இலக்கிய புரட்சி
தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்துள்ளது சிலப்பதிகாரம். அதுவரையில் நூற்றுக்குக் குறைந்த அடிகளைப் பெற்ற பாடல்களையும் (எட்டுத் தொகை), நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்களையும் (பத்துப்பாட்டு)இயற்றி வந்தனர் சங்கப் புலவர்கள். அவை ஓர் உணர்ச்சியை, ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒருவரது வாழ்வின் ஒரு பகுதியைக் கூறிய தனிப் பாடல்கள். சிலப்பதிகாரம், ஒரு முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுளாகச் சுமார் ஐயாயிரம் அடிகளில் இயற்றப்பட்ட முதல் காப்பியம். காப்பியம் பெற்ற மொழியே உயர்ந்த மொழி. தமிழ் அந்த உயரிய நிலையைப் பெறச் செய்தது சிலப்பதிகாரம். அதுவரை வெண்பா, அகவற்பாவினையே அதிகமாகப் புலவர்கள் பயன்படுத்த, சிலப்பதிகார ஆசிரியர் நிகழ்ச்சிக்குரிய ஓசை நயத்துக்கேற்ப வேறு வேறு பாக்களைப் பயன்படுத்திப் புதுமை செய்தார். உலக மொழிகளின் ஆதி காவியங்கள் அரசனை அல்லது ஆண்டவனைத் தலைவனாக அமைத்துப் பாடப்பட்டவை. இளங்கோ, குடிமக்களில் ஒருவனாகிய கோவலனைக் காவிய நாயகனாகக் கொண்டார். அதனால் இதனைக் குடிமக்கள் காப்பியம் என்பர். பரத்தையான மாதவிக்குப் பத்தினியின் உயர்வைக் கொடுத்துப் புரட்சி செய்தமையால் இதனைப் புரட்சிக் காவியம் எனவும் போற்றலாம்.
இளங்கோ அடிகள்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோ அடிகள். இவர் சேரன் செங்குட்டுவனின் இளவல்; தண்டமிழாசான் சாத்தனாரின் நண்பர், இளமையில் இவரைக் கண்ட நிமித்திகன், 'இளங்கோவே அரசராகும் திருப்பொலிவு பெற்றவர்' எனக் கூறியதைக் கேட்டு மூத்தவனான குட்டுவனின் முகம் வாடியது. அதைக் கண்ட இளங்கோ, அண்ணனின் துன்பம் நீக்க, அரச வாழ்வையும்; இல்லற வாழ்வையும் துறந்து துறவியானார். காப்பிய ஆசிரியரின் தியாக வரலாறு மற்றொரு காப்பியமாகும் சிறப்பினது .
மழைவளங் காணச் சென்ற செங்குட்டுவனோடு இளங்கோவும் சென்றார். அங்கே குன்றக் குறவர்கள், ஒரு முலையிழந்த திருமகள் ஒருத்தி வேங்கை மரத்தின் கீழிருந்து பின் வானோருடன் வானகம் சென்ற வியப்புறும் நிகழ்ச்சியைக் கூறினர். அருகே இருந்த சாத்தனார் அப்பெண்ணரசி கண்ணகியே எனக் கூறி அவளது கதையைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். கண்டதும் காதல் என்பது போல, காதால் கேட்டதும் கண்ணகியின் வரலாற்றைக் காதலித்த அடிகள், அக்கணமே, 'சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்று உறுதி பூண்டார். கண்ணகிக்குச் செங்குட்டுவன் கற்கோயில் அமைத்து முடிக்கும்போது, அடிகள் அவளுக்குச் சொற்கோயிலாகச் சிலப்பதிகாரத்தை இயற்றி, சாத்தனார் முன்னிலையில் அரங்கேற்றினார்.
சிலம்பின் காலம்
இளங்கோவின் தமையனான சேரன் செங்குட்டுவன் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் ஆண்டவன். கண்ணகி கோயிலுக்கு வருகை புரிந்த கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இதனால் சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு நூலாகும்.
இளங்கோவின் சமயம்
இளங்கோ அடிகள், 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று சிவனைக் குறிப்பிடுவதால் சைவர் என்பர், ந.மு. வேங்கடசாமி நாட்டார். உ.வே. சாமிநாத ஐயரும் இவரைச் சைவர் என்று கருதினாலும், "இவருக்கு அடிகள் என்ற பெயர் வந்திருத்தலையும்' பதிகத்தில் குணவாயிற் கோட்டம் என்பதற்கு அடியார்க்கு நல்லார் 'அருகன் கோயில்' என்று பொருள் செய்திருத்தலையும், இந்நூலில் சில விடத்து சைனமதக் கொள்கைகளை மிகுத்திக் கூறி இருத்தலையும் கொண்டு, இவர் சமயம் ஜைனம் என ஐயுறுதற்கு இடம் உண்டு" என்கிறார். இளங்கோ சைனர் என்பதே அனைவரும் ஏற்கும் உண்மை.
