Looking For Anything Specific?

திருமழிசையாழ்வார் - பெரியாழ்வார் - ஆண்டாள்

     காஞ்சிபுரத்துக்கு அருகேயுள்ள திருமழிசையில் பார்க்கவர் என்னும் முனிவரின் புதல்வராக அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.  இவரைப் பக்திசாரர் என வழங்குவர்.  இவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.

    திருமழிசையாழ்வார் முதலாழ்வார்களைப் போலச் சமயப் பொறையுடையவர் அல்லர்.  இவர் சமய வாதம் செய்து பிற சமயத்தினரை வென்றார்.  தம் பாடல்களிலும் பிற சமயத்தினரைக் கண்டித்தார்.

'அறியார் சமணர் அயத்தார் பௌத்தர் 
சிறியார் சிவப் பட்டார்கள்.'
 
'நிற்கின்ற தெல்லாம் நெடுமால் என்று ஒராதார் 
கற்கின்ற தெல்லாம் கடை'

என வரும் பாடல்கள் இவர் மறந்தும் புறந்தொழா மகான் என்பதை நிறுவும்.

    இவர் 'திருச்சந்த விருத்தம்' 'நான்முகன் திருவந்தாதி' ஆகியன இயற்றியுள்ளார்.  திருமால் சொல்லாய்.  பொருளாய், சொல்ல முடியாத சோதியாய், எல்லாமாய் இருக்கும் இயல்பை உரைக்கும் திருச்சந்த விருத்தப் பாடலை இங்கே காண்போம். 

'சொல்லினால் தொடர்ச்சிநீ 
    சொல்லப்படும் பொருளுநீ 
சொல்லினால் சொலப்படாது 
    தோன்றுகின்ற சோதிநீ 
சொல்லினால் படைக்கநீ;
    படைக்கவந்து தோன்றினாய்;
சொல்லினால் சுருங்கநின் 
    குணங்கள் சொல்ல வல்லரே.'

    இவருக்குக் கணிகண்ணன் என்னும் ஒரு சீடன் இருந்தான்.  ஒருமுறை திருமழிசையாழ்வார் ஒரு கிழவியைக் குமரியாக மாற்றினார்.  அதையறிந்த அந்நாட்டு மன்னன், தன் முதுமை மாற்றி இளமையளிக்குமாறு வேண்டினான்.  ஆழ்வார் மறுக்க, அவரை ஊரைவிட்டு வெளியேறும்படி பணித்தான் அரசன்.  உடனே கணிகண்ணன், திருமாலிடம் சென்று,

'கணிகண் ணன் போகின்றான் காமருபூங்கச்சி 
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய 
செந்நாப்புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்றன் 
பைந்நாகப் பாயசுருட்டிக் கொள் .

என்று பாட, திருமால் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்.  அரசன் தன் தவற்றை உணர்ந்து அழைக்க, ஆழ்வார், சீடன், ஆண்டவன் ஆகிய மூவரும் காஞ்சிக்குத் திரும்பினர்.  இச்செயலால் பைந்தமிழ்ப் பாட்டுக்குப் பணிந்து நடந்த திருமால், 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என வழங்கப்பட்டார்.

பெரியாழ்வார் 

    பெரிய திருவடியின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் பெரியாழ்வார்.  இவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தோன்றியவர். இவர் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னன் காலத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது.  இப்பாண்டியன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனே எனக் கருதும் கோபிநாதராவ், பெரியாழ்வார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக்கூறுவர்.  இவர் எட்டாம் நூற்றாண்டினர் எனக் கருதுவோரும் உண்டு.

    பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர். பட்டர்பிரான், புதுவை மன்னன், வேயர் தங்குலத் துதித்த விஷ்ணுசித்தன் எனவும் இவர் குறிப்பிடப் பெறுகிறார்.  இவர் வேயர் குலத்துக்குத் தலைவராய்த் திகழ்ந்த ஒரு சிற்றரசர் என்றும் கூறுவர்.  இவர், திருமாலின் சிறப்பை உணர்த்தி வாதம் செய்து, வென்று, மன்னனிடம் பொற்கிழி பெற்றார். 

     தம்மூரில் ஒரு நந்தவனம் அமைத்து, அதில் கிடைத்த மலர்களை மாலையாக்கித் திருமாலுக்குச் சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர்.  இவர்  ஒருநாள் இந்நந்தவனத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்து, அவளைத் தம் சொந்த மகள் போல வளர்த்து வந்தார்.  இம்மகளே ஆண்டாள்.

     பெரியாழ்வார் கண்ணனைச் சிறு குழந்தையாகக் கருதி அவன் செயல்களை விளக்கிப் பாடிய பாடல்கள் சிறப்பு மிக்கவை.  சிறு குழந்தையை நீராட்டிச் சிறு மஞ்சளால் நாக்கு வழித்தல், தொட்டிலில் இட்டுத் தாலாட்டில், சிறு குழந்தைகளுக்கு ஐம்படைத் தாலி அணிவித்தல், அரசிலை அணிவித்தல் முதலியவற்றை இவர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

'நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் 
நாக்குவழித்து நீராட்டும் இந்நம்பிக்கு 
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கு இருந்தவா காணீரே!
மொய் குழலீர் வந்து காணீரே!

