Looking For Anything Specific?

கம்பராமாயணம்

"கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க் 
கம்பன் பிறந்த தமிழ்நாடு"

    செந்தமிழ் நாட்டின் சிறப்புகளைக் கூற வந்த பாரதியார், கம்பன் பிறந்ததால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருமையுற்றதைக் கூறுகிறார்.  கம்பர் தமிழ் இலக்கிய உலகை ஒளியுறச் செய்த உதய சூரியன்.  ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாக்கவிஞர்; மற்றக் கவிஞர்கள் இவர் முன் குன்றுகளாகக் குன்றிப் போக இமயமாக எழுந்து நிற்கும் புலவர் திலகம், கம்பர்.

 'கல்வியிற் பெரியவர் கம்பர்'
'கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்'
'கம்ப நாடகம்'
'கம்ப நாடன் கவிதையிற் போல் 
கற்றோர்க்கு இதயம் களியாதே '

    என்னும் பழமொழிகளும், பாடல் வரிகளும் கம்பரின் அளப்பரிய கவிப் புலமையை உரைக்கின்றன.  மானுடனாக வால்மீகி  சித்தரித்த இராமனை ஆண்டவராகக் காட்டி மனித குலத்தைப் புனிதப்படுத்திய புதுமைப் புதுமைப் புலவர் கம்பர்.  கவிச் சக்கரவர்த்தியிடம் , 'மன்னவனும் நீயும், வளநாடும் நின்னதோ ' என்று சீறிப் பேசும் தன்மானத் தந்தை கம்பர்.  எண்ணரிய புலவர்கள் விளங்கும் இலக்கிய உலகிலே பன்மீன் நாப்பண் பான்மதி போல உயிர்களைக் குளிர்விக்கும் உயர் கவிஞர் கம்பர்.

    கம்பர் காளி கோயிலில் பூசை செய்யும் எளிய குடும்பத்தில் தோன்றியவர்.  இவர் பிறந்த ஊர் சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூர். தந்தையார் பெயர் ஆதித்தன் எனக்  கூறுவர் .  கம்பர் என்பது ஏகம்பன் என்னும் சிவபெருமான் பெயரில் முதல் குறைந்தது என்பர்.  இளமையில் கம்பங்கொல்லையைக் காத்த பணி மேற்கொண்டதால் கம்பர் எனப்பட்டார் என்பதும் உண்டு.  காளி கோயிலருகே ஒரு கம்பத்தின் கீழ்க் கண்டெடுக்கப் பட்டமையால் 'கம்பர்' எனப் பெயரிட்டனர்.  கவிபாடும் புலமை பெறும் முன் போதிய அறிவற்றுக் கம்பம் போல், நின்றமையால் 'கம்பர்' எனப் பெயரிட்டனர்.  இவ்வாறு கம்பர் என்னும் பெயருக்குக் காரணம் பல கூறுவர் .


    திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளலால் கம்பர் ஆதரிக்கப்பட்டார். ஆதனால் தம் காவியத்துள் ஆயிரம் பாடலுக்கு ஒருமுறை சடையப்பரின் கொடையையும் பிற குணங்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார், கம்பர்.  இராமன் முடி சூடிய காட்சியைக் கூறும்போது,

'விரிகடல் உலகம் ஏத்தும் 
    வெண்ணையூர்ச் சடையன் தங்கள் 
மரபுளோர் கொடுக்க, வாங்கி 
    வசிட்டனே புனைந்தான் மௌலி'

    எனக் குறித்தது, சடையப்பா புகழுக்கு மணிமுடியாக ஒளிர்ந்தது.