சிலம்பின் சிறப்பு
சிலப்பதிகாரம் மூன்று என்னும் எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இது, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்னும் மூன்று உண்மைகளைக் கூறுகிறது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் ஆகிய மூன்று காண்டங்களைப் பெற்றது. இது சோழன், பாண்டியன், சேரன் ஆகிய முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியது. காப்பிய நிகழ்ச்சிகள் புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று கோ நகரங்களில் நடை பெறுகின்றன. இது கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய மூன்று முக்கிய கதை மாந்தர்களின் வரலாற்றைக் கூறுகிறது; இயல், இசை, நாடகம் என்னும் மூன்று கூறுகளைப் பெற்று முத்தமிழ் காப்பியமாக விளங்குகிறது; மரபுச் செய்யுள், நாட்டுப் பாடல் அல்லது விருத்தப் பாடல் என்னும் புதுச் செய்யுள், உரைநடை என்னும் மூன்று வகை நடையினைப் பெற்றது; அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பொருளைக் கூறுகின்றது.
காப்பியத்தில் தீயவன் (வில்லன்) இருத்தல் வேண்டும். இளங்கோ தீயவரைப் படைக்காமல் தூயவர்களைக் கொண்டே காப்பியத்தை முடித்த திறம், உலகக் காவிய வரலாற்றில் ஒரு புதுமை! தீயவன் இல்லை என்றால் காப்பியத்தில் போராட்டம் இருக்காது. அதனால் ஊழ்வினைக்குத் தீயவனின் தகுதியளித்துள்ள திறம் வியக்கத்தக்கது. பரத்தையர் குலத்து வந்த மாதவியைக் கண்ணகிக்கு இணையான பத்தினிப் பெண்ணாகப் படைத்துள்ளமை ஒரு புரட்சி செயலாகும். மூவேந்தர்களையும் மூவேந்தர்களின் நாடு நகரங்களையும் இளங்கோ ஏற்றத் தாழ்வின்றிச் சிறப்பிக்கிறார், 'யானே கள்வன்' என்று பாண்டியன் கூறினாலும், 'வல்வினை வளைத்த கோலைப் பாண்டியனின் செல்லுயிர் நிமிர்த்திச் செங்கோலாக்கியது' என்று செங்குட்டுவன் மூலம் பாண்டியன் பழியற்றவன் எனக் கூறுகிறார். 'தென்னவன் தீதுஇலன்' என்று வஞ்சிக் காண்டத்தில் கண்ணகியைக் கூறச் செய்து பாண்டியன் குற்றமற்ற கொற்றவன் என்பதை நிறுவுகிறார். இளங்கோ சமணராக இருந்தும் தம் காப்பியத்துள் பிற மதங்களைக் குறை கூறாத சமரச சன்மார்க்கியாகத் திகழ்கிறார்.
இளங்கோ கண்ட நூல்கள்
இளங்கோ அடிகள் சமணத் துறவி. சமணர்கள் ஆடல், பாடல் முதலிய கலைகளை வெறுப்பவர்கள். இசையினால் ஒழுக்கம் குறையும் என்பதை யசோதர காவியத்தில் விளக்கியுள்ளனர். ஆனால் இளங்கோ துறவியாக இருந்தும் சிறந்த கலைஞராக, அரசவைக்குரிய ஆடல் பாடல்களோடு பொது மக்களுக்குரிய வேடர் கூத்து, ஆய்ச்சியர் கூத்து முதலானவற்றைச் சிறப்பிப்பவராக விளங்குகிறார். அரங்கேற்று காதையில் செம்மையான ஆடற்கலையின் கூறுகளை, அக்கால நாடக மேடையை, நாடகக்கலையை விளக்குகிறார். குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி ஆகியவற்றில் மக்களின் பழங்கலைகளாக நாட்டுப் பாடல்களையும், ஆடல்களையும் விளக்குகிறார். கானல் வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வேட்டுவ வரி ஆகிய பாடல்கள் இளங்கோவின் காலத்துக்கு முன்னே தமிழகத்தில் நாட்டுப் பாடல்களாகத் (Folk Songs ) திகழ்ந்தவை என்றும், அவைகளை அவர் அப்படியே எடுத்துத் தம் நூலில் புகுத்திக் கொண்டார் என்றும் கூறுவர். பாமர மக்கள் பாடி மகிழ்ந்த நாட்டுப் பாடல்களை இளங்கோ திருத்திச் செப்பம் செய்து நூலில் சேர்த்துக் கொண்டார் என்றும் கூறுவர் . காட்சிக் காதையில் வரும் குறிஞ்சிப் பாட்டு, (குறிஞ்சிப் பாணி), மருதப் பாட்டு, (உழவர் ஓதை) முல்லைப் பாட்டு (கோவலர் பாணி), நெய்தல் பாட்டு (கடற்கரையில் கழங்காடு மகளிர் ஓதை ) ஆகியனவும் நாட்டுப் பாடல்களையே குறிக்கின்றன. வாழ்த்துக் காதையில் வரும் அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு ஆகியனவும் குரவைப் பாடல்கள் போல நாட்டுப் பாடல்களே!
