Looking For Anything Specific?

தொண்டரடிப் பொடியாழ்வார் - திருப்பாணாழ்வார் - குலசேகர ஆழ்வார்

 தொண்டரடிப் பொடியாழ்வார் 

    சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் முன் குடுமிச் சோழிய அந்தணர் குலத்தில் தோன்றியவர் தொண்டரடிப் பொடியாழ்வார்.  இவரது இயற்பெயர் விப்பிர நாராயணர்.  இவர் திருவரங்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து, திருமாலுக்குப் பூமாலைகளையும், துளசி மாலைகளையும் சமர்ப்பித்துப் பெரியாழ்வாரைப் போல மலரத் தொண்டாற்றி வந்தார்.

    உறையூரில் சோழன் அவையில் ஆடல் நிகழ்த்திப் பெரும் பரிசு பெற்றுத் திரும்பிய தேவதேவி என்னும் தாசி, இவரது நந்தவனத்தில் தற்செயலாகத் தங்க நேர்ந்தது.  இவர் தேவதேவியின் அழகைப் பொருட்படுத்தாததைக் கண்டு, தன்  அழகில் கர்வம் கொண்ட தேவதேவி இவரை வசப்படுத்திக் காட்டுவதாகச் சபதம் செய்தாள் .  அதன்படி இவரது நந்தவனத்தில் குற்றேவல் செய்பவளாய்ச் சென்ற தேவதேவி ஒரு மழைக்காலத்து இரவில் விப்பிர நாராயணரை அணுகி, அணைத்துத்தன் சபதத்தில் வெற்றி பெற்றாள் .  விப்பிரநாராயணரின் பொருள் குறைந்ததும், தேவதேவி அவரை விட்டு விலகினாள் .  திருமால் பக்தரான விப்பிர நாராயணர் தேவதேவியின் பக்தராகி அவள் இல்லத்து முன் காத்து நின்றார்.  அவரை ஆட்கொள்ள எண்ணிய திருமால் கோயிலின் பொற்கிண்ணம் ஒன்றை அந்தணர் வடிவில் எடுத்துச் சென்று தேவதேவியிடம் விப்பிர நாராயணர் அளித்ததாக கொடுத்துவிட்டு வந்தார்.  பொற்கிண்ணத்தைத் தேடியவர்கள் அதனை தேவதேவியின் இல்லத்தில் கண்டு அதைக் களவாடியவர் விப்பிர நாராயணர் என்று இவரைத் தண்டித்துச் சிறையிட்டனர்.  திருமால் அரசனின் கனவில் தோன்றி உண்மையை உரைக்க, அதனால் விப்பிர நாராயணர் விடுதலை பெற்றார்.  இது போலவே பிறவி என்னும் சிறையிலிருந்தும் விடுபடத் தெய்வப் பாடல்கள் பாடித் தொண்டரடிப் பொடியாழ்வார் ஆயினார்.  இவர் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய இரண்டு பாமாலைகள் தொடுத்துள்ளனர்.  இவர், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

    தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடல்களில் அனைவரும் அறிந்ததும், அனைவரையும் கொள்ளை கொள்வதுமான ஒரு பாடல், பச்சைமா மலைப்  போல் மேனி'ப் பாடலாகும்.

'பச்சைமா மலைபோல் மேனி 
    பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா அமரர் ஏறே 
    ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான் போய் 
    இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் 
    அரங்கமா நகருளானே!'

பிறவா வரத்தையே இறைவன் அடியார்கள் அனைவரும் வேண்டுவர்.  இவரும் தமக்குப் பிறப்பு வேண்டாம் என்று கூறுகின்றார்.  'ஆயுள் முழுவதும் அரங்கனையே போற்றினாலும், அதில் பாதி உறக்கத்தில் வீணாகின்றது. இன்னொரு பகுதி அறிவு பெறாப் பிள்ளைப் பருவமாய்க் கழிகின்றது.  மீதியில், பிணியும் மூப்பும் ஆட்கொள்ளும் காலமும் கணிசமானது.  ஆதலால் 'நூற்றாண்டு வாழ்வதாயினும் பிறவி வேண்டாம்' என்று இவர் கூறுவதும் நினைத்து இன்புறற்குரியது.  எல்லாக் கணமும், இறைவனையே எண்ண விரும்பும் இவர், அறிவு செயல்படாத பிள்ளைப் பருவத்தையும், உடல் செயல்படாத உறங்கும் தருணத்தையும், உபாதை தரும் நோய் மூப்புப் பருவத்தையும் உடைய மனிதப் பிறவியை விரும்பாததைக் கூறும் பாடல் யாவரும் விரும்பி ஓதும் பாடல்:

