நம்மாழ்வார்
ஆழ்வார்களுள் மிகவும் போற்றப்படுபவர், நம்மாழ்வார். இவர் மாறன் காரிக்கும், உடைய நங்கைக்கும் மகவாகத் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரில் பிறந்தார். பிறப்பு முதலே யோகத்தில் ஆழ்ந்து பதினாறாண்டுகள் ஒரு புளிய மரத்தடியில் இருந்தார். இவருக்குச் சடகோபன், காரிமாறன், வகுளாபரணன், பராங்குசன் என்னும் பெயர்கள் உள்ளன.
இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. இந்நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில் அமைச்சராய்த் திகழ்ந்த மாறன் காரியே நம்மாழ்வாரின் தந்தை எனவும் கூறுவர். நம்மாழ்வார் 35 ஆண்டுகள் வாழ்ந்தனர் எனது தெரிகிறது.
மதுரகவி வடநாட்டில் அயோத்தியில் இருந்தபோது நம்மாழ்வார் தோற்றத்தை அறிந்து தென்னாட்டுக்கு வந்தார். இவர் நம்மாழ்வாருக்குச் சேவை செய்து, ஆழ்வார் அருளிய திருவாய் மொழியை ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார்.
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகியன முறையே சாமவேதம், யஜுர் வேதம், ரிக்கு வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றின் சாரம் என்பர்.
திருமாலே கடவுளரில் சிறந்தவன். அவனே தேவர்களின் தலைவன் என்கிறார் நம்மாழ்வார்.
'உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்,மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்,அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்,துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே'.
ஒரு கடவுளாயும், பல கடவுளாயும், ஒன்றா, பலவா, என மயங்கச் செய்பவனாயும் திருமால் திகழ்வதை,
'ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்றநன்றெழில் நாரணன்'
என்னும் அடியால் குறிப்பிடுகிறார், ஆழ்வார்.
'எல்லாத் தெய்வமும் எங்கள் திருமாலே! உங்கள் இட்ட தெய்வத்தை வழிபட்டால், அந்த வழிபாடு திருமாலைச் சென்றடையும்' என்று நம்மாழ்வார் கூறி, "ஒருவனே தேவன் அத்தேவன் திருமாலே!" என்கிறார்.
'வம்மின் புலவீர்! நும்மெய்வருத்திக் கைசெய்து உய்ம்மினோ!இம்மன் னுலகில் செல்வர்இப்போது இல்லை! நோக்கினோம்நும்இன் கவிகொண்டு நும்நும்இட்ட தெய்வம் ஏத்தினால்செம்மின் சுடர்முடிஎன்திரு மாலுக்குச் சேருமே!
அடியவர்க்கு எளியவனாகிய திருமலை அவர்கள் விரும்பும் சுவை உணவாக உவமித்து இன்புறுகிறார் ஆழ்வார்:
'மிக்கார் வேதவிமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே!'கறந்த பால் நெய்யே! நெய்யின் சுவையே!கடலினுள் அமுதமே! அமுதில்பிறந்த இன் சுவையே! சுவையது பயனேபின்னைதோள் மணந்த பேராயா !தேனும் பாலும் கன்னலும் அமுதமாகி தித்தித்து என்ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை
திருமால் அங்கிங்கு எனாதபடி எங்கும் பரந்து யாவுமாய் நிற்கின்ற இயல்பைக் கூறுகிறது அடுத்துவரும் பாடல்.
திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவைமிசைப்படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்உடல்மிசை உயிர்எனக் கரந்து எங்கும் பரந்துளன்சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே!
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் திலகம் போலத் தலைமை பெற்றது, நம்மாழ்வாரின் திருவாய்மொழி. வைணவர்கள் இதனை நாளும் ஓதி உவகையும் உயர்வும் பெறுகின்றனர். 'திராவிட வேத சாரம்' 'செந்தமிழ் வேதம்' 'ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரம்' என்றெல்லாம் இப்பிரபந்தம் போற்றப்படுகிறது. இதன் வியாக்கியானங்களைப் 'பகவத் விஷயம் என்று பாராட்டி மகிழ்வர்.
மதுரகவியாழ்வார்
மதுரகவியாழ்வார் அந்தணர் குலத்தில் , திருக்கோவலூரில் அவதரித்தவர். வடநாட்டுத் தலத்திலிருந்து நம்மாழ்வாரின் அவதாரத்தை அறிந்து, அவரை அடைந்து அவர் சீடரானவர். நம்மாழ்வார் திருமாலடி அணைந்த பிறகு திருக்குருகூரில் அவரது தெய்வத் திருவுருவத்தை நிறுவி வழிபட்டார். நம்மாழ்வாரின் பெருமையை உலகறியச் செய்தார்.
இவர் நம்மாழ்வாரையே இறைவனாகக் கருதிப் பாடிய 'கண்ணிநுண் சிறுத் தாம்பு ' ப் பாடல்கள், இவ்விருவர் தம் சிறப்பையும் வெளிப்படுத்தும் திறத்தன.
