Looking For Anything Specific?

யசோதர காவியம்

     'யசோதர காவியம்' என்னும் சிறு காப்பியம் வட மொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. இக்காவியம் கூறும் யசோதரன் முதலான மாந்தர்களின் வரலாறு வேறெந்தத் தமிழ் நூலிலும் குறிக்கப் பெற வில்லை. ஆனால் வடமொழியில் யசோதரன் வரலாறு கூறும் நூல்கள் பல உள.

    மகாபுராணத்தின் இரண்டாம் பகுதியான உத்திர புராணத்தைக் குணபத்திரர் இயற்றினார். இப்புராணத்தில் தான் முதன் முதலில் யசோதர காவியக் கதை கூறப்படுகின்றது.  இக்கதையைச் சோமதேவ சூரி என்பவர், "யசஸ் திலகம்" என்னும் பெயரிலும், வாதி ராச சூரி என்பவர் "யசோதர சரிதம்" என்னும் பெயரிலும் தனி நூல்களாக எழுதினார். ஹரி பத்ஃதிரர் என்பரும் புட்பதந்தர் என்பவரும் இதே கதையை யசோதர காவியமாக இயற்றியளித்தனர்.  தமிழில் உள்ள யசோதர காவியம் புட்பதந்தர் இயற்றிய வடமொழி நூலைத் தழுவியது என்று ஒரு வெண்பா கூறுகின்றது.  இதே வெண்பா, யசோதர காவிய ஆசிரியர் பெயர் வெண்ணாவலூர் உடையார் வேள் எனவும் குறிப்பிடுகின்றது.

'புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத் 

திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார் 

நண்ணார் இலர் என்ன நாடகக் கொடைக்கையார் 

வெண்ணாவ லூருடையார் வேள்'.

     புட்பதந்தர் என்பவர் கி.பி. 965 இல் மகாபுராணம் எழுதியவர். இவரே நாககுமார சரிதத்தையும் யசோதர சரிதத்தையும் வட மொழியில் எழுதியவர் என்றாலும், மேற்கண்ட வெண்பா யசோதர காவியத்தையே குறிப்பிடுகிறது என்பது செவிவழிச் செய்தியாகும். யசோதர காவியம் என்னும் தமிழ்க் காப்பியத்தை இயற்றியவரின் இயற்பெயர் தெரியவில்லை. வெண்ணாவலூருடையார்வேள் என்பது அவருக்கு ஊரால் வந்த பெயர் ஆகும்.

     இந்நூலாசிரியரின் காலத்தைக் கண்டறிய காவியத்துள் வரும் பண்ணின் பெயர் துணை செய்கின்றது. யானைப் பாகனான அட்ட பங்கன் என்பவன் மாளவ பஞ்சமம் என்னும் பண்ணைப் பாடுகின்றான். அதைக் கேட்டு யசோதரன் மனைவி மயங்கி அவனிடம் காமம் கொள்கிறாள் என்பது தமிழ்க் காவியம். மாளவ பஞ்சமம் என்னும் பண் வேங்கிடமகி எழுதிய சதுர்த்தண்டி பிரகாசிகை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு கருநாடக சங்கீத நூல் . இந்நூலுக்கு முற்பட்ட கருநாடக சங்கீத நூல்களான சங்கீத சூரியோதயம், சாரங்க தர பத்திரி முதலிய நூல்களில் மாளவ பஞ்சமம் என்னும் பண் இடம் பெறவில்லை. எனவே மாளவ பஞ்சமம் இடம் பெற்ற யசோதர காவியத்தின் நூலாசிரியர் காலம் 300 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறுகின்றார், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை. இதே காரணம் காட்டி தெ.பொ.மீஅவர்கள் இந்நூல் விசய நகர அரசுக்கு முந்தியது அன்று என்று கூறுகின்றார்.

 யசோதர காவியம் கூறும் கதையை அறிவோம்:

     ஓதய நாட்டு இராசபுரத்து மன்னன் மாரிதத்தன் சண்டமாரிக்குப் பலியிட இரட்டையரைக் கொணரச் செய்தான்.

     அவ்வாறு கொண்டு வரப்பட்டவர் அபயருசியும் அவன் தங்கை  அபய மதியும் ஆவர். இருவரும் இளஞ் சமணத் துறவியர்.  அவர்கள் பஞ்ச பரமேட்டிகளைத் தொழுது உயிர்விடத் துணிகின்றனர்.  அவர்தம் நகைமுகம் கண்ட அரசன் காரணம் கூறும்படி கேட்க, இருவரும் பழம் பிறப்பினைக் கூறுகின்றனர்.