'வேதநூல் பிராயம் நூறு 
    மனிசர் தாம்புகு வரேனும்
பாதியும் உறங்கிப்போகும் 
    நின்ற இப்பதி னையாண்டு 
பேதை பாலகன தாகும் 
    பிணிபசி  மூப்புத் துன்பம் 
ஆதலால் பிறவி வேண்டேன் 
    அரங்க மாநகரு ளானே!'

    அரங்கனைத் துயில் எழுப்பும் 'திருப்பள்ளி யெழுச்சி ' வண்டமிழுக்கும் வைணவத்துக்கும் எழுச்சி தரும் சீரார்ந்த சிற்றிலக்கியமாகும்.  இதன் பத்துப் பாடல்களும் இறை பாடல்களாகவும், காலையரும்பும் கவினைக் கூறும் இயற்கைப் பாடல்களாகவும் இன்பம் பயப்பன.

'புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்;
    போற்றுக் கங்குல் புகுந்தது புலரி
 கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம் 
    களிகண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த 
அலங்கலந் தொடையல் கொண்டடியினைப் பணிவான் 
    அமரர்கள் புகுந்தனர்; முதலில் அம்மா 
இலங்கை யர்கோன் வழிபாடுசெய் கோயில் 
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே'!

திருப்பாணாழ்வார் 

    சோழவள நாட்டின் தொன்மைத் தலைநகராய்த்   திகழ்ந்த உறையூரில் பாணர் குலத்தில் உதித்தவர் திருப்பாணாழ்வார்.  இவர் கையிலே யாழினை ஏந்தித் திருமால் புகழைப் புல்லும் பூண்டும் உருகப் பாடி வந்தார்.  தாம் தாழ்ந்த குலத்தவர் என்பதால் திருவரங்கத் தலத்தை மிதிக்க அஞ்சித் திருக்காவிரியின் தென்கரையில் யாழும் கையுமாக நின்று அரங்கன் இருந்த திசை நோக்கித் தொழுது பாடினார்.    

    திருவரங்கனுக்குமஞ்சன நீர் கொண்டு செல்லப் பொற்குடத்துடன் காவிரித்துறை புகுந்த லோகசாரங்கன் என்னும் அந்தணர் தலைவர், இவரைக் கண்டு, 'எட்டச் செல்' என்று பணித்தார்.  லோகசாரங்கரோடு வந்தவர்கள் கல்லெறிந்து பாணரைத் தாக்கினார்கள்.  அதனால் திருக்கோயிலில் அரங்கன் நெற்றியில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டது.  பாணரைத் தோளிலே சுமந்து கொண்டு வருமாறு அரங்கன் ஏவ, லோகசாரங்கர் இவரைத் தோளிலே சுமந்து சென்று இறைவன் திருமுன் சேர்த்தார்.  அரங்கனைப் பாணர் சேவித்து, "அமலனாதிபிரான்" என்னும் பிரபந்தம் பாடினார்.

    திருப்பாணாழ்வாரின் காலம் இன்னது என உறுதியாகக் கூற முடியவில்லை.  எனினும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் காலத்தவர் இவர் எனக் கூறுவர் .

    அரங்கனின் அழகைக் கண்டு மனத்தைப் பறிகொடுத்த நிலையைத் திருப்பாணாழ்வாரின் திருவாக்கால் தெரியலாம்.

'ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் 

ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் 

கோலமா மணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோர் எழில் 

நீலமேனி ஐயோ நிலைகொண்டது என் நெஞ்சினையே 

    அரங்கனைக் கண்ட விழிகள் வேறெதையும் காணாது என்பதையும் ஆழ்வார்,

'அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதனைக் 
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.'

