முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரும்பாண் ஆற்றுப்படை ,மலைபடுகடாம்

 4. பெரும்பாண் ஆற்றுப்படை 

    


     காஞ்சிக் காவலனாக தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசு பெற்ற பெரும்பாணன், பரிசு பெறாத பாணனை அவனிடம் ஆற்றுப் படுத்துவதாகக் கற்பித்துக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது, 'பெரும்பாண் ஆற்றுப்படை', இப்பாடல் சரியாக அரை ஆயிரம் அடி (500) பெற்ற ஆசிரியப்பா.  இது சிறுபாண் ஆற்றுப்படையை விடப் பெரிய பாடலாகத் திகழ்வதால் பெரும்பாண் ஆற்றுப்படை எனப்பட்டது என்பர்.  பாடலில் வரும் யாழ்ப்பாணம், 'இடனுடைப் பேரியாழ் முறையுளி' இசைத்ததாக வருகிறது.  சீறியாழ் கொண்டவன் சிறுபாணன் என்பது போல், பேரியாழ் கொண்டவன் பெரும்பாணன் எனப்பட்டான்.  எனவே இது பெரும்பாண் ஆற்றுப்படை எனும் பெயர் பெற்றது.  பாணரில் சிறுபாணர், பெரும்பாணர் எனும் இரு பிரிவினர் இருந்தமையினை, 'பெரும்பாணர் - குழவர் பாணர் முதலாகிய பெரிய இசைக்காரர்" என்னும் அடியார்க்கு நல்லார் உரையாலும் நன்கு அறியலாம்.

    இப்பாடலைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் பத்துப்பாட்டுள் இடம் பெறும் பட்டினப் பாலையினையும், இயற்றியுள்ளார். எனவே இளந்திரையன், கரிகாலன் காலத்துக் காஞ்சிக் காவலன் என்பது உறுதியாகிறது.

    இப்பாட்டுள் , யாழின் அமைப்பு, பாணன் வறுமை, இளந்திரையன் ஆட்சிச் சிறப்பு, உப்பு வாணிகர் செல்லும் வழி, எயிற்றியர், எயினர், கானவர் , மறக்குடி மக்கள் வலைஞர் ஆகியோர் இயல்பும் உபசரிப்பும், நீர்ப்பெயற்று எனும் ஊர் - பட்டினம் -  திருவேஃகா - கச்சி மூதூர் சிறப்புகள், இளந்திரையனின் வீரமும் கொடையும் ஆகியன  விளக்கம் பெறுகின்றன.

    இளந்திரையன் ஆட்சியில் எவ்வுயிர்க்கும் இன்னல் இல்லை என்பதைப் புலவர் புகழ்ந்து கூறுகிறார்:

அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் 
கைப்பொருள் வௌவும் களவுஞர் வாழ்க்கைக் 
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம் 
உருமும்  உரறாது ; அரவும் தப்பா 
காட்டு மாவும் உறுகண் செய்யா 

இது, பாண்டியன் ஆட்சியை இளங்கோ அடிகள் சிறப்பிக்கும் பகுதியை ஒத்தது.

    இளந்திரையன் பாணர்களை உபசரிக்கும் முறையை உருத்திரங் கண்ணனார் உரைக்கும் திறம் காண்க!

    பாணர்களின் நீர்ப்பாசியன்ன பழைய கிழிந்த உடையை நீக்கி, பால் ஆவி அன்ன மென்மையான மேன்மையான உடை தருகிறான்.  கை தேர்ந்த சமையல்காரன் சமைத்த கொழுமையான பல்வகை இறைச்சிகளையும் , இடை முறியாத சோறும், இனிப்புகளும், மீன் பூத்தன்ன வான் கலங்களில் (வெள்ளிப் பாத்திரம் ) பரிமாறச் செய்கிறான்.  அதோடு அமையாது 

'மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து 

ஆனா விருப்பில் தான்நின்று ஊட்டி'

    மகிழ்கிறான்.  பாணர் பிள்ளைகளைத் தன் சொந்தப் பிள்ளைகளாக மதித்து அவர்கள் அருகே தானே அமர்ந்து பேரன்போடு உண்ணச் செய்யும் இளந்திரையனின் விருந்தோம்பல் தலை சிறந்தது.

    பெரும்பாண் ஆற்றுப்படைக்கு ரா. ராகவையங்கார் அரிய ஆராய்ச்சி உரை எழுதி வெளியிட்டுள்ளார்.

5. மலைபடுகடாம் 

    செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னனிடம் பரிசு பெற்ற கூத்தன் மற்றொரு கூத்தனை அவனிடம் ஆற்றுப் படுத்துவதாகப் பாடப் பட்டது, மலைபடுகடாம்.  இதனை இயற்றியவர், இரணிய முட்டத்துப் பெருங் குன்றூர்ப்  பெருங் கௌசிகனார்.  மதுரைக்கு அடுத்த ஆனைமலை அழகர் மலைப் பகுதிகள் அடங்கிய நிலப் பரப்பே இரணிய முட்டம் என்பர்.  இது 583 அடிகள் கொண்ட நேரிசை ஆசிரியப்பா.  ஏறத்தாழ 2950 சொற்களைப் பெற்ற இப்பாட்டில் பரம், மணம் , நிதி முதலிய ஒரு சில வடசொற்களே உள்ளன என்பது கௌசிகனாரின் தென்றமிழ் ஆற்றலைத் தெளிவாக்குகிறது. 

