Looking For Anything Specific?

பத்துப்பாட்டு

 


     வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா,கலிப்பா, பரிபாடல் என்னும் பா வகைகள் பல சங்க காலத்தில் இருந்தன.  எனினும் சங்ககால இலக்கிய உலகில் தனியாட்சி செய்தது ஆசிரியப்பாவே.  அதனால் தான் பிற்காலத்தார் ஆசிரியப்பாவை அரசப்பா என்றார் போலும்!  சங்க கால இலக்கிய உலகில் கவிதையே அரசோச்சியது;  கவிதை உலகில் ஆசிரியமே அரசோச்சியது.  சங்கப் பாடல்களாக இப்போது நமக்குக் கிடைக்கும் 2381 பாடல்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவை ஆசிரியப்பாக்களே.

    ஒரு பாவே ஒரு நூலாகும் தனிச்சிறப்பு ஆசிரியமல்லாமல் வேறு பா பெறவில்லை.  சங்க காலத்தில் இப்படி நூலாக வளர்ந்த ஆசிரியப் பாட்டுகளில் பத்துப் பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன.  அவற்றையும் ஒரு தொகையாகக் கருதி, 'பத்துப்பாட்டு' என வழங்கும் மரபு ஏற்பட்டது.  இவற்றை ஒன்பது புலவர்கள் இயற்றியுள்ளனர்.  (நக்கீரர் இருவர் என்பதால் புலவர் தொகை ஒன்பதாகிறது.)

பத்துப் பாடல்களின் பெயரை ஒரு வெண்பா தருகிறது.

    முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை 

    பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய 

    கோல நெடு நல்வாடை கோல குறிஞ்சிப் பட்டினப் 

    பாலை கடாத்தொடும் பத்து.

    1. திருமுருகு ஆற்றுப்படை, 2. பொருநர் ஆற்றுப்படை, 3. பெரும்பாண் ஆற்றுப்படை, 4. சிறுபாண் ஆற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக்காஞ்சி, 7. நெடுநல்வாடை, 8. குறிஞ்சிப்பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடு கடாம் என்பவையே பத்துப்பாட்டுக்கள், இவற்றை இதே வரிசை முறையில் வழங்குவர்.  உதாரணமாக முல்லைப்பாட்டை, பத்துப்பாட்டில் ஐந்தாவதாக உள்ள, 'முல்லைப்பாட்டு' என்றே கூறுவர் .

    'பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ 

    எத்துணையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பனையே'

என்று இத்தொகுதியின் பெருமையைப் பேசுகிறது மனோன்மணீயம்!

    பத்துப்பாட்டு முழுவதற்கும் நச்சினார்க்கினியர் சிறந்த உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன், பத்துப்பாட்டை முதன் முதலில், 1889-இல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தார்.  மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, மலைபடு கடாம் நீங்கலாக ஏனைய ஏழுக்கும் வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியார் உரை எழுதி 1931-இல் தொடங்கி அவ்வப்போது தனித் தனி நூல்களாக வெளியிட்டார்.  அவர் உரையெழுதாது விடுத்த மூன்றுக்கும் அவர் மாணாக்கரும் தமிழ்க் கடல் எனத் தகும் பேராசிரியருமான சி. ஜெகந்நாதசாரியார் உரை இயற்றி வெளியிட்டார்.  பின்னர், பொ.வே. சோமசுந்தரனார் பத்துப்பாட்டு முழுமைக்கும் விரிவான உரை வகுத்தார்.

    பத்துப்பாட்டில் சரிபாதி ஆற்றுப்படை நூல்கள் ஆகையால் அவற்றை முதலிலும், அவற்றின் பின் ஆற்றுப்படை போலவே புறப்பொருள் உரைக்கும் மதுரைக் காஞ்சியையும், அடுத்து அகப்பொருள் பாட்டுக்களையும் இனி விளக்குவோம்.

ஆற்றுப்படை நூல்கள் 

     1. திருமுருகு ஆற்றுப்படை 

        பத்துப்பாட்டுத் தொகுதியில், அதன் கடவுள் வாழ்த்துப் போல முதல் நூலாக விளங்குவது திருமுருகு ஆற்றுப்படை.  இது 315 அடிகளை உடைய ஆசிரியப்பா.  இதனை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர்.  இவர் சங்க காலத்து கே=நக்கீரர் அல்லர், சங்க காலத்து நக்கீரர் நெடுநல்வாடை பாடியவர்.  இந்நூலைப் பாடிய நக்கீரர் சங்க காலத்துக்குப் பின்னே தோன்றியவர் என்பது ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ளது.  சங்க காலத்துக்குப் பின்னவர் எழுதிய நூலாயினும் இறை வழிபாட்டு நூலாதலால், இதைப் பத்துப் பாட்டின் முன்னே அமைத்தனர்.

