முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரிகடுகம் - ஆசாரக் கோவை

 

6. திரிகடுகம் 

    கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட, மொத்தம் 100 பாக்களைக் கொண்டது, 'திரிகடுகம்'.  பிணி நீக்கி அணி செய்யும் மருந்துப் பொருளே, திரிகடுகம்.

    திவாகரநிகண்டு  "திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி" என்று பொருள் கூறும்.  வடமொழியில் வழங்கும் சுச்ருதம், அஷ்டாங்க ஹ்ருதம் என்னும் மருத்துவ நூல்களும், திரிகடுகம் என்னும் மருந்தின் சிறப்பைக் கூறும்.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருளும் உடல் நோய் நீக்கும்.  அதுபோல அந்நூல் பாடல் உரைக்கும் மூன்று அறக்கருத்துகள் உள்ளத்தின் நோய் நீக்கும்.  எனவே இது திரிகடுகம் எனப் பெயர் பெற்றது.  இதனை,

'உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;'
அலகில் அகநோய் அகற்றும் - நிலைகொள் 
திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம் 
மருவு நல்லாதன் மருந்து.

என்னும் பாயிரச் செய்யுள் பகர்கின்றது.  

    இந்நூலாசிரியர் பெயர் நல்லாதனார்.  ஆதன் என்னும் இயற்பெயர் 'நல் ' என்னும் பண்பு நலத்து அடைமொழியினையும், உயர்வைக் குறிக்கும் 'ஆர்' என்னும் விகுதியையும் பெற்று "நல்லாதனார்" ஆயிற்று.  சங்க காலத்தில் ஆதன் என்னும் பெயர் சேர நாட்டுப் பகுதியில் பெரு வழக்கில் இருந்தது, என்பர்.  இந்நூலாசிரியரும் சேர நாட்டுக்கருகே உள்ள  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பதையும் பாயிரத்தால் அறிகிறோம்.  பாயிரப் பாடல் 'செரு அடு தோள் நல்லாதன்' என்பதால், நூலாசிரியர் வாளேந்திப் போர் செய்து புகழ் பெற்ற  பெரு வீரர் என்பது புலனாகிறது. இவர் காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு.  கடவுள் வாழ்த்துப் பாடலில் பூவைப் பூவண்ணன் அடியின் செயல்கள் கூறித் திருமால் பெருமை பேசுவதால், நல்லாதனார் வைணவர் எனக் கொள்கிறோம்.

    நல்லாதனார் வள்ளுவர் குறள் , நாலடியார் முதலிய நீதி நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர்.  அவற்றின் கருத்துகளைத் தம் நூலில் பயன்படுத்தியுள்ளார்.  ஒவ்வொரு பாடலும் முதல் மூன்று அடிகளில் மூன்று கருத்துகளைச் சொல்லி, மூன்றாம் அடியின் ஈற்றில் 'இவை மூன்றும்', 'இம்மூன்றாம்', 'இம்மூவர்', 'இவர் மூவர்' என்னும், எண்ணுத் தொகைச் சொல் ஒன்று அமைத்து, நான்காம் அடியில் ஒரு பொதுக் கருத்தை வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ளது.  

    இருள் உலகமாகிய நரக உலகை அடையாமல் உய்ய மூன்று வழிகளை நல்லாதனார் நவில்வதைப் பயில்வோம்.

'ஈதற்குச் செய்க பொருளை; அறநெறி 
சேர்தற்குச் செய்க பெரு நூலை; யாதும் 
அருள் புரிந்து சொல்லுக சொல்லை; இம்மூன்றும் 
இருள் உலகம் சேராத ஆறு'.

7. ஆசாரக் கோவை 

    ஒருவர் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்க முறைகளைத் தொகுத்துக் கூறும் நூல் 'ஆசாரக் கோவை'.  ஆசாரம் என்னும் வட சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருள்.  'அச்சமே கீழ்களது ஆசாரம்' என்னும் குறளில் வள்ளுவர் இச்சொல்லை இதே பொருளில் பயன்படுத்தி உள்ளார்.  இந்நூலில் நூறு வெண்பாக்கள் உள்ளன.  குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை  வெண்பா, சவலை வெண்பா ஆகிய பலவகை வெண்பாக்கள் உள்ளன.  முதல் வெண்பாவின் ஈற்றடி 'ஆசார வித்து' என முடிவதும் நூறாவது வெண்பா 'ஆசாரம் வீடு பெற்றார்' என முடிவதும், நூலின் தலைப்பை நினைவு கூர்வதாய் அமைந்துள்ளன.

    இந்நூல் கருத்துகள் சுக்ர ஸ்மிருதியில் இருந்து தொகுத்தவை என்றும், போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், முதலிய வடமொழி நூல்களின் கருத்துக் கோவையே இது என்றும் கூறுவர் .  இலக்கண  விளக்க உரையாசிரியரும் வழி நூல் வகையுள் ஒன்றாகிய மொழி பெயர்த்தலுக்கு இந்நூலை உதாரணமாகக் காட்டியுள்ளார்.  இது அம்மை என்னும் வனப்பு வாய்ந்தது.

    இந்நூலாசிரியர் பெயர், கயத்தூர் பெருவாயில் முள்ளியார்.  கயத்தூர், பெருவாயில் ஆகிய இரண்டுமே ஊர்ப் பெயர்கள்.  முள்ளியார் வாழ்ந்த ஊர் பெருவாயில் என்றும், அவருடைய முன்னோர் வாழ்ந்த ஊர் கயத்தூர் என்றும் கூறும் சதாசிவ பண்டாரத்தார், 'பெருவாயில்' என்பது புதுக்கோட்டை நாட்டில் குளத்தூர் தாலுகாவில் இருந்திருத்தல் வேண்டும் என்பது அந்நாட்டிலுள்ள சில கல் வெட்டுகளால் அறியப்படுகின்றது' என்கிறார்.  இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.  'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி  ஏத்தி' என்று, திரிபுரம் எரித்த சிவபிரானைச் சிறப்புப் பாயிரம் குறிப்பிடுவதால் முள்ளியார் சைவர் எனத் தெரியலாம்.

    இந்நூலில் கொள்ளத்தக்க ஆசாரங்களையும் தள்ளத்தக்க ஆசாரங்களையும் முள்ளியார் சொல்கிறார்.  உண்ணும் முறை, நீராடும் நெறி, துயிலும் விதம், உடையணியும் வகை, படிக்கத் தகாத நாள்கள் முதலியன பற்றி இந்நூல் உரைக்கும் முறைகளைத் தமிழர் ஒப்பமாட்டார்கள்.  இக்கால மக்கள் ஏற்கமுடியாத நெறிகள் பல இதன் கண் உள.  எனினும் அக்கால வட நூலார் வகுத்த நெறிமுறைகளை அறிதற்கு இந்நூல் துணை செய்யும்.

கொள்ளத்தக்கவை இவை எனக் கூறும் பாடல் இது:

'வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும் 
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதின் 
தந்தையும் தாயும் தொழுது எழுக' என்பதே 
முந்தையோர் கண்ட முறை .

'தள்ளத் தக்கவை' இவை எனக் கூறும் பாடல் இது:

நகையொடு , கொட்டாவி, காறிப்பு , தும்மல் 
இவையும் பெரியார்முன் செய்யாரே' செய்யின் 
அசையாது நிற்கும் பழி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...