    கம்பர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதின் மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்.  சிலர், இவர் ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கூறுவர் .  கம்பர் குலோத்துங்கனிடம் மனக் கசப்புற்றுச் சோழ நாட்டை நீத்து ஓரங்கல் நாட்டை ஆண்ட பிருத்தாபருத்திரனின் ஆதரவில் சிறிது காலம் இருந்த பின்பு சோழநாடு மீண்டார் எனவும் கூறுவர் .  கம்பருக்கு அம்பிகாபதி என்னும் மகன் இருந்தான்.  புலிக்குப் பிறந்த பெரும்புலியான அம்பிகாபதி, சோழன் மகள் அமராவதியைக் காதலித்தான்.  சோழன் இக்காதலை எதிர்த்ததனாலே அம்பிகாபதியும் அமராவதியும் இறக்க நேர்ந்தது.  அம்பிகாபதி, 'அம்பிகாபதிக் கோவை' என்னும் சிற்றிலக்கியம் இயற்றினான்.

    ஒரே மகனை இழந்து துடித்த கம்பர் தம் துயரத்தை இராமனைப் பிரிந்த தசரதன் மூலமும், இந்திரசித்தை இழந்த இராவணன் மூலமும் வெளிப்படுத்தினார். மகனின் மறைவுக்குப் பின் கம்பர் பாண்டிய நாடு சென்று, நாட்டரசன் கோட்டையில் தங்கி அங்கேயே உயிர்விட்டார்.  கம்பரின் சமாதி அங்குள்ளது.

    கம்பர் இறந்த பின்னரே மற்றக் கவிஞர்கள் மதிப்புப் பெற்றனர் என்பதனை பின்வரும் இரங்கற்பா கூறும் 

'இன்றோ நம் கம்பன் இறந்த நாள்; இப்புவியில் 
இன்றோ நம்புன்கவிகட்கு ஏற்றநாள் - இன்றோதான் 
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க 
நாமடந்தை நூல் வாங்கும் நாள்'.

        இப்பாடல் வாணிதாதன் பாடியது என்பர்.  கம்பர் இறந்தமையால் கலைமகள் மங்கல அணி இழந்தாள் எனும் கூற்றே கம்பரின் சிறப்பைக் குறிக்கும்.

    மன்னரால் போற்றப்பட்ட கம்பர் மக்களாலும் போற்றப்பட்டார் என்பது தெரிகின்றது.  ஒளவையாரையும் கம்பரையும் இணைத்துப் பேசும் கதைகள் பல உண்டு.  ஒளவை கூழுக்குப் பாட, கம்பர் பொன்னுக்குப் பாடினாலும் அவர் ஒரு மக்கள் கவிஞராகவே திகழ்ந்தார்.

    கம்பர் தம் இராமாயணத்தைப் பதினைந்தே நாளில் எழுதி முடித்தார் என்பர்.  கம்பர் இரவில் வடமொழிப் புலவரிடம் வால்மீகி இராமாயணம் பற்றி ஆராய்ந்து, மறுநாள் பகலில் எழுநூறு கவிதைகள் எழுதினார்.

    இவ்வாறு பதினைந்தே நாளில் காவியத்தைப் பாடி முடித்ததாக ஒரு பாடல் கூறுகின்றது.

'விழுந்த ஞாயிறு எழுவதன் முன்மறை 
    வேதியருடன் ஆராய்ந்து 
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்கவி 
    பாடினது எழுநூறே'