    

    திருமுருகு ஆற்றுப்படை, தொல்காப்பியர் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்துக்கு மாறுபட்டது.  தொல்காப்பியர், நிலையற்ற பொருளைப் பெறுவதற்காகக் கூத்தர்,பாணர்,பொருநர், விறலியர் ஆகிய நால் வகையினரே ஆற்றுப்படுத்தற்கு உரியவர் என உரைக்க, நக்கீரர் முருகனருளைப் பெறப் புலவனை ஆற்றுப் படுத்துவதாகப் பாடி ஒரு புதுமை செய்தார்.  பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப் படுத்தப்பட்டவர்களின் பெயரால், பொருநர் ஆற்றுப்படை என்பது போல வழங்க, நக்கீரர் தம் நூலை, பாட்டுடைத் தலைவனான முருகன் பெயரால் வழங்கியமையும் மற்றோர் புதுமையாகும்.  எனினும் மரபு முறைப்படி இதனைப் 'புலவராற்றுப்படை' என வழங்கியதும் உண்டு.


    நக்கீரர் ஆற்றுப்படை இலக்கணத்தையே மாற்றியமைத்த பிறகு நக்கீரர் முறையினை ஏற்று;

    'இருங்கண் வானத்து இமையோர் உழைப் 
    பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று'

என்று புறப்பொருள் வெண்பாமாலை விதி வகுத்தது.

    திருமுருகு ஆற்றுப்படையில் ஆறு பிரிவுகள் உள்ளன.  முதற்பகுதியில் திருமுருகனின் உருவச் சிறப்பு, அவன் அணியும் மாலைகள், சூர் அரமகளிர் செயல்கள், சூரன் அழிவு, கூடல் சிறப்பு, திருப்பரங்குன்றத்தின் எழில் ஆகியன விளக்கப்படுகின்றன.  இரண்டாம் பகுதியில் முருகனது யானையின் இயல்பு, ஆறுமுகங்கள் ஆற்றும் பணி, பன்னிரு கைகள் செய்யும் செயல், திருச்சீரலை வாயில் அவன் வீற்றிருக்கும் திறன் ஆகியன இடம் பெறுகின்றன.  மூன்றாம் பிரிவில் முருக பக்தரான முனிவர் ஒழுக்கம், அவனை வழிபட வரும் தேவர் தேவ மகளிர் இயல்பு, திருமால் முதலிய தேவர்களின் செய்திகள், திருவாவினன் குடியில் முருகன் வீற்றிருத்தல் ஆகியன உரைக்கப்படுகின்றன.  நான்காம் பிரிவு, மந்திரம் ஓதுவார், அர்ச்சகர் நிலை, திருவேரகத்தில் முருகன் இருத்தல் ஆகியவற்றைப் பேசுகிறது.  ஐந்தாம் பிரிவில், முருகன் இருக்கும் நீர்த்துறை முதலிய இடங்கள், முருகனை வழிபடும் முறை, அவனிடம் அருள் பெறும் முறை, முருகன் அடியார்தம் இயல்புகள், முருகன் அருளும் முறை, பழமுதிர்ச்சோலை மலை அழகு ஆகியன விளக்கப் படுகின்றன.
    

    நக்கீரர் தக்க சொற்களைத் தகுந்த இடத்தில் பதித்து, சில கோடுகளில் சீருருவம் வரையும் ஓவியன் போலச் சில சொற்களில் பல உருவங்களை - பலர் உள்ளங்களை - பல உணர்வுகளைச் சித்தரிக்கிறார்.

    முருகனைப் பணியும் முனிவரின் பேரறிவுத்திறத்தை,

'கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் 
தாம் வரம்பு ஆகிய தலைமையார்'

என இரு வரிகளில் தருகிறார்.

    முருகன் தமிழறிந்தவன் என்பதை, 'நூலறி புலவ' என அவனை அழைத்து விளக்கும் நக்கீரர், 'முருகனே தமிழ்' என்பதை, 'அறிந்தோர் சொல்மாலை' என்று அவனைப் புகழ்வதன் மூலம் தெளிவு படுத்துகிறார்.

    அழகன் முருகனின் அற்புதத் தோற்றத்தைப் பழகு தமிழில் படம் பிடிக்கிறார் நக்கீரர்.

கச்சினன், கழலினன்; செச்சைக் கண்ணியன் 
குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகர்இல் சேவல் அம் 
கொடியன், நெடியன், தொடி அணிதோளன்.

    முருகன் வழிபடுவோர்  கூற்றுகள், தமிழ் அர்ச்சனையாகும் அரிய பகுதியாகும்.

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ !
ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை 
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!

    திருமுருகு ஆற்றுப்படை முருகனின் பெருமையை உரைக்கும் நூல்.  இதை உரைப்போர் முருகன் அருளைப் பெறுவது உறுதி.  நக்கீரர் உரைத்த நல் முருகாற்றுப்படையை நாள்தோறும் சாற்றினால் மாமுருகன் வந்து நம் மனக்கவலை தீர்த்து, நாம் நினைத்த எல்லாவற்றையும் தருவான் என்கிறது ஒரு பழைய வெண்பா.  இச்சிறப்பு நோக்கியே, திருமுருகு ஆற்றுப்படை, பன்னிரு திருமுறையில், பதினோராம் திருமுறை நூல்களில் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளது.


    

கருத்துரையிடுக

0 கருத்துகள்