எட்டுத்தொகை நூல்களில் தமிழர் மிகவும் ஏற்றிப் போற்றும் தனிச் சிறப்புப் பெற்றது. புறநானூறு கடவுள் வாழ்த்து உட்படப் புறப்பொருள் பற்றிக் கூறும் நானூறு பாடல்கள் கொண்டதால் இது இப்பெயர் பெற்றது. இந்நூலைப் புறம், புறப்பாட்டு , புறம் நானூறு எனும் வேறு பெயர்களாலும் குறிப்பிட்டார்கள். புறநானூற்றுப் பாடல்களின் அடிவரையறை கூற முடியாதவாறு பல பாடல்கள் சிதைந்து உள்ளன. 267, 268 ஆகிய இரு பாடல்கள் முற்றிலும் மறைந்து விட்டன.
இந்நூலைப் பாடியோர் ஒரு நாட்டார் அல்லர்; ஒரு காலத்தார் அல்லர்; ஒரு சமயத்தார் அல்லர்; இவர்கள் தமிழகம் முழுவதும் பரவியிருந்த பல்வேறு நிலையில் வாழ்ந்த புலவர்கள். வேந்தன் முதல் வெண்ணிக் குயத்தி ஈறாகப் பல்வேறு சமூக நிலையில் இருந்த ஆடவரும் மகளிருமான 157 புலவர் பெருமக்கள் பாடிய பாக்களைக் கொண்ட நூல் இது. முதற் சங்க காலத்தைச்
சேர்ந்த முரஞ்சியூர் முடி நாகராயர் பாடலே கடவுள் வாழ்த்துக்கு அடுத்த பாடலாக நூலின் முதல் பாடலாக அமைந்துள்ளது.
இந்நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. தொகுத்தவர் ஏதோ ஒருவகை ஒழுங்கு முறையைப் பின்பற்றி இதனைத் தொகுத்துள்ளனர் என்று எண்ணத் தோன்றுகிறது. நூலின் முதலில் மூவேந்தர் பற்றிய பாடல்களும், பின்னர், குறுநில மன்னர், வேளிர் முதலியோரைப் பற்றிய பாடல்களும், பின்னர் குறுநில மன்னர், வேளிர் முதலியோரைப் பற்றிய பாடல்களும், அடுத்தும் போர்ப் பாடல்களும், அவற்றின் பின்னே கையறு நிலை, நடுகல், மகளிர் தீப்பாய்தல் முதலிய போருடன் இயைபுடைய நிகழ்ச்சிகளும் என்னும் முறையில் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், திணை, துறை, பாடப்பட்டோர், பாடினோர், பாடிய சூழ்நிலை ஆகியன விளக்கும் குறிப்புகள் உள்ளன. இக்குறிப்பைத் தொகுப்பாசிரியர் எழுதி இருக்க வேண்டும். அவர் காவலனைக் காட்டிலும் பாவலனுக்குப் பெரும் சிறப்பளித்தார்! அரசரைப் புலவர் பாடியது என்பதை, " அவனை அவர் பாடியது" எனக் குறித்துப் புலவரைச் சிறப்பித்துள்ளார். புறநானூற்று ஏட்டுப் பிரதி ஒன்றின் தொடக்கத்தில் 'அறநிலை' என்னும் குறிப்பு இருப்பதைக் கண்ட சாமிநாதையர், இந்நூல் அறநிலை - பொருள் நிலை - இன்பநிலை என முப்பெரும் பகுதியாகப் பிரிக்கப் பட்டிருக்கும் எனக் கருதினார்.
புறநானூற்றுப் பாடலை எடுத்தாளாத உரையாசிரியரே இல்லை எனக் கூறலாம், நூல் கூறும் சில திணைதுறைக் குறிப்புகள் பொருத்தமாக இல்லை என்று உரையாசிரியர்கள் மறுத்துள்ளனர்.
இந்நூலின் முதல் 266 பாடல்களுக்கு ஓர் அரிய பழைய உரை உள்ளது. அவ்வுரை மூலம் அதற்கு முற்பட்ட பழைய உரை உண்டு என்பது தெரிகிறது. இப்போது கிடைக்கும் பழைய உரை 266 பாடல்களுக்கு மட்டுமின்றி, 400 பாடல்களுக்கும் இருந்தது என்பதைப் புறப்பாட்டுரை என்னும் சுவடிமூலம் அறிகிறோம். இப்பழைய உரையுடன் புறநானூற்றை முதன்முதலில் 1894 இல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் வெளியிட்டார். பின்பு ஔவை . துரைசாமிப்பிள்ளை நூல் முழுவதுக்கும் உரை எழுதினார்.