    கம்பர் வால்மீகியைத் தழுவி எழுதினாலும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்பப் பல மாற்றங்கள் செய்தார்.  இராமனும் சீதையும் திருமணத்துக்கு முன்னரே காதல் கொண்டதாகக் கூறுகின்றார். அண்ணலும் நோக்க அவளும் நோக்கிய காதல் காட்சி வால்மீகி நூலில் இல்லை.கம்பரைப் பின் பற்றியே துளசிதாசரும் தம் இராமாயணத்தில் இராமன் சீதை காதலைக் காட்டினார்.  சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன், சீதையைக் கைகளால் பற்றித் தூக்கிச் சென்றான் என்று வால்மீகி வரைந்தார்.  சீதையின் உயர்வை இது சிதைக்கும் என எண்ணிய கம்பர்,சீதையை அவளிருந்த குடிசையோடு தரையைக் கீறிப் பெயர்த்து எடுத்துச் சென்றான் இராவணன் என மாற்றிச் சீதையின் கற்பைச் சிறப்பிக்கிறார்.  கம்பரின் திருத்தங்கள், தாமே புகுத்திய புதிய நிகழ்சசிகள் யாவும் காப்பியத்தின் உயர்வைப் பன்மடங்கு பெருக்கின.  இது பற்றியே இலங்கை வி. செல்வநாயகம் , 'இராமனிடத்திலே தீராத அன்பு கொண்ட கம்பர் உள்ளத்தில் அக்கதை, ஆரிய நாகரிகத்துக்குரிய அம்சங்கள் பலவும் நீக்கப் பெற்று சோழர் காலத்துத் தமிழ் நாட்டிற்குரிய ஒரு கதையாகப் பரிணமித்தது" எனப் பாராட்டுகிறார்.

    கம்பர் தம் நூலுக்கு 'இராமாவதாரம்' என்று பெயரிட்டார்.  எனினும் இது, கம்பராமாயணம் என்றே வழங்கப் பெறுகிறது.  இதில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்கள் உள்ளன.  இவற்றுள் மொத்தம் 113 படலங்களும், 10500 பாடல்களும் உள்ளன.  ஏழாவது காண்டமான உத்தர காண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடினார் எனவும்   வாணிதாதர் பாடினார் எனவும் கூறுவர் .

    கம்பர் தம் நூலைத் திருவரங்கத்தில் அரங்கேற்றினார்.  அங்கே வைணவ ஆசாரியரான நாதமுனிகள் கம்பருக்குச் 'கவிச்சக்கரவர்த்தி' என்னும் பட்டமளித்ததாக ஒரு கதையுண்டு.

    கம்பர் இக்காப்பியம் தவிர, ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார்.

    கம்பர் தமது காப்பிய நாயகனைப் போலவே, தென்சொற் கடந்தார்; வட சொற்கடற்கெல்லை தேர்ந்தார்.  கம்பர் வாக்கைப் பயன்படுத்தி, அவர் ஒரு 'செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்செல் வவ்விய கவிஞர்' என்றும், கம்பரின் கவித்திறத்தை, 'வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக் கோலைத் தோய்த்துத் தம் காப்பிய ஓவியத்தை வரைந்தவரே கம்பநாடார்' என்றும் 'தெய்வப் புலவர் கம்பர்' என்னும் தம்  நூலில் புகழ்கிறார், மு. இராகவையங்கார்.

    கதை அமைப்பு, காவியக் கட்டுக்கோப்பு, பாத்திரப் படைப்பு, நாடக பாவம், கவிதை நயம், கற்பனை வளம் ஆகியன நிறைந்த கம்பராமாயணத்தின் சிறப்பினைச் சில பாடல்கள் மூலம் இனி அறிந்து மகிழ்வோம்.

        ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கம்பர் செய்த கற்பனைச் செய்தியே கோசலநாட்டு வருணனையாக அமைந்தது.

'வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால் 
திண்மை இல்லையோர் செறுநர் இன்மையால் 
உண்மை இல்லை பொய் உரை இலாமையால் 
ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால் .'

    சூர்ப்பணகை பேரழகியாக உருக்கொண்டு மென்மையும் மேன்மையுமாக வந்த வனப்பினை, அதற்குரிய பிஞ்சுச் சொற்களால் கொஞ்சும் சந்தத்தால் இசைக்கிறார், கம்பர்.

'பஞ்சுஒளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவம் அனுங்க,
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி,
அஞ்சொல்இள  மஞ்ஞையென அன்னமென மின்னும் 
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் '.

