8. பழமொழி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க பெருமை பெற்றது, பழமொழி. இந்நூற் பாடல் ஒவ்வொன்றும் ஈற்றடியில் ஒரு பழமொழியைப் பெற்று இருப்பதால் 'பழமொழி' எனும் பெயர் பெற்றது. நூலில் 400 பாக்கள் உள்ளமையால் இது 'பழமொழி நானூறு' என்னும் பெயராலும் குறிக்கப்பட்டது.
பழமொழி என்பது பண்டுதொட்டுப் பழக்கத்திலிருந்து வழிவழியாக மக்களால் வாய்மொழியாக வழங்கப்பட்டு வருவதாகும். பழமொழி ஒன்றைப் புதிதாய்ப் படைத்து வழங்கும் முறை இல்லை.
'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்ஒண்மையும் என்று இவை விளங்கத் தோன்றிகுறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்ஏது நுதலிய முதுமொழி என்ப.
என்பது பழமொழியாகிய முதுமொழிக்குத் தொல்காப்பியர் வகுத்த இலக்கணம். இதற்கு உரை வழங்கிய நச்சினார்க்கினியர், 'பழமொழி இவ்விலக்கணம் பற்றிச் செய்தது' எனக் குறித்துள்ளார்.
பழமொழியைத் தம் பாடலில் பதித்துப் பாடுவது சங்க காலத்திலும் இருந்தது.
'அம்ம வாழி, தோழி, இம்மைநன்றுசெய் மருங்கில் தீது இது' என்னும்தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்'
என்பன அகநானூற்றுப் பாடல் வரிகள். பழமொழிகளைக் கொண்ட பாடல்களால் ஆக்கப்பட்ட முதல் நூல், 'பழமொழி'.
இந்நூலாசிரியர் பெயர் முன்றுறை அரையனார் . அரையன் என்பதால் இவர் குறுநில அரசர் எனத் தெரிகிறது. இவர் அரையன் என்னும் பட்டம் பெற்ற அரசியல் அதிகாரி எனவும் கூறுவர் . இவரது இயற்பெயர் தெரியவில்லை. முன்றுறை என்பது ஊர்ப்பெயர். ஆற்றங்கரை ஊர்களுக்கு இப்பெயர் இருத்தலைக் கொற்கை முன்றுறை, காவிரி முன்றுறை, கழார் முன்றுறை, திருமருத முன்றுறை என வழங்கும் பெயர்களால் அறியலாம். அரையனார் ஆண்ட முன்றுறை எது என்பது தெரியவில்லை . இந்நூலைப் பதிப்பித்த செல்வக் கேசவராய முதலியார் முன்றுறை, பாண்டிய நாட்டில் உள்ள ஊர் எனக் குறிக்கிறாரே அன்றி, விளக்கம் தரவில்லை. அரையனார் சமணர் என்பது நூலின் முதற் பாடலான கடவுள் வாழ்த்துப் பாடல் மூலமும், தற்சிறப்புப் பாயிரத்தில் 'பிண்டியின் நிழல் பெருமான் அடி வணங்கி' என வருவதாலும் அறியலாம். இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினர் .
திருக்குறள், நாலடியார் வழங்கும் நீதிகள் பல வடமொழி நூலில் உள்ளன. 'அவ்விரு நூல்களிலும் காணப்படாத அரிய உண்மைகள் சிலவற்றை இதன் ஆசிரியர் தம் நுண்ணறிவாலும், அனுபவத்தாலும் அறிந்து கூறியிருப்பது பெரிதும் பாராட்டுக்கு உரியதாகும்' எனப் பாராட்டுவர் சதாசிவப் பண்டாரத்தார். பல்யானை செல்கெழு குட்டுவன், கரிகாலன், பொற்கைப் பாண்டியன் , பாரி, பேகன் முதலியோரின் வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது, பழமொழி நூல்.
கரிகாலன் நரைமுடித்து நீதி வழங்கிய நிகழ்ச்சியை விளக்கும் பழமொழிப் பாடல் மிகவும் புகழ் பெற்றது:
'உரை முடிவு காணான் , இளமையோன் என்றநரை முது மக்கள் உவப்ப, நரை முடித்து,சொல்லாமல் முறை செய்தான், சோழன், குலவிச்சைகல்லாமல் பாகம் படும்.
9. சிறுபஞ்சமூலம்
'சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்தரிவேர் ஆகிய ஐந்து வேரும் சிறுபஞ்சமூலம் எனப்படும்' என்று பதார்த்த குணசிந்தாமணியும், பொருள்தொகை நிகண்டும் கூறுகின்றன. இதைப்போலவே வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை ஆகிய ஐந்தின் வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்று அவ்விரு நூல்களே குறிப்பிடுகின்றன. சிறுபஞ்சமூலம் ஒரு மருந்து; இது 'பேசு பல் நோய் தீர்க்கும்'. இது போல, ஐந்து அரிய உண்மைகளைக் கூறும் பாடல் ஒவ்வொன்றும் உயிருக்கு வரும் அறியாமை என்னும் நோயைப் போக்கி, இம்மை மறுமை இன்பங்களைத் தரும். எனவே இந்நூல் 'சிறுபஞ்ச மூலம்' என்னும் பெயர் பெற்றது. இது தொல்காப்பியம் குறிப்பிடும் அம்மை என்னும் வனப்புப் பெற்றது. இந்நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று, பாயிரப் பாடல்கள் இரண்டு நீங்கலாக 102 பாக்கள் உள்ளன.
இந்நூலை இயற்றியவர் காரியாசான். இவரை 'மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன்' என்று பாயிரப் பாடல் கூறுகிறது. மாக்காயனார் மதுரையில் இருந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்றவர் காரியாசான். 'ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் மாக்கயனார் மாணவரே. காரியாசான் மதுரையில் வாழ்ந்தவர். இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு, காரியாசான் சமணர் என்பதை, கடவுள் வாழ்த்துப் பாடலாலும், பாயிரப் பாடலாலும், நூலில் வரும் சமணசமய கருத்துக்களாலும் உணரலாம்.
நான்கு வரிகளில் ஐந்து அரிய உண்மைகளைக் கூறும் காரியாசானின் புலமைத் திறம் சீறியது. 'செந்தமிழ் தேற்றான் கவி செயலும் - நகை ' என்றும், பல நூல்களை ஆசானை அடைந்து கேட்பவன் 'கேடு இல் பெரும் புலவன் என்றும் காரியாசான் கூறுவன . அவரது தமிழ் இலக்கியப் பற்றைக் காட்டும். மனநோய்க்கு மருந்தாகும் 'சிறுபஞ்ச மூலம் பாடல் ஒன்றின் முழு வடிவமும் காணல் காரியாசானின் கவித்திறனை நன்கு உணரச் செய்யும்.
'இன்சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லாவன் சொல்லான் ஆகும் பகைமையன் ; மென் சொல்லின்ஓய்வு இல்லா ஆர் அருளாம் அவ்வருள் நல்மனத்தான்வீவு இல்லா வீடுஆய் விடும்.'

0 கருத்துகள்