Looking For Anything Specific?

பொய்கையாழ்வார்- பூதத்தாழ்வார் - பேயாழ்வார்

பொய்கையாழ்வார் 

    திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் பொய்கையாழ்வார்.  இவர் காஞ்சிபுரத்தில் ஒரு மலரில் அவதரித்ததாகக் கூறுவர்.  இவர், சேரமான் கணைக்கால் இரும் பொறையைச் சிறை மீட்ட பொய்கையார் அல்லர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலப் பொய்கையார்.  பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள்.

    திருமாலின் பாயலான ஆதிசேடன் குடை, சிங்காதனம், புணை , மணி விளக்கு முதலியனவாகப் பணி புரிவதைக் கூறும் பொய்கையார், பக்தர்களும் ஆதிசேடன் போல இறைவனுக்கும் பலவகையிலும் தொண்டாற்றவேண்டும் என்பதைக் குறிப்பால் தெரிவிக்கிறார்.

சென்றால் குடையாம் ; இருந்தால் சிங்காதனமாம்;
நின்றால் மரவடியாம்; நீள் கடலுள் என்றும் 
புணையாம் ; மணி விளக்காம் ; பூம்பட்டாம்; புல்கும் 
அணையாம் திருமாற்கு அரவு.

    திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைக் கழியில், மழைக்காலத்தே முதலாழ்வார்கள் மூவரும் கூடினர்.  ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் எனக் கூறி மூவரும் நின்றபோது, நான்காவதாக ஒருவர் அவர்களிடையே நெருக்கி நின்றார்.  அவ்வாறு நின்றவர் நெடுமாலே! இதை உணர்ந்து ஒவ்வொருவரும் ஓர் உயரிய வெண்பா இயற்றினார்.  பொய்கையார் அப்போது பாடிய வெண்பா எப்போதும் இன்பம் தரும் வெண்பாவாம்.

'வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய 
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை 
இடராழி நீங்குகவே என்று.'

பூதத்தாழ்வார் 

    பொய்கையாழ்வார் பிறந்த நாளுக்கு அடுத்த நாளில் கடல்மல்லையில் (மாமல்லபுரம் ) தோன்றியவர் பூதத்தாழ்வார். இவர் திருமாலும் சிவனும் ஒருவனே என்பதை உணர்த்த, 'ஒருவன் இல்லை; ஒளியுருவம் நின்னுருவம் ஈருருவன் என்பர் இருநிலத்தோர்" எனக் குறிப்பிடுகின்றார்.  தமிழால் திருமாலைப் பாடியதை,

'இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் 
பெருந்தமிழில் நல்லேன் பெரிது'

எனப் பரவசத்தோடு  கூறி, அதுவே தன் பிறவிப் பெரும் பயன் எனக் கருதிக் கலைப்படைகிறார்.

    சங்கப் புலவர்களைப் போலவே இயற்கை எழிலைப் பூதத்தாழ்வாரும் தம் பாடலில் இணைத்து இன்புறுத்துகிறார்.  ஆண்யானை ஒன்று, இரண்டே கணுக்கள் கொண்ட இளம் மூங்கிலைப் பறித்து, அதனைத் தேனிலே தோய்த்துப் பெண் யானைக்குத் தரும் அன்புக் காட்சியை - அகவாழ்வின் மாட்சியை வேங்கடம் பற்றிய பாடலில் தருகிறார் ஆழ்வார்.

'பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று 
இருகண் இகுமூங்கில் வாங்கி - அருகிருந்த 
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் 
வான்கலந்து வண்ணன் வரை'.

    திருக்கோவலூரில் மூன்றாழ்வார்களும் சந்தித்த போது 'வையகம் தகளியா' என்னும் பாடலைப் பொய்கையாழ்வார் பாடினார்.  அவ்வமயம் பூதத்தாழ்வார் பாடியது 'அன்பே தகளியா' என்னும் வெண்பா:

'அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக 
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி 
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு 
ஞானத்தமிழ் புரிந்த நாள்'

    பூதத் தாழ்வாரின் ஞானத் தமிழ்ப் பாடல், இசை நாதமும் இறைப் போதமும் இணைந்தது; ஈனப் பிறப்பை அழித்து இறைவனடியை ஈவதுமாம்.

பேயாழ்வார் 

    பேயாழ்வார் சென்னை மயிலாப்பூரில் அவதரித்தவர்.  பொய்கையார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் எனவும் கூறுவர் .

    திருமாலின் கோலத்தைக் கண்டுகளித்த பேயாழ்வார் அதனைப் பைந்தமிழ்ப் பாடலில் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

'திருக்கண்டேன்; பொன்மேனி கண்டெண்ட்; திகழும் 
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும் 
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன் 
என்னாழி வண்ணன்பால் இன்று.'

    திருமாலின் உந்தியில் உள்ள தாமரை, அவர் கையிலுள்ள சக்கரத்தைக் கதிரவன் எனக் கருதி மலர்கிறது.  மற்றொரு கையிலுள்ள சங்கைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறது.  இவ்வாறு தாமரை மலர்வதும் குவிவதுமாக மயங்கும் தன்மையை ஆழ்வாரின் வெண்பா விளக்குகிறது.  படித்து மகிழ்வோம்; மயங்குவோம்.

'ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய் 
ஓங்கு கமலத்தின் ஒண்போது - ஆங்கைத் 
திகிரிசுடர  என்றும்; வெண்சங்கம் வானில் 
பகரும் மதிஎன்றும் பார்த்து.'     



 

   

கருத்துரையிடுக

0 கருத்துகள்