அகமும் புறமும்
இளங்கோ அகத்திணைகளையும், புறத்திணைகளையும் காப்பியத்தில் விளக்கியுள்ளார். குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை, இந்திர விழவூரெடுத்த காதை , கானல் வரி, வேட்டுவ வரி ஆகியவற்றுள் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகள் விளக்கமுறுகின்றன. வஞ்சிக் காண்டத்தில் புறத்திணைகள் பொலிவு பெறுகின்றன. சிலம்பு, அகத்திணை,புறத்திணைகளை விளக்கும் காப்பியமாக அமைகிறது. துறவியான இளங்கோ, குலமகளான கண்ணகியின் இல்வாழ்வையும், விலைமகளான மாதவியின் இன்பவாழ்வையும் செம்மை ஓவியங்களாகத் தீட்டிக் காட்டுகிறார்.
பத்தினித் தெய்வம்
காட்சி, கால்கோள், நீர்ப்படை முதலிய முறைகள் வீரனுக்கு நடுகல் நடுத்தற்குரியவை. அவற்றை ஒரு பெண்மணிக்குத் தெய்வத் திருவுரு அமைப்பதற்குப் பயன்படுத்திப் பத்தினி வணக்கத்தைத் தமிழ்நாட்டில் காவியம் மூலம் தோற்றுவித்தவர் இளங்கோ! கோயில் மூலம் தோற்றுவித்தவன், குட்டுவன்.
கண்ணகி பத்தினித் தெய்வமாயினாள். சேர நாட்டில் மட்டுமின்றி, இலங்கை உட்பட பிற நாடுகளிலும் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டனர். பெண்கள் கண்ணகி வழிபாட்டை மேற்கொண்டனர்.
கண்ணகியின் ஆற்றல் அவள் மதுரையை எரித்த போது வெளிப்பட்டது. அவள் ஆடி மாதத்தில், வெள்ளிக்கிழமையன்று மதுரையைத் தீக்கிரையாக்கினாள். தமிழ் நாட்டுப் பெண்கள் அதனால்தான் வெள்ளிக் கிழமையைத் தமக்குகந்த நாளாகக் கொண்டனர் என்பர். ஊர்தோறும் உள்ள மாரியம்மன் கோவில்கள் கண்ணகி வழிபாட்டில் தோன்றியவை. ஒரு முலையிழந்த திருமா பத்தினியாதலால் மார்பு தெரியாமல் தலை வரை உருவம் வைத்து வழிபட்டனர் எனக் கூறுவர் . மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் விழா கொண்டாடுவதும், விழாவில் சிலம்பைக் கையில் ஏந்தி ஆடுவதும், கண்ணகியே காலப் போக்கில் மாரியாக மாறிவிட்டாள் என்பதை நிறுவும். கண்ணகியின் பொற்சிலம்பு வழி பாட்டுக்கு உரியதான பின்பு, தமிழ்ப் பெண்டிர் பொன்னாலான அணிகளைக் காலிலே அணியும் பழக்கத்தை விட்டு விட்டதாகவும் கூறுவர். திரௌபதை அம்மன் கோயிலில் நடைபெறும் தீ மிதிக்கும் திருவிழாவும் கண்ணகி மதுரையை எரித்ததை நினைவு கொள்ளும் விழா என்பது சிலர் கருத்து.