என்று, பிறந்த கண்ணனின் பேரழகைக் காண அனைவரையும் அழைக்கிறார், ஆழ்வார்.

     குழந்தைக் கண்ணனின் குறும்புச் செயலால் அன்னை யசோதை படும் அல்லல்களைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.

'கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்;
எடுத்துக் கொள்ளில் மருங்கை இருத்திடும்;
ஒடுங்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்;
மிடுக்கிலா மையால் நான்மெலிந்தேன் ! நங்காய்.'

    பெரியாழ்வார் முதலில் பாடிய திருப்பல்லாண்டு,  வைணவர்களால் தினமும் ஓதப்பெறும் சிறப்புமிக்கது.  இப்பாடலையறியாத வைணவர்களைப் பார்க்க முடியாது.  பல்லாண்டுப் பாடல்கள் பன்னிரண்டுள் ஒன்றை இவண் காண்போம்.

'அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி 
    ஆயிரம் பல்லாண்டு;
வடிவால் நின்வல மார்பினில் வாழ்கின்ற 
    மங்கையும் பல்லாண்டு;
வடிவார் சோதிவ லத்துறை யும்சுடர் 
    ஆழியும் பல்லாண்டு;
படையோர் புக்குமு ழங்கும் அப் பாஞ்ச 
    சன்னியமும் பல்லாண்டே '

ஆண்டாள் 

    பெரியாழ்வார் கண்டெடுத்து வளர்த்த செல்வியே ஆண்டாள்.  நந்தவனத்து மலர்களைக் கொய்து மாலையாக்கி அதைத் தானே அணிந்து பார்த்துப் பின் திருமாலுக்கு அணிவிக்கக் கொடுத்து அனுப்புவாள்.  ஒருநாள் ஒரு கூந்தலிழை மாலையில் இருப்பதைக் கண்ட பெரியாழ்வார், ஆண்டாளை வினவி உண்மையை அறிந்தார்!  வேறு மாலை தொடுக்கச்  செய்து இறைவனுக்கு அணிவித்தார்!  திருமால், 'ஆண்டாள் சூடிய மாலையே நமக்கு மகிழ்ச்சி தருவது' எனக் கூறினார்.  அதனால், ஆண்டாள், 'சூடிக்கொடுத்த நாச்சியார்' எனப் போற்றப்பட்டாள் .  ஆண்டாளைத் திருவரங்கத்துக்கு அழைத்து வந்து தம்மிடம் சேர்ப்பிக்குமாறு திருமால் கட்டளையிட, பெரியாழ்வார் அவ்வாறே சேர்ப்பித்தார்.  ஆண்டாள் திருவரங்கத்தில் திருமாலுடன் இரண்டறக் கலந்தாள் .

    கோதை எனப் பெயர் பெறும் ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இயற்றினார்.  மார்கழி மாதந்தோறும் திருப்பாவை தமிழ் நிலம் முழுவதும் ஓதப் பெறும் உயர்வுபெற்றது.

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாடிக்கொடுத்த திருப்பாவை, பாவை இலக்கியங்களில் காலத்தால் முற்பட்டது என்று சிலர் கூறுவர் .  நீராடப் புறப்பட்ட மங்கையர் இன்னும் எழுந்திராமல் சோம்பியிருக்கும் மங்கையுடன் உரையாடுவது போல ஆண்டாள் பாடிய பாடல் நாடகச் சுவை கலந்த நற்றமிழ் விருந்தாகும்.

'எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?'
சில்லென்று அழையேல்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்'.
'வல்லைஉன் கட்டுரைகள் பாண்டேயுன்  வாயறிதும்'
'வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக'
'ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை'
'எல்லாரும் போந்தாரோ!' 'போந்தார் போந்து எண்ணிக்கொள்!'
'வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்'.

    வேயர் பயந்த விளக்காம் ஆண்டாள் மாயனை நயந்து வியந்து பாடிய 'நாச்சியார் திருமொழி' அரங்கனிடம் அவள் கொண்ட அணை கடந்த காதல் வெள்ளத்தை வெளிப்படுத்துகிறது.

'ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று 
    உன்னித்து எழுந்தஎன் தடமுலைகள் 
மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் 
    வாழகில்லேன் கண்டாய் மன்மதனே'.
 
'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ!
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ!
மருப்பொசிந்த மாதவன்தன்  வாய்ச்சுவையும் நாற்றமும் 
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே'.

    மாதவனை மனப்பதாகக் கனவு காணும் வில்லிப்புத்தூர்க் கோதை, அக்கனவில் கண்ட திருமண நிகழ்ச்சிகளைப் பாடியருளினார்.  அவற்றைப் படிப்போர் கோவிந்தன் - கோதை திருமணத்தை நேரில் காணும் பேறு பெறுவர் ,

'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத 
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் 
கைத்தலம்  பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!'


 


கருத்துரையிடுக

0 கருத்துகள்