ஐஞ்சிறு காப்பியங்கள்
ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வழக்குப் பிற்பட்ட காலத்தே தோன்றிய வழக்கு என்பதை முன்னர் கண்டோம். கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டினர் ஆகிய மயிலைநாதர் இவ்வழக்கைப் பயன்படுத்துகின்றார். அதனால் ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கு இதற்கும் பிற்பட்ட காலத்தே தோன்றியிருக்க வேண்டும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனக் கூறும் வழக்குச் சமணர் இடையே வழங்கியதாகலாம் என்று கூறுகின்றார் , தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். சூளாமணி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம் என்பனவையே ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்.
சூளாமணி
சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித் தேவர். சிரவண பெளகுளாவில் உள்ள ஒரு கல்வெட்டு, மகாபுராணத்தின் இரண்டாம் பகுதியை இயற்றிய குணபத்திராச்சாரியார், அவருக்குப் பின் சமணத் துறவியர் பரம்பரையில் வந்த சிந்தாமணி ஆச்சாரியார். அவருக்குப் பின்வந்த சூளாமணி ஆசிரியரான ஶ்ரீ வர்த்தமான தேவர் ஆகியோரை பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட வர்த்தமான தேவரே, தோலாமொழித் தேவர் என்று சிலர் கூறுவர். சூளாமணிக் காப்பியத்தில் 'தோலா நாவில் சச்சுதன்' என்றும், "ஆர்க்கும் தோலாதாய்" என்றும் வழங்கிய மையால் சூளாமணி ஆசிரியர் அவர் இயற்றிய தொடரால் பெயரிடப் பெற்று தோலாமொழித் தேவர் என வழங்கப்பட்டார் எனவும் கருதுவர் நமக்குக் கிடைக்கும் காப்பியமோ, தோலாமொழித் தேவர் என்பதை மட்டும் குறிப்பிடுகின்றது. 'வர்த்தமான தேவர்' என்னும் பெயரைக் கூறவில்லை. 'தோலாமொழித் தேவர்' என்னும் பெயருக்கு 'வெல்லும் சொல் வல்லார்' என்று பொருள்.
சூளாமணியின் பாயிரப் பாடல், "சேந்தன் என்னும் தூமாண் தமிழின் கிழவன்" அவையுள் காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்கின்றது. இங்கே குறிப்பிடப் பெறும் சேந்தன், நின்றசீர் நெடுமாறனின் தந்தையும் 'ஜெயந்தவர்மன்' என வழங்கப் பெறுபவனுமான செழியன் சேந்தனே என்று சிலர் கூறுவர். தனிப்பாடல் ஒன்று, விசயன் கார் வெட்டி அரையன் என்பவன் வேண்டியதற்கு ஏற்பத் தோலாமொழித் தவர் சூளாமணியை இயற்றினார் என்று இயம்புகின்றது.
செழியன் சேந்தன் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவன். அவனது அவையில் சூளாமணி அரங்கேற்றப்பட்டது எனக் கொண்டால், இக்காப்பியம் ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகும். விசயன் என்பது வாகை சூடியவன் என்னும் பொருளுடைய பொதுப்பெயர். கார் வெட்டி என்பது காடுவெட்டி என்பதன் மரூஉவாகிப் பல்லவனைக் குறிப்பிடுகின்றது. பல்லவனாகிய விசயன் தமிழின் கிழவன் என்று போற்றும் அளவு தமிழ்ப் பற்று மிக்கவன். இவனது சிறப்புப் பெயர் சேந்தன். இவ்வாறு கொண்டு பிற்காலப் பல்லவர்களிலே ஒருவனான சேந்தன் காலத்தில் சூளாமணி எழுதப்பட்டது எனவும் கொள்ளலாம் என்பது தெ.பொ.மீ. கருத்து. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அதனால் சூளாமணி கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின்னர் தோன்றிய காப்பியம் என உறுதியாகக் கூறலாம்.
சமணர்கள் சீவக சிந்தாமணிக்கு அடுத்தநிலையில் போற்றும் காப்பியம், சூளாமணியே. இது ஸ்ரீ புராணத்தில் உள்ள கதையைத் தமிழில் கூறும் காப்பியம். அதனால் திரிபிருஷ்டன் என்னும் பெயர் திவிட்டன் எனவும், அஸ்வக்கிரீவன் என்னும் பெயர் அசுவக் கண்டன் எனவும், ஸ்வயம் பிரபா என்னும் பெயர் சயம்பவை எனவும் மொழி மாற்றம் பெறுகின்றன. பிற வடமொழிப் பெயர்களும் இம்முறையில் மாறுதல் அடைகின்றன.
சூளாமணிக் காப்பியமும் சிந்தாமணி போல விருத்தப்பாவால் இயன்றது . இந்நூலில் மொத்தம் 2330 செய்யுள்கள் உள்ளன.
சூளாமணிக் காப்பியம் திவிட்டன், விசயன் என்னும் இருவரின் கதையை எடுத்துச் சொல்கின்றது. இருவரும் கண்ணன், பலராமன் போன்ற குணமும் செயலும் பெற்றவர்.
