திருஞான சம்பந்தருக்கு முன்பே தோன்றியவர், திருநாவுக்கரசர். முதலாம் மகேந்திரவர்மனைச் சைவ சமயம் மேற்கொள்ளச் செய்த செயலினால் இச்சான்றோரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது.
திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாமூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். தந்தையார் பெயர் புகழனார். தாயார் பெயர் மாதினியார். திருநாவுக்கரசரின் இளமைப் பெயர் மருள் நீக்கியார். பெற்றோரை இழந்த நாவுக்கரசரை இவருடைய தமக்கையார் வளர்த்து வந்தார்.
திருநாவுக்கரசர் சமண சமய நூல்களைப் பயின்று தேர்ந்து அச்சமயத்தில் சேர்ந்து பெரும் புகழ் பெற்றார். தருமசேனர் என்னும் புதிய பெயரும் பெற்றார்.
தம்பியார் சமண சமயம் சார்ந்தமையறிந்து சோர்ந்த தமக்கையார் 'தம்பி சைவத்திற்குத் திரும்பவேண்டும்' என்று இறைவனை வேண்டினார். இறைவன் அருளால் தருமசேனர்க்குச் சூலை நோய் வந்தது. அது சமணரால் தீர்க்க முடியாததாகிப் பெரும் தொல்லை தர, இவர் தமக்கையாரை அடைந்தார். திலகவதியார் திருவதிகைப் பெருமானை வணங்கித் திருநீறு அணிவித்தார். தருமசேனரான மருள் நீக்கியார், "கூற்றாயினவாறு விலக்கலீர் " எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார். அதில், "சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்" என்றும், "வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்" என்றும் தம் சூலை நோயைப் போக்க வேண்டினார். அதனால் சூலை நோய் நீங்கிற்று. அது முதல் இவர் திருநாவுக்கரசு என்னும் பெயர் பெற்று சிவத் தொண்டில் ஈடுபட்டார். திருஞானசம்பந்தர் 'அப்பரே என அழைத்தமையால் அப்பர் என்னும் பெயர் பெற்றார். இவரை 'ஆளுடைய அரசு' எனவும் வழங்குவர்.
சமணரின் தூண்டுதலால் முதலாம் மகேந்திரவர்மன் நாவுக்கரசர்க்குப் பல தீங்குகள் செய்தும் இவர் அவற்றால் துன்பமுறாதது கண்டு வியந்து அவனும் சைவனாயினான். அரசன் அதன்பின் சைவநெறி பரவத் தொண்டாற்றினான். மன்னனை மாற்றியபின் நாவுக்கரசரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. நாவுக்கரசர் சிவத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று பதிகங்கள் பாடிப் பரமனை வழிபட்டுப் பைந்தமிழை வளர்த்தார்.
திருநாவுக்கரசர் எண்பத்தோராண்டுகள் வாழ்ந்தார். திருஞான சம்பந்தர், அப்பூதியடிகள், சிறுத் தொண்டர் முதலியோர் இவருடைய சமகாலத்து நாயன்மார்கள். இவர் பாடிய திருப்பதிகங்கள் 4900 என்பர். இன்று கிடைப்பவை 313 திருப்பதிகங்களே . இவை 4, 5, 6 ஆம் திருமுறைகளாக வகுக்கப் பட்டுள்ளன. இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவராதலால் 'தாண்டக வேந்தர்' எனப் புலவோர் போற்றுவர்.
அடியவர்க்கு ஆண்டவனையன்றிப் பிறவற்றில் ஈடுபாடில்லை. சிறுவர்க்குக் கரும்பும் வெல்லக் கட்டியும் இனியன. இளைஞர்க்கு எழில் வாய்ந்த இளமங்கையர் இன்பம் தருவர் . ஆண்மை பெற்றோருக்கு அரசபோகமே இன்பம் தரும். ஆனால் இறைவன் இவ்வனைத்தையும் விட இனியவனாக - இன்பம் தருபவனாக இருக்கிறான் என்பதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார் நாவுக்கரசர்.
'கனியினும் கட்டிபட்ட கரும்பினும்பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்தனி முடிகவித்தாளும் அரசினும்இனியன் தன்னை யடைந்தார்க்கு இடைமருதனே .'
அகத்துறையில் நாவுக்கரசர் பல அரிய பாடல்களைப் பாடியுள்ளார். இறைவனிடம் பெருங் காதல் கொண்ட ஒரு தலைவி அவனோடு உள்ளம் ஒன்றியிருக்கும் தன்மையைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.
'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் ;மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் ;பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் ;பெயர்த்தும் அவனுக்குப் பிச்சியானாள் ;அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்அகன்றாள் ; அகலிடத்தார் ஆசாரத்தைதன்னை மறந்தாள் ; தன் நாமம் கெட்டாள்தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே !'
இறைவன் எடுத்த பாதத்தோடு நடராசனாக நிற்பதைக் காணும் பேறு பெற்றால் இம்மண்ணுலகில் மனிதப் பிறவியும் புனிதப் பிறவியாம் என்னும் நாவுக்கரசரின் பாடல், இறைவனின் ஒரு கோலத்தை நம் உள்ளத்தில் பதியச் செய்கின்றது.
'குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீரும்இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே'
மனிதப் பிறவி நிச்சயம் ஒருவன் எய்த வேண்டும்! நாவுக்கரசரின் பாவைப் படித்து மகிழும் பேறு பெறுவதற்காகவே ஒருவன் மனிதப் பிறவியைப் பெறவேண்டும் எனக் கூறலாம்.
0 கருத்துகள்