'திருவாசகத்து உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்னும் பழமொழி எழுமளவு ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தை வழங்கியவர் மாணிக்கவாசகர். திருவாதவூரர் என்னும் இயற்பெயர் பெற்று இவர் கற்றுத் தேர்ந்தவராகி, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றினார். வேந்தனுக்காகக் குதிரைகள் வாங்கத் திருப்பெருந் துறைக்குச் சென்ற மாணிக்கவாசகர், வழியில் குருவடிவில் திகழ்ந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப் பெற்றார். அதனால் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளைச் சிவாலயத் திருப்பணிக்குச் செலவிட்டார். இதை அறிந்த பாண்டியன் இவரைச் சிறையிட்டுத் துன்புறுத்தினான்.
இறைவன் இவர் பொருட்டு நரியைப் பரியாக்கினார்; வைகையில் வெள்ளம் வரச் செய்தார்; பிட்டுக்கு மண் சுமந்தார்; பிரம்படியும் பெற்றார். இறைவனின் திரு விளையாடல்களால் மாணிக்க வாசகரின் மாண்பினை மன்னனும் மக்களும் உணர்ந்தனர். மாணிக்க வாசகர், மந்திரிப் பதவியை நீத்துச் சமயத்தொண்டு மேற்கொண்டு திருவாசகம் அருளினார். சிவபெருமானே மனித வடிவில் தோன்றி, திருவாசகம் முழுவதையும் தம் கைப்பட எழுதினார் எனின், நூலின் பெருமையை மேலும் விளக்குதல் வேண்டுமோ! இறைவன், 'பாவை (திருவெம்பாவை) பாடிய வாயால் கோவை பாடுக' என வேண்ட, இவர் 'திருக்கோவையார்' என்னும் கோவை நூலைப் பாடினார். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
'நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க' எனத் தொடங்கும் திருவாசகம், 'சிவபுராணம்' முதல் 'அச்சோப்பதிகம் ஈறாக, மொத்தம் 15 பதிகங்கள் கொண்டது. திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருப் பொன்னூசல் முதலியன மகளிர் விளையாட்டின் போது பாடுவனவாக அமைக்கப்பட்டன.
'தந்ததுஉன் தன்னை; கொண்டதுஎன் தன்னைசங்கரா ஆர்கொலோ சதுரர்'
என்ற தன்னையளித்து இறைவனைப் பெற்ற தன் திறமையை எண்ணி வியக்கிறார், மாணிக்கவாசகர்.
இறைவனைத் தாம் பற்றியிருக்கும் பான்மையை 'சிக்கெனப் பிடித்தேன்' எனச் சொல்வது மக்களறிந்த மகத்தான உவமையாகும் .
அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!அன்பினில் விளைந்த ஆரமுதேபொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்புழுத்தலைப் புலையனேன் தனக்குச்செம்மையே யாய சிவபதம் அளித்தசெல்வமே! சிவபெருமானே!இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்!எங்கெழுந் தருளுவது இனியே'
பக்தர்களின் நிலையை விளக்கித் தாமும் அவ்வகை மாற அருள் செய்யுமாறு வேண்டுகிறார், மாணிக்கவாசகர்:
'சிரிப்பார், கழிப்பர் , தேனிப்பார்;திரண்டு, திரண்டு உன் திருவார்த்தைவிரிப்பார், கேட்பார் மெச்சுவார்;வெவ்வேறு இருந்துன் திருநாமம்தரிப்பார்; பொன்னம் பலத்தாடும்தலைவா என்பார் அவர்முன்னேநரிப்பாய் நாயேன் இருப்பேனோ?நம்பி இனித்தான் நல்காயே'
திருவாசகத்தின் பெருமையை அறிந்தே, கிறித்துவரான ஜி.யூ. போப் அவர்கள், இதை ஆங்கிலத்தில் பாங்குற மொழி பெயர்த்தார். இதை "நான் கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ் சாற்றினிலே, தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து, உவட்டாமல் இனிக்கிறது" என்று இராமலிங்க அடிகள் புகழ்ந்தார்.
திருவாசகம் போலவே திருக்கோவையார் நூலும் செந்தமிழுக்குப் பெருமை தருவது.
'பல்கால் பழகினும் தெரியா உளவேல்தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்மூன்றிலும் முழங்கும்'
என்று கூறும் 'இலக்கணக் கொத்து' திருக்கோவையார் என்னும் நூல், தொல்காப்பியம், திருக்குறள் போலச் சிறப்பு மிக்கது என்பதை உணர்த்துகிறது.
திருக்கோவையாரை, அந்தணர் 'ஆரணம்' (வேதம்) என்றும், யோகியர், 'ஆகமத்தின் காரணம்' என்றும் காமுகர் 'காம நன்னூல்' என்றும் பாராட்டுவர். இத்திருக்கோவையாரை, "திருச்சிற்றம்பலக் கோவையார்", எனவும் வழங்குவர். இது 400 பாடல்கள் கொண்ட அகத்திணைச் சிற்றிலக்கியம். இது கோவை நூல்களில் காலத்தால் முற்பட்டது.
தலைவனைக் காணும் பாங்கன் கூற்றாக வரும் திருக்கோவைப் பாடலை இங்கே ஒரு குடத் தேனில் ஒரு துளித் தேனைச் சுவைப்பது போலச் சுவைத்து மகிழ்வோம்:
இறைவன் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும்என் சிந்தையுள்ளும்உறைவான் உயர்மதில் கூடலின்ஆய்ந்த ஒண் தீந்தமிழின்துறைவாய் நுழைந்தனையோ அன்றிஏழிசைச் சூழல் புக்கோஇறைவா தடவரைத் தோட்குஎன்கொலாம் புகுந்து எய்தியதே
"தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" எனும் வினா மாணிக்கவாசகரின் செந்தமிழ்ப் பற்றைத் தெள்ளிதின் விளக்கும் கூற்று எனக் கூறுவர்.
0 கருத்துகள்