நற்றிணையில் கண்ணகி
கண்ணகியைப் பற்றிய குறிப்பு நற்றிணைப் பாடல் ஒன்றிலும் இடம் பெறுகிறது.
'எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி '
இத்திருமாவுண்ணியே கண்ணகி என்பர்.
காப்பியக் கதை
வணிகன் மகனான கோவலன், வணிகன் மகளான கண்ணகியை மணந்து அவளுடன் சில ஆண்டுகள் இன்பமாக வாழ்ந்தான். ஆடலரசியான மாதவியைக் கண்டபின் அவன் மனைவியை நீத்து மாதவி தாயாகிறாள். இந்திர விழாவின் போது மாதவி பாடிய கானல் வரிப்பாடலின் பொருளைத் தவறாக உணர்ந்த கோவலன், அவளை விட்டுப் பிரிந்து கண்ணகியை அடைந்தான். பொருள் முழுவதும் இழந்த கோவலன், கண்ணகியின் காற்சிலம்பை விற்று மீண்டும் வாணிகம் செய்ய விரும்பி மனைவியுடன் மதுரைக்குச் சென்றான். அங்கே பொற்கொல்லன் சூழ்ச்சியினால் கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப் பட்டான். தன் கணவன் கள்வன் அல்லன் என்பதைக் கண்ணகி தன் சிலம்பைக் கொண்டு பாண்டியன் அவையில் வழக்காடி வாகை சூடினாள். 'யானே கள்வன்' என்று பாண்டியன் இறக்க பாண்டிமாதேவியும் அவனுடன் இறந்தாள். சினந்தணியாத கண்ணகி மாதுரையைத் தீக்கிரையாக்கிச் சேரநாடு சென்று செங்குன்றத்தில் வேங்கையின் அடியில் தங்கினாள். வானோர்களுடன் கோவலன் வந்து அவளை அழைத்துக் கொண்டு வானகம் சென்றான்.
இக்காட்சியைக் கண்ட மலை வாழ் மக்கள், மன்னன் செங்குட்டுவனுக்குக் கூறுகின்றனர். அதைக் கேட்ட அரசன், "கணவன் இறந்ததும் உயிர் துறந்த கோப்பெருந்தேவி, கோவலன் பழியைத் துடைத்துச் சேரநாடு அடைந்து வானகம் சென்ற கண்ணகி இவ்விருவரில் யாரை நீ வியந்து போற்றுகிறாய்?" என்று அரசியிடம் கேட்டான். "கணவனுடன் இறந்த கோவலன்தேவி வானகத்தே சிறப்படைக . நம் நாட்டை அடைந்த கோவலன் தேவியாம் பத்தினிக் கடவுளை நாம் வணங்க வேண்டும்" என்று இருங்கோவேண்மாள் இயம்பினாள். அவள் விரும்பியவாறு செங்குட்டுவன் இமயம் வரை சென்று வாகை சூடி, அங்கிருந்து கொணர்ந்த கல்லில் கண்ணகி உருவம் செய்து கோவிலில் அமைத்தான்.
நாடகக் காப்பியம்
இக்கதையை இளங்கோ நாடகப் பாங்கில் அமைத்துள்ளார். நாடகத்துக்குரிய தோற்றுவாய், போராட்டத்தின் ஏற்றம், திருப்பு மையமாகிய உச்சக் கட்டம், போராட்டத்தின் இறங்குமுகம், முடிவு ஆகிய ஐந்து தன்மைகளைக் கொண்ட நாடகக் காப்பியமாக அமைந்துள்ளது, சிலப்பதிகாரம். நூலின் தொடக்கமான திங்கள், ஞாயிறு, பூம்புகார், மாமழை ஆகியவற்றைப் போற்றும் பாடல்கள், நாடக மேடையில் தொடக்கத்தில் பாடப்பெறும் இறைவணக்கப் பாடல்கள் போல உள்ளன. காப்பியக் கதையைக் கூறும் இளங்கோ, களம் ,காட்சி , சூழல் முதலியவற்றை வருணித்து, மேடையில் நாடகம் காணும் உணர்வூட்டுகிறார். வழக்குரை காதையைப் படிப்பவர்கள், நடிக்கப்படும் காட்சியைக் காணும் உணர்வு பெறுகின்றனர். நாடகத்திடையே பாடற் காட்சிகளையும், ஆடற் காட்சிகளையும் தந்து சுவை சேர்க்கிறார் அடிகள். சிலப்பதிகாரம் ஒரு நாடகக் காப்பியமாகிறது. இதன் நாடகப் பங்கை நன்கு ஆராய்ந்து மார்க்கபந்து சர்மா "நாடகங்களுள் ஷேக்ஸ்பியர் இயற்றியுள்ள மாக்பெத் ஒன்றே நம் சிலப்பதிகாரத்தைப் போல், கருத்து (Thought ), சூழ்நிலை (Atmosphere), நிகழ்ச்சி (Action), தோரணை (Tone) என்ற நான்கு துறைகளிலும் இசைவு சிறந்து விளங்குகின்றது" என்று ஒப்பிட்டு உரைக்கிறார்.