    மலைக்கு யானையை உவமித்து, அம்மலையின் கண் பிறந்த ஓசையை கடாம் எனச் சிறப்பிக்கும் 'மலைபடு கடாம் மாத்திரத்து இயம்ப' (348 அடி ) என்னும் தொடர் பாடலில் வருகிறது.  இத்தொடரினால் 'மலைபடுகடாம்' என்று நூலுக்குப்  பெயரிடப்பட்டது என்று இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுகிறார்.  பாடலின் சிறந்த தொடரைப் பாடலுக்குப் பெயராக அமைக்கும் முறை பதிற்றுப்பத்தில் உள்ளது.  பத்துப்பாட்டில் இவ்வாறு பெயர் பெற்றது இது ஒன்றே.  இதைக் கூத்தர் ஆற்றுப்படை என்றே சேனாவரையரும், இளம்பூரணரும் குறிப்பிடுகின்றனர். 'ஏத்திச்சென்ற இரவலன் கூத்தர் ஆற்றுப்படுத்தன்று' என்பது புறப்பொருள் வெண்பாமாலை வகுக்கும் இலக்கணம். எண்வகைச் சுவைகளும், உள்ளத்தே தோன்றும் உணர்வுகளும் புறத்தே புலனாகுமாறு நடிப்போரே கூத்தர்.

    நன்னன் சேய் நன்னன் பல்குன்றக் கோட்டத்தை ஆண்ட வேளிர் மரபினன்.  இக்கோட்டம் தொண்டை நாட்டது.  வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள சவ்வாது மலைத் தொடரும் அதைச் சூழ்ந்த பகுதியுமே இவன் ஆண்ட நாடாகும்.  இதன் தலைநகரமே செங்கண்மா.  எனவே இவன் செங்கண் மாத்துவேள் எனப்பட்டான்.

    இப்பாடலுள், பெரியாழின் இயல்பு, இசைக் கருவிகள், பாணர் விறலியர் இயல்புகள், செல்ல வேண்டிய நெறியில் உண்டாகும் நன்மை - தீமைகள், வழியில் கிடைக்கும் உணவு வகைகள், மலையில் எழும் ஒலிகள், மலை, ஊரின் வளம், நடுகல் வணக்கம், நன்னன் பண்புகள், கூத்தரை வரவேற்று விருந்தோம்பிப் பரிசளிக்கும் பான்மை முதலிய இடம் பெறுகின்றன.

    கூத்தர் செல்ல வேண்டிய வழியின் எழிலையும் வளத்தையும் எல்லா ஆற்றுப்படைகளும் விளக்கிக் கூறும்.  கௌசிகனார்  மலைபடு கடாத்துள் இயற்கை அழகினைப் புது வகையில் காட்டுகிறார்.  சிறுகுடி எனும் புதுவருவாய் வழங்கும் ஓர் ஊரில் தீயைப் போன்ற செங்காந்தள் மலர்களின் வளமான முகைகள் மலரும் தருவாயில் உள்ளன.  அவற்றின் செந்நிறத்தை மேலிருந்து கண்ட ஆண் பருந்து, தசை (இறைச்சி) யாகக் கருதி, உண்ண விரும்பி அவற்றை எடுத்துக் கொண்டு உயரப் பறக்கின்றன.  ஆனால் தான் கவர்ந்தது தசையன்று என்பதை உணர்ந்து அதைக் கீழே போடுகிறது.  பாதி மலர்ந்த காந்தள், பருந்துகாலின் பிடிப்பில் இதழ்களாகப் பிரிகிறது. நெருப்பை நிகர்த்த அவ்விதழ்கள் கீழே இறங்கி நிலத்தே பரந்து கிடக்கின்றன.  அந்த இடம் இப்போது மலர் தூவிய வெறியாடும் களம் போலத் திகழ்கிறது.  இது கௌசிகனார் காட்டும் புதிய காட்சி.

'தீயின் அன்ன ஒண் செங் காந்தள் 
தூவல் கலித்த புதுமுகை ஊன்செத்து 
அறியாது எடுத்த புன்புறச் சேவல் 
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் 
வெறிக்களம் கடுக்கும் வியல் அறை'

(ஊன் செத்து - தசையாகக் கருதி, சேவல் - ஆண் பருந்து; கடுக்கும் - போலத் திகழும்)

    பருந்துகள் பாய்ந்து வந்து செங்காந்தளைப் பற்றி எடுத்து மேலே பறத்தல், அவற்றை அவை கீழே போட, செக்கச் சிவந்த செங்காந்தள் இதழ்கள் காற்றிலே மிதந்து மெல்ல மெல்லக் கீழே இறங்கல் - நிலமெங்கும் நெருப்புத் துண்டுகள் பரவிக் கிடப்பன போலக் கிடத்தல் - இவற்றை எண்ணிப் பார்க்கும்போது இயற்கைப் பெண்ணின் இன்பக் கூத்தை நேரிலே பார்க்கும் பரவசம் பிறக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...