வேறு தொகை நூல்களுக்கு இல்லாத மற்றொரு சிறப்பு இப்புறநானூற்றுக்கு உண்டு. இக்காலத்தில் பெரிய நூல்களில் சிறந்தவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, கம்பராமாயண சாரம், தேவாரத் திரட்டு, திருவருட்பா திரு ஆயிரம் என்னும் நூல்களாகத் தருவது போல், புறப்பாடல் நானூற்றிலிருந்து மிகச் சிறந்த 55 பாடல்களை மட்டும் தனியே தேர்ந்து, அப்பாடல்களை முன் குறிப்பிட்ட பழங்காலத்திலேயே தொகுத்து அளித்துள்ளனர். இவ்வாறு சுவை மணிகளைத் தனியே தொகுத்தவர் பெயர் தெரிய வில்லை. "புறநானூறு என்னும் பாற்கடலைப் புலமை என்னும் மத்தினைக் கொண்டு கடைந்தெடுத்த அமுதத்தின் திரட்சிகளே இப்புறப் பாட்டுரைப் பாடல்களும் உரையும் எனலாம்" என்று 1976 - இல் முதல் முதலில் இப்புறப் பாட்டுரையைப் பதிப்பித்த இரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் கூறுகிறார். இப்புறப் பாட்டுரை பழைய உரையே. பழைய உரை 266 பாடல்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் இந்நூலில் 286, 300, 301, 305, 315 ஆகிய பாடல்களுக்குப் பழைய உரைகள் உள்ளன. எனவே பழைய உரை 400 பாடல்களுக்கும் இருந்தது தெளிவு. இந்நூலைப் போலவே ஒவ்வொரு தொகை நூலில் இருந்தும், நனிசிறந்த பாடல்களைத் தனியே தொகுத்து வெளியிடுதல், வேகம் நிறைந்த இக்கால எந்திர உலகுக்கு ஏற்ற தொண்டாக இருக்கும்.
தமிழகத்தின் பண்டைய வரலாறு,அரசியல் மாட்சி , சமூக அமைப்பு , பண்பாட்டு வளர்ச்சி , போர் முறை, கொடைச் சிறப்பு, கல்வி நிலை, கலைவளம் முதலியவற்றை உள்ளடக்கிய இலக்கியக் கருவூலம், இந்தப் புறநானூறு. பண்டைக் காலம் வீரமே தலை சிறந்ததாக மதிக்கப்பட்ட வீறுடைய காலம் எனக் கூறுவது புறநானூறு: இந்நூல் தரும் அறவுரைகளைக் காணும் போது , 'புறநானூறு இன்னொரு திருக்குறள் ' எனக் கூறலாம்.
'நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி'
'வழிபடுவோரை வல் அறிதியே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே'
'அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்;
ஆற்றாமை நிற்போற் றாமையே'
'நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்'
இவை அரசருக்கு வழங்கிய அறிவுரைகள். இவை இன்று ஆட்சி செய்யும் அமைச்சர்களுக்கும் அவர் கீழ் நிற்கும் அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் '
என்பதன் மூலம் வழங்கும் வள்ளலின் உயர்வும்,
'காணாது ஈந்த இப்பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லன்'
என்பதன் மூலம் வாங்கும் புலவரின் உயர்வும் வெளிப்படுகின்றன.
'எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே'
'உண்பது நாழி; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஓக்கும்மே'
யாதும் ஊரே யாவரும் கேளீர்'
'இன்னாது அம்ம இவ்வுலகம்'
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே!
'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்'
'ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.
என்பன போன்ற பொன்னேபோல் போற்று ஏற்கத்தக்க நன்மொழிக் களஞ்சியம் புறநானூறு.
மறக்குடி மங்கையரின் நாட்டுப் பற்றும், நடுங்கா உள்ளமும், பெற்ற மகளைப் பிரியநேரும் இன்னலை ஏற்கும் மன உறுதியும், போர்க்களத்தே மகன் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டக்கால் ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும் தீரமும் புறநானூறு மூலம் அறியும் கோழைப் பெண்ணும் கொற்றவையாய் மாறுவள் ; சீறுவள்.
'வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே'
இது ஒரு வீரத்தாயின் நிலை.
முதல் நாள் போரில் மறக்குடி மங்கையின் தந்தை இறந்தான். மறுநாள் போரில் தலைவன் இறந்தான்; மூன்றாம் நாள் போர்ப் பறை கேட்டது. 'ஒரு மகன் அல்லது இல்லோள் , ஆகிய அப்பெண், அச்சிறு மகனை 'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுக்கும் காட்சியைப் படிக்கும் உள்ளம் சிலிர்க்கும். 'களத்திலே மகன் புறமுதுகு காட்டியிருப்பின், அவன் பாலுண்ட என் முலையை அறுத்திடுவேன்' என முழங்கினாள், ஒரு முதியோள்.
புறநானூற்றுக் காலம் தமிழர் வாழ்வு முழுவதும் வீரமே ஆதிக்கம் செலுத்திய காலம்! பால் குடிக்கும் குழவியும் வேல் எடுத்துப் போர்க்களம் சென்ற வீரயுகம் அது!
தமிழரின் பொற்காலத்தை நம் கண்முன்னே நிற்கச் செய்யும் அற்புதம் நிகழ்த்துவது புறநானூறு! புறநானூற்றின் புகழைச் சொல்லச் சொல்ல இன்னும் சொல்லச் சொல்லும்; கேட்கக் கேட்கப் பின்னும் கேட்கச் செய்யும்.
0 கருத்துகள்