உரைகள்
சிலப்பதிகாரத்தின் சிறப்பை எல்லாம் நாம் அறியத் துணை செய்வது அடியார்க்கு நல்லார் அதற்கு எழுதிய உரையே. அவருக்கு முன்பு அரும்பதவுரை என்னும் மிகப்பழைய உரை ஒன்றும் எழுதப்பட்டது. அண்மைக் காலத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முழுமையான விளக்கமான உரை எழுதி உள்ளார். இந்திய நிதி அமைச்சராகத் திகழ்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியாரும், சிலம்பின் புகார்க் காண்டத்துக்கு மட்டும் ஓர் எளியவுரை எழுதி உள்ளார்.
நெஞ்சையள்ளும் பகுதிகள்
சிலப்பதிகாரம் முழுவதுமே நம் நெஞ்சை அள்ளுவது! சிலம்பின் பாப் பரல்களில் சிலவற்றை ஒலித்து உவகை அடைவோம்.
காப்பியத் தலைவியான கண்ணகியின் அழகைக் கோவலன் பாராட்டும் பகுதி, அவள் தன்னிகர் அற்ற தலைவி என்பதை நிறுவுகிறது.
"மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!காசறு விரையே! கரும்பே! தேனே!அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!பெருங்குடி வணிகன் பெருமட மகளே !மலையிடைப் பிறவா மணியே என்கோ !அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ !யாழிடைப் பிறவா இசையே என்கோ !தாழிருங் கூந்தல் தையால் நின்னை"
சமண சமயத் துறவியான கவுந்தி அடிகள், 'அருகனைத் தவிரப் பிறரை வணங்க மாட்டேன்' என்று கூறியவர். அவரே கண்ணகியைத் தெய்வம் எனப் போற்றுமாறு செய்து காப்பிய நாயகியின் சிறப்பை உயர்த்துகிறார், புலவர்.
'இன்துணை மகளிர்க்கு இன்றி அமையாக்கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லதுபொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்"
ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னே தோன்றிய அடிகள், ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் பெருமையை எளிமையும் அருமையும் இணையக் கூறுகிறார்.
'சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே !'கரியவனைக் காணாத கண்என்ன கண்ணே!கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்என்ன கண்ணே!............... தூது!நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே!நாராயணா என்னா நாஎன்ன நாவே!
சிலப்பதிகாரம் அவலச்சுவையை நிகரற்ற முறையில் தரும் காப்பியம். கோவலன் கொலையுண்டான் என்பதைக் கேட்ட கண்ணகியின் சோக நிலையைச் சொல்லோவியமாகக் காட்டுகிறார், கவிஞர்.
'பொங்கி எழுந்தாள்; விழுந்தாள் பொழிகதிர்த்திங்கள் முகிலோடும் சேண்நிலம் கொண்டுஎனசெங்கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனைஎங்கணா என்னா என இனைந்தேங்கி மாழ்குவாள் '
இளங்கோ அடிகள் நிகழ்ச்சிக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற சொல்லும் சந்தமும் கொண்டு பாத்தொடுக்கும் வல்லமை வாய்ந்தவர். வாழ்த்துக் காதையில் வரும் வரிப் பாடல்களில் இத்திறனைக் காணலாம் மெல்லியலாரான பெண்கள் பந்தாடும் காட்சியை மகளிரின் மென்மைக்கும், விரைவுக்கும், பந்து செல்லும் துள்ளலுக்கும் பொருந்திய சொற்களில் சந்தத்தில் அமைந்திருப்பதைப் படிக்கலாம். படிக்கும் போது பந்தை அடிக்கும் ஓசை நம் செவியில் நிச்சயம் கேட்கும்.
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே !
தமிழர் வரலாறு, கலைகள், பண்பாடு, சமயம், அரசியல், தமிழின் சிறப்பு, பகுப்பு முதலிய அனைத்தின் சாரமாக விளங்குவதே சிலப்பதிகாரம் என்பது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.

0 கருத்துகள்