சுரமை என்னும் நாட்டை ஆளும் அரசன் பயாபதிக்கு மனைவியர் இருவர். இவ்விருவரும் விசயன், திவிட்டன் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றெடுக்கின்றனர். அசுவகண்டன் என்னும் விஞ்சையர் கோன், திவிட்டன் தனக்குப் பணியாமையால் சினங்கொண்டு மாயச்சிங்கத்தை அவன் மீது ஏவுகின்றான். மாயச்சிங்கம் திவிட்டனைக் கண்டு ஓடிவிட, குகையிலிருந்து வெளிப்பட்ட உண்மையான சிங்கத்தைக் கொன்று வென்ற திவிட்டன் விஞ்சையர் வஞ்சியான சயம்பவையை மணக்கின்றான். திவிட்டன் படையும் அசுவ கண்டனின் படையும் போரிடுகின்றன. அசுவ கண்டன் இறக்கின்றான். திவிட்டன் கோடிக் குன்று எடுத்து நின்று, வாசுதேவன் எனக் காட்டுகின்றான். திவிட்டனுக்குச் சோதி மாலை என்னும் பெண் மகவு பிறக்கின்றது. சோதி மாலை சுயம்வரத்தில் தன் மாமன் மகன் அமுததேசனை மணக்கிறாள். பயாபதி அரசன் துறவு மேற்கொண்டு உலகுக்கு ஒரு சூளாமணியாகி வீடடைகின்றான்.
தோலாமொழித் தேவர் இக்கதையைக் காப்பியச் சுவைகள் யாவும் குற்றால அருவியாகக் கொட்ட விருப்பத்தை விளைவிக்கும் விருத்தப்பாவால் திருத்தமுறப் பாடியுள்ளார்.
ஐந்திணை நில வளம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அரசியல் அறம், தூது நெறி, குடிமக்கள் திருவிழா, வேனில் விழா, அமைச்சரவை, சுயம்வரம் , தெய்வப் போர், மாயப் போர் முதலியன அமைத்து, இயன்றவரை தமிழ் மரபுக்கேற்ப இக்காப்பியத்தை இயற்றியுள்ளார், தோலாமொழித் தேவர். அவர் வடமொழி இலக்கியத்தில் வரும் விதூடகனையும் இக்காப்பியத்துள் நுழைத்துள்ளார்.
இந்நூலைச் சிறு காப்பியங்களில் சேர்த்துக் கூறினும் உண்மையில் இது பெருங் காப்பியமே என்று தமிழறிஞர்கள் அனைவரும் போற்றுவர். சிந்தாமணியிலும் சிறந்தது சூளாமணி என்பதையும் அனைவரும் ஒப்புவர். " இவ்வளவு இனிமையாகச் சொல்லும் செய்யுள்கள் தமிழில் சிலவே எனலாம்; சிந்தாமணியிலும் இந்த ஓட்டமும் இனிமையும் இல்லை" என்பது தெ. பொ. மீ யின் பாராட்டுரை. சிந்தாமணியின் விருத்த யாப்பு இடையிடையே தடைப்பட்டுச் செல்கின்றது. சூளாமணியோ செப்பமுற்ற நடையோடு விளங்குகின்றது" என்பது கி. வா. ஜகன்னாதனின் சான்றுரை, "விருத்தப்பாவைக் கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றிய போதிலும், சில இடங்களில் அவரையும் மிஞ்சி விட்டார் என்று கூறலாம்" என்பது டாக்டர் மு. வரதராசனின் வாய்மையுரை.
தோலாமொழித் தேவரின் சூளாமணி வழங்கும் சாலச் சிறந்த கவியழகை இரண்டு பாடல்களில் இங்கே கண்டு களிப்போம்: "யானை விரட்ட அஞ்சி ஓடிய ஒரு மானுடன் ஆழ் கிணற்றில் விழும்போது அக்கிணற்றில் பாம்புகள் இருப்பதைக் கண்டு ஒரு கொடியைப் பற்றித் தொங்கினான். மேலே மத யானை; கீழே விஷ நாகம், இரண்டுக்கும் இடையே அஞ்சிச் சாகும் அம்மானுடன் வாயில் ஒரு தேன் துளி விழுகின்றது. மனிதன் யானையாலோ, அல்லது நாகத்தாலோ இறப்பது உறுதியென்ற உண்மை அறிந்த நிலையிலும் அந்தத் தேன் துளியைச் சுவைத்து இன்புறும் தன்மையதுவே மானுடர் வாழ்வு. இதனை அறிந்து நடப்பாயாக" என்று உலக வாழ்வின் இயல்பைக் கூறுகின்றது இப்பாடல்:
'ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம்; மதித்தனை கொள்நீ'
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானிலத்து அழகைப் பாநலத்தோடு குழைத்துக் கொடுக்கும் பாடல் இது:
'வானிலம் கருவிய வரையும் முல்லைவாய்த்
தேனிலம் கருவிய தினையும் தேறல்சேர்
பானலம் கழனியும், கடலும் பாங்கணி
நானிலம் கலந்து பொன் நாலும் நாடாதே'

0 கருத்துகள்