    அசோகன் நரைமுடி கண்டு துறவு பூண, அவன் மகன் யசோதரன், தன் மனைவி அமிழ்தமதியுடன் அரசுக் கட்டில் ஏறுகின்றான். அட்டபங்கன் என்னும் யானைப் பாகன்  மாளவ பஞ்சமம் என்னும் பண்ணைப் பாட அதிலே மயங்கிய அமிழ்தமதி அவனோடு கள்ள உறவு கொள்கின்றாள். அரசியின் காமம் கண்டு வெறுப்புற்றுத் துறவு பூண விரும்புகின்றான் யசோதரன்.  ஆனால் தாய் சந்திரமதி சண்டமாரிக்குக் கோழி பலியிட்டால் தீமை நீங்கும் என்கின்றாள்.  உயிர்க் கொலை புரிய அஞ்சிய யசோதரன், மாவால் கோழி செய்து பலியிட, அம்மாக் கோழியும் உயிர் பெற்றுப் புலம்புகிறது.  பின்னர் அமிழ்தமதி நஞ்சு கலந்து சோறிட அதை உண்டு யசோதரனும் அவன் தாயும் இறக்கின்றனர். இறந்த இருவரும் பற்பல விலங்குகளாய் மாறி மாறிப் பிறந்து, இறுதியில் கோழியாகப் பிறக்கின்றனர்.  யசோதரன் மகன் யசோதமதி அரசனாகி வேட்டைக்குச் செல்கிறான்.  அங்கே சமண முனிவரைக் காண்கிறான். அவனுக்கு இரட்டை மக்களாகப் பிறந்திருப்பவர் தன் தந்தையும் பாட்டியுமே என்று அறிகின்றான்.  பழம்பிறப்பின் வரலாறெல்லாம் உணர்ந்த அவன் துறவு மேற்கொள்கிறான். அவன் மக்களே இளந்துறவிகளான அபயருசியும் அபயமதியும் ஆவர்.

     இக்காவியத்தின் முதல் குறிக்கோள் உயிர்க் கொலையைக் கண்டிப்பது. அடுத்த குறிக்கோள் இசை காமத்தை விளைவிக்கும் என உணர்த்துவது. "இந்நூலாசிரியர், தன் கணவனுடன் கூடி இன்புற்றிருந்த அமிழ்தமதி அக்கூட்டத்தின் பயனாய் மகனொருவனைப் பெற்றவளாயினும் அமையாது தன்னின் மிக இழிந்தான் ஒருவனைக் கூடிக் கள்ளத் தீயொழுக்கம் மேற்கோடற்குக் காரணமாக இசையினைக் கொணர்ந்து நிறுத்துகிறார்" என்று, யசோதர காவியத்துக்கு உரையெழுதிய ஔவை துரைசாமி பிள்ளையும் கூறுகின்றார்.

     யசோதர காவியம், ஐந்து சருக்கங்களும்  330 செய்யுள்களும்  கொண்டது. ஐஞ்சிறு காப்பியங்களில் இதனை முன் வைத்துக் கூறலும் உண்டு. இது உதயண குமார காவியத்திலும் சிறந்தது. ஆனால் சூளாமணி, நீலகேசி ஆகியவற்றிலும் இலக்கியச் சுவை குறைந்தது. யசோதர காவியத்தின் கவிச்சுவையைப் பின்வரும் இரு பாடல்களில் உணர்வோம்.

      அபயருசியையும் அபயமதியையும் பலியிடப் பற்றிச் செல்கின்றனர். அப்போது அபயமதி அஞ்சுகிறாள். தங்கையின் அச்சத்தைக் கண்ட தமையன் அபயருசி " நமக்கு வரப்போகும் துன்பத்தை எண்ணி அஞ்சினாலும், அத்துன்பம் வந்தே தீரும். அதனால் அஞ்சுவதால் நமக்கு என்ன பயன்? அஞ்சும் செயலும் நமக்குத் துன்பத்தையே தரும். அத்தோடு அந்த அச்சத்தைச் சூழ்ந்திருக்கும் வினைகள் நம்மை நாளும் நலியச் செய்யும்" என்று கூறி அவளது அச்சத்தை அகற்றுகின்றான்.

'அஞ்சினம் எனினும் மெய்யே அடையவந்து அடையும்; ஆனால் 

அஞ்சுதல் அதனின் என்னை பயன் நமக்கு; அதுவும் அன்றி 

அஞ்சுதல் துன்பந்தானே! அல்லதும் அதனின் சூழ்ந்த 

நஞ்சென வினைகள் நம்மை நாடொறும் நலியும்

என்றான்.

    மனைவி அமிழ்தமதி யானைப் பாகனோடு காமத்தால் கூடியதைக் கண்ட யசோதரன் மனம் வெறுத்துக் காமத்தின் தீமைகளைக் கூறுகிற கவிதையைக் காண்க: 

' எண்ணமது அலாமை பண்ணும்; இப்பிறப்பு இடியநூறும் 

மண்ணியல் புகழை மாய்த்து, வருவழி வளர்க்கும்; மானத் 

திண்மையை உடைக்கும்; ஆண்மை திருவொடு சிதைக்கும்; சிந்தை 

கண்ணொடு கலக்கும்; மற்று இக் கடைபடு காமம்'.

என்றான்.

     (எண்ணமது அலாமை பண்ணும் - நெஞ்சில் நிகழும் எண்ணங்கள் நல்லவையாகாதவாறு செய்யும்.)







கருத்துரையிடுக

0 கருத்துகள்