' கண்ணிநுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன் என்னப்பன்இல்நண்ணித்தென் குருகூர் நம்பி யென்றக்கால்அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே'.'தேவுமற் றறியேன் குருகூர் நம்பிப்பாவின் இன்னிசை பாடித் திரிவனே.
திருமங்கையாழ்வார்
சோழ மண்டலத்தில், திருவாலி நாட்டில், திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் பிறந்தவர் திருமங்கையாழ்வார். சோழ மன்னனின் சேனைத் தலைவனாக, கள்ளர் குலத்தலைவனின் மகனாய் அவதரித்தார். மாவீரராக வளர்ந்த இவர், திருவாலி நாட்டின் மன்னனாகவும், சோழனுக்குப் படைத் தலைவனாகவும் பணியாற்றினார்.
பரம வைணவக் குலத்தைச் சார்ந்த குமுதவல்லியை விரும்பி இவர் மணந்து கொண்டார். மனைவியின் விருப்பப்படி ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுது படைக்க ஒப்புக் கொண்டார். அதனால் சோழனுக்குச் செலுத்தவேண்டிய திறைப்பணத்தை இத்திருத்தொண்டில் செலவிட்டு, அரசனின் சினத்துக்கு ஆளாகிச் சிறைப்பட்டார். திருமால் அருளால் கச்சிப் பதியிலிருந்து பொருள் பெற்றுச் சோழனுக்கு அளித்து விடுதலையடைந்தார்.
பின்பும் அடியார்க்கு அமுது படைக்கப் பொருள் தேவையாயிற்று. அதைப் பெற வழிப்பறியை மேற்கொண்டார். வழிப்போக்கர்களை மறித்து அவர்தம் உடைமைகளைக் கைப்பற்றி அமுது படைக்கும் தொண்டைத் தொடர்ந்தார்.
ஒருநாள் திருமால், தம் தேவியுடன் மணமக்கள் கோலத்தில் வழியே வர, ஆழ்வார் அவர்களையும் தடுத்து நிறுத்தி, அவர்தம் பொருள் அனைத்தையும் கவர்ந்து ஒரு மூட்டையாகக் காட்டினார். அதைத் தூக்க முடியாமல் தவித்தார். "நீர் தான் ஏதோ மந்திரம் போட்டு இம்மூட்டையை நான் தூக்க முடியாமல் செய்தீர்!" என்று மணவாளரான திருமாலிடம் இவர் கூறினார். "அந்த மந்திரத்தை உனக்கும் கூறுகிறேன்" என்று இவரை அருகழைத்த திருமால், நாராயண மந்திரத்தை ஓதி, செந்தமிழ்ப்பனுவல் செய்யவல்ல வைணவப் பக்தராக்கி மறைந்தார்.
திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் நீலன் என்றும், இவர் தந்தையின் பெயர் நீலன் என்றும் இருவகையாகக் கூறுவர் . திருமங்கையாழ்வாருக்குப் பரகாலன், கலியன், கலிகன்றி முதலிய வேறு பெயர்களும் வழங்குகின்றன. இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
இவர் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக் கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் ஆகிய ஆறு நூல்கள் பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார் நாராயண மந்திர உபதேசம் பெற்றதும் பாடிய, 'வாடினேன் வாடி வருந்தினேன்' என்னும் திருப்பாடல் நாராயண மந்திரத்தை அவர் கண்டு கொண்ட ஆனந்தப் பெருக்கை விளக்குகிறது:
'வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்பெருந்துயர் இடும்பையில் பிறந்து!கூடினேன் கூடிஇளையவர் தம்மோடுஅவர்தருங் கல்வியே கருதிஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்உணர்வெனும் பெரும்பதம் திரிந்துநாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்".
திருமால் மீது காதல் கொண்ட தலைவி தான் காணும் எல்லா உயிரையும் அவன் திருநாமத்தையே செப்புமாறு வேண்டும் பாடல், தலைவியின் ஆராக் காதலையும் இறைவனின் அடங்காப் பெரும் புகழையும் பறை சாற்றும் இன்தமிழ்ப் பாடலாகும்:
'கரையாய், காக்கைப் பிள்ளையாய் - கருமாமுகில் போல் நிறத்தன்உரையார் தொல்புகழ் உத்தமனை வரக்கரையாய் காக்கைப் பிள்ளையாய்!கொட்டாய் பல்லிக்குட்டி - குடம்ஆடி உலகளந்தமட்டார் பூங்குழல் மாதவனைவரக்கொட்டாய் பல்லிக்குட்டிசொல்லாய்; பைங்கிளியே - சுடர்ஆழி வலன் உயர்த்தமல்லார் தோள்வட வேங்கடவன் வரச்சொல்லாய்! பைங்கிளியே!
0 கருத்துகள்