    இராவணன்   சீதையைக் கவர்ந்து சென்றதை அறிந்து இராமன் மனம் கவன்று, மருண்டு மயங்கிய நிலையில் உலகமே சுழல்வது போன்ற காட்சியை விளக்கும் கம்பரின் கவிதையைப் படிக்கும்போதே நம் முன்னுள்ள பொருள்கள் சக்கரமாய்ச் சுழலும்.

'மண் சுழன்றது; மால் வரை 
    சுழன்றது;மதியோர் 
எண்சுழன்றது; சுழன்ற அவ் 
    வெறிகடல் ஏழும்;
விண் சுழன்றது; வேதமும் 
    சுழன்றது;விரிஞ்சன் 
கண் சுழன்றது; சுழன்றது 
    கதிரொடு மதியம்'

    'பேணி வளர்த்த தமையனைப் பிரியேன்; உப்பிட்ட வரை உதறித் தள்ளேன்; அண்ணனை எதிர்ப்பவன் ஆண்டவனே ஆனாலும் அவனுக்கு அடங்கி வாழ மாட்டேன் என்று கும்பகர்ணன் நவிலும் பாடலில் நன்றிப் பண்பும் நற்கவிப் பண்பும் ஒன்றி உறவாடக் காணலாம்.

'செம்பிட்டுச் செய்த இஞ்சித் 

    திருநகர்ச் செல்வம் தேறி 
வம்பிட்ட தெரியல் எம்முன் 
    உயிர்கொண்ட பகையை வாழ்த்தி 
அம்பிட்டுத் துன்னம் கொண்ட 
    புண்ணுடை நெஞ்சோடு ஐய 
கும்பிட்டு வாழ கில்லேன் 
    கூற்றையும் ஆடல் கொண்டேன்.

    ஒன்றைச் சொல்லும் போது புதுமையாக, பிறரது கவனத்தைக் கவரும் முறையில் கூறுவது கம்பர் பாணி.  இராமன் வில்லை முறித்ததை "எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர்" என்கிறார்.  "தோள் கண்டார் தோளே கண்டார்" என்று சொல்லி இராமனின் அழகு எல்லையற்றது என்பதைப் புரிய வைக்கின்றார்.  "சீதையைக் கண்டேன் அல்லேன் ; கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்" என்று புதிர் போட்டு விளக்குகிறார்.  கம்பரின் புதுமைச் சொல்லோவியங்கள் எண்ணில.  அவற்றைப் படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும், நினைத்தாலும் அமுத வெள்ளம் அகத்தே நிறையும்.

    கம்பர் வாழ்ந்த காலத்திலிருந்து இன்று வரை கம்பராமாயணத்தின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.  மற்றக்  கவிஞர்கள் எவரையும் விடக் கம்பரையே தமிழர்கள் போற்றிப் பூரிக்கின்றனர்.  நகர் தோறும் கம்பர் கவியரங்கம்; சிற்றூர் தோறும் கம்பர் பட்டிமன்றம்; கம்பர் விழாவில் பாமரன் முதல் பண்டிதர் வரை, ஆண்டி முதல் தள்ளாடும் கிழவர் வரை -எல்லோரும் கூடுகின்றனர் 'கம்பன் புகழ் வாழ்க; கன்னித் தமிழ் வாழ்க' என்று பாடுகின்றனர்.

    ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த ஒரு கவிஞனைப் பிற்கால நவநாகரிக மக்கள் நேசிப்பதும், பூசிப்பதும், அவன் காப்பியத்தை இன்றும் படித்தும் விளக்கியும் பரவசப் படுவதும் உலக நாடுகள் வேறெங்கும் காணாத புதுமைகள்! இலக்கியத் திறனாய்வாளரான எஸ். மகாராஜன், "உலகத்திலேயே வேறொரு நாட்டில் இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய இதயத்தை இப்படி ஆட்கொண்டதில்லை" என்று ஆனந்தம் பொங்க , "தெய்வ மாக்கவி" என்னும் தம் நூலில் கூறுகிறார்.



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்