்கிழாரை வேண்டினான்.
சேக்கிழார் அமைச்சர் என்னும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஊர் தோறும் பரவிக் கிடந்த உண்மைகளை, கல்வெட்டுச் செய்திகளை, பக்திப் பாடல்களைத் திரட்டினார். முதலாம் இராசேந்திரனுடைய கல்வெட்டு 'தத்தா நமரே காண் ' என்ற மெய்ப்பொருள் நாயனார் படிமம் ஒன்று என்று குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு வாசகத்தை மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் அப்படியே சேக்கிழார் பயன்படுத்தி உள்ளமை அவரது கடும் உழைப்புக்கும் கல்வெட்டு ஆய்வுக்கும் எடுத்துக் காட்டாகின்றது. சேக்கிழார் தேவையான குரிப்புகளைச் சேகரித்த பின்னர் தில்லைக்குச் சென்று தம் காப்பியத்தைத் தொடங்கினார்.
அம்பலத்தே ஆடும் எம்பிரான் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் தம் காப்பியத்தை முடித்தார். காப்பியத்துக்குச் சேக்கிழார் ஈந்த பெயர் "திருத்தொண்டர் புராணம்" என்பது பிற்காலத்தே இதன் சிறப்பு நோக்கி, 'பெரியபுராணம்' என்று வழங்கப்பட்டது. சேக்கிழாரும் இதை 'எடுக்கும் மாக்கதை ' என்றே குறிப்பிட்டுள்ளார்.
நம்பியாரூரான சுந்தர் பாடிய, 'திருத்தொண்டத் தொகையில், ஒவ்வோர் அடியவர் பெருமையும் ஒருவரியில் விளக்கப்பட்டது. இதைத் தொகை நூல் என்பர். இது தோன்றிய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இதனைச் சற்றே விரித்து, நம்பியாண்டார் நம்பி, 'திருத்தொண்டர் திருவந்தாதி' இயற்றினார். ஓரடியாரின் பெருமையை ஒரு பாடலால் விளக்கும் இந்நூலை வகை நூல் என்பர். இது தோன்றிய காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு. இவ்விரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஓரடியவரின் பெருமையை ஒரு புராணத்தால் விளக்கிக் கூறுவது பெரிய புராணம். இதை வழி நூல் என்பர். இது தோன்றிய காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. தொகை - வகை - விரி என்னும் அமைப்பில் குன்றுமணி அளவான சிவனடியார் புகழைக் குன்றளவாக உயர்த்திவிட்டார், குன்றத்தூர் கவிக் கோமான்.
பெரிய புராணத்தில் காண்டங்களும், பதின்மூன்று சருக்கங்களும் 4287 பாடல்களும் உள்ளன. பாடலின் எண்ணிக்கை சிறப்பு மிக்கது, "இளங்கோ அடிகள் இயற்றிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் 5001 அடிகளையே உடையது. ஆனால் திருத்தக்க தேவர் உருவாக்கிய தெள்ளு தமிழ்க் காப்பியமோ 12,616 அடிகளை உடையது. சேக்கிழார் பெருமான் பாடிய பெருங்காப்பியமோ, 17,148 அடிகளை உடையது." என்று பேராசிரியர் டாக்டர் ந . சஞ்சீவி காப்பியத்தின் பேரளவைச் சொல்லிப் பூரிக்கின்றார்.
பெரிய புராணத்தில் இடம்பெறும் தனியடியார்கள், அறுபத்து மூவர்; தொகையடியார்கள் ஒன்பது பேர். இந்நாயன்மார்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள்.
சேக்கிழார் தம் காப்பியத்தைச் செய்து முடித்ததை அறிந்த குலோத்துங்கன் அதன் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்தான். தில்லையம்பலத்தில், திருஞான சம்பந்தர் அவதரித்த திருவாதிரைத் திருநாளில் சேக்கிழார் தம் நூலை அரங்கேற்றத் தொடங்கினார். அடுத்த திருவாதிரை நாளில் அரங்கேற்றம் முடிந்தது என்று சேக்கிழார் புராணம் கூறும்.
பெரிய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்த சோழன் சேக்கிழாரைச் சிறப்பித்தான். அலங்கரித்த யானையின் மேல் பெரிய புராண ஏட்டுச் சுவடியை ஏற்றி அதனருகே சேக்கிழாரையும் அமரச் செய்து திருவீதி வலம் வரச் செய்தான் அநபாயன். அதோடு தானும் யானை மேலிருந்து காப்பியக் கோமானுக்குத் தன் கையினாலே வெண்சாமரை வீசி மகிழ்ந்தான், சொல்லுதற்கரிய தொண்டரின் புகழை உளம் கொள்ளச் சொன்ன கவி வள்ளலான சேக்கிழாருக்குத் 'தொண்டர் சீர் பரவுவார்' என்னும் பட்டமளித்தான். அதன் பின் சேக்கிழார் அரசுப் பணியை முற்றிலும் துறந்து தில்லையிலேயே வாழ்ந்து முக்தியடைந்தார்.
சேக்கிழார் மறைவுக்கு இருநூறு ஆண்டுகள் பின்னே தோன்றிய உமாபதி சிவாசாரியார் 'சேக்கிழார் புராணம்' எழுதிப் பெரிய புராண ஆசிரியரை உரிய முறையில் சிறப்பித்தார். சேக்கிழார் காலத்துக்கு எழுநூறு ஆண்டுகளுக்குப் பின்னே வந்த பெரும் புலவரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் பாடிய 'சேக்கிழார் பிள்ளைத் தமிழ்' என்னும் நூலால் சேக்கிழாரின் சிறப்புகள் யாவையும் பாராட்டினார், சேக்கிழாரை நினைத்தவுடன், மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' என்னும் வரியை நினைக்காத தமிழ் நெஞ்சம் இருக்க முடியாது. அடியவர்களின் பெருமைகளைக் காவியமாக்கிய சேக்கிழாரடிகளைத் தெய்வமாகக் கருதிச் சைவர்கள் வழிபடுகின்றனர், அதனால் தான் மாதவச் சிவஞான முனிவர் "எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றைவாழ் சேக்கிழான் அடி சென்னியிருத்துவாம் " என்று வாயாரப் பாராட்டி வணங்குகின்றார்.
0 கருத்துகள்