என்று உணர்ச்சி வயப்பட்டவராய்ப் பாடுகின்றார்.

    திருப்பாணாழ்வாரின் வாழ்வும் வாக்கும் உண்மைப் பக்தியின் விளக்கமாய் அமைந்துள்ளன.

குலசேகராழ்வார் 

    குலசேகரர், திருவஞ்சைக்களம் என்னும் ஊரில், திருடவரதன் என்னும் அரசனின் திருக்குமரனாய் அவதரித்தார்.  இவர் சேரநாட்டு மன்னர்.  தம் பாடல்களில் இவர் தம்மை, கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன் எனக் கூறிக் கொள்வதால் பாண்டிய, சோழ நாட்டுக்கும் தலைவராய் இருந்தாரென்பது தெரிகின்றது.

    ஒரு முறை புராணிகர் இராமாயணக் கதையை இவர் முன்பு கூறி வந்தார்.  தையில், "கரதூடணர் பதினாயிரக் கணக்கான அரக்கர்களுடன் இராமபிரானைச் சூழ்ந்து கொண்டனர்" என்று கூறுவதைக் கேட்ட குலசேகரர், அது அப்போது நடக்கும் உண்மை நிகழ்ச்சியாகக் கருதி, இராமானுக்குத் துணையாகச் செல்லப் புறப்பட்டார்.  இதையறிந்த புராணிகர், " இராமன் தனியொருவனாக நின்று அவ்வரக்கர் சேனையை அழித்தான்",என்று திறமையுடன் கூறினார்.   இதைக் கேட்ட குலசேகரர் சினம் தணிந்து அடக்கினார்.

    குலசேகரர் மண்ணாளும் வாழ்வை வெறுத்துத் தம் குமாரர்களுக்குப் பட்டம் சூட்டித் தாம் துறவு மேற்கொண்டு வைணவத் தலங்களுக்குச் சென்று வழிபட்டுப் பாசுரங்கள் இயற்றியருளினார்.  இவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் என்பர்.

    குலசேகராழ்வார் 'பெருமாள் திருமொழி' யைப் பைந்தமிழிலும் 'முகுந்த மாலை'யை வடமொழியிலும் இயற்றியுள்ளார்.

    திருமாலிடம் கொண்ட பக்தியினால், அவர் எழுந்தருளிய திருத்தலத்தில் மீனாய்ப் பிறக்கவும் விரும்புகின்றார் குலசேகரர்.

'ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் 
தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடச் சுனையில் 
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே'.

    இறைவன் பக்தர்களைப்  பலமுறை துன்பத்தில் வாடச் செய்கின்றான்.  என்றாலும் அடியவர்கள் அவனையே நினைந்து அவன் அருளையே நாடுகின்றார்கள்.  இதற்கு, மருத்துவன் கட்டி ஒன்றை வாளால் அறுத்துத் தீயால் அதனைச் சுட்டாலும் அவனை வெறுக்காத நோயாளியைக் குலசேகரர் உவமை கூறுவது மிக உயர்ந்த உவமையாகும்.

'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மா! நீ 
ஆளா, உனது அருளே பார்ப்பன் அடியேனே '.

    குலசேகரர் கோசலையாகிய தாயின் நிலையில் நின்று இராகவனுக்குப் பாடிய தாலாட்டு இவருக்குப் பாராட்டுத் தருவதாகும்.

'மன்னு புகழ்க் கௌசலைதன்
    மணிவயிறு வாய்த்தவனே 
தென்னிலங்கைக் கோன்முடிகள் 
    சிந்துவித்தாய் செம்பொன்சேர் 
கன்னிநன்மா மதிபுடை சூழ் 
    கணபுரத்து என் கருமணியே 
என்னுடைய இன்னமுதே 
    இராகவனே தாலேலோ ...'

    குலசேகரரின் பாடல்கள் பருகுதற்கினிய இன்னமுது; பாவங்கள் நீக்கும் நன்மருந்து.



கருத்துரையிடுக

0 கருத்துகள்