செந்தமிழ் வல்ல சுந்தரர் திருமுனைப் பாடி நாட்டில், திருநாவலூரில் சடையனார்க்கும், இசை ஞானியார்க்கும் தவப் புதல்வராக அவதரித்தார். இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர். நரசிங்க முனையரையர் என்னும் நாடாளும் மன்னன் இவரைத் தம் சுவிகாரப் புதல்வனாக எடுத்து வளர்த்தான்.
கைலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரரே இந்த நம்பி ஆரூரர். அதனால் ஆரூரர், திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில் முக்கண்ணன் முதியவன் வடிவத்தில் வந்து இவரைத் தடுத்தாட்கொண்டான். பின், இவர் 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' எனத் தொடங்கும் பாடல் முதல் பல்லாயிரம் பாடல்களால் பரமன் புகழைப் பாடினார்.
சுந்தரர், திருவாரூரில் பரவை நாச்சியாரையும், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் மணந்து கொண்டார். தம்பிரான் தோழன், சேரமான் தோழர், திருநாவலூரர், வான் தொண்டர், ஆளுடைய நம்பி என்னும் வேறுபெயர்கள் உண்டு. இறுதியில் சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலை அடைந்தார்.
சுந்தரர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் வாழ்ந்தவர். மொத்தம் முப்பத்தெண்ணாயிரம் பதிகங்கள் இவர் பாடியதாகக் கூறுவர் , திருமுறை வகுத்தபோது கிடைத்தவை 100 பதிகங்களே . இன்று 1026 பாடல்கள் கிடைக்கின்றன. இவை ஏழாம் திருமுறையாக அமைக்கப் பெற்றுள்ளன.
கருமிகளை வீணாய்ப் பாடுவதைவிடக் கருணைக் கடவுளான கண்ணுதலானைப் பாடிப் பயன் பெறுங்கள் என்று புலவர்க்குச் சுந்தரர் அறிவுரை கூறும் பாடல் அனைவராலும் பாராட்டப்படுவது:
'மிடுக்கி வாதனை வீம னேவிறல்விசயனே வில்லுக் கிவன் என்றுகொடுக்கி லாதனைப் பாரியே என்றுகூறினும் கொடுப் பாரிலைபொடிக் கொள் மேனியெம் புண்ணியன்புகலூரைப் பாடுமின் புலவர்காள்அடுக்கு மேல் அமருலக மான்வதற்குயாதும் ஐயுற வில்லையே'.
இறைவன் பெருமையைக் கூறும் சுந்தரர் பாடல்களில் அனைவரும் அறிந்த - அறிய வேண்டிய பாடல் மழபாடி மாணிக்கப் பாடல்.
'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமேஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!'
பெரிய புராணம் பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது, சுந்தரர் பாடிய 'திருத்தொண்டத் தொகை'யே ஆகும். அரசன் அடியார் அனைவர்க்கும் தம்மை அடியவனாகக் கூறும் பாடல் படித்துப் படித்து மகிழத்தக்கது. அதன் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்;திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்;முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்;ஆருரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!
சிந்தை மயக்கும் இத்தகைய பாடலை இயற்றிய சுந்தரருக்கு 'அடியேன்' என்று சொல்லாதவர்கள், தமிழ் கல்லாதவர்களே!
0 கருத்துகள்