ஐந்திணை ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல் வீதம் பெற்ற ஐந்நூறு பாடல்கள் கொண்டது, ஐங்குறுநூறு. இதன் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்டவை. ஆசிரியப்பாவின் சிற்றெல்லையே மூன்றடி தான் என்பது இங்கே நினைக்கத் தக்கது; குறுந்தொகையினும் குறுகிய அடிகள் பெற்ற பாக்களைக் கொண்டது என்னும் பொருளில் ஐங்குறுநூறு என்னும் பெயரிடப் பெற்றது. நூலின் முன்னே கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று உள்ளது. இதன் 129, 130 ஆகிய பாடல்கள் மறைந்து போயின.
இத் தொகைநூலைத் தொகுப்பித்தோன் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். இவர் இரும்பொறை ஏவ, ஐந்திணை பாடவல்ல ஐவரை அணுகி, திணைக்கு நூறு பாடல்கள் 3 - 6 என்னும் அடிவரையறைக்குள் பாடுமாறும், நூறு பாடலும் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக அமைத்துக் கொள்ளுமாறும் வேண்டிப் பெற்றுத் தொகுத்தே இத்தொகை நூல். தொகுப்பாசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க மருதத்தை ஓரம் போகியாரும் நெய்தலை அம்மூவனாரும், குறிஞ்சியைக் கபிலரும், பாலையை ஓதலாந்தையாரும், முல்லையைப் பேயனாரும், பாடியுள்ளனர். நூலின் இத்திணைகள் இதே வரிசையில் அமைந்துள்ளன. ஐங்குறுநூற்றின் ஐந்திணைகளைப் பாடிய புலவரின் பெயர்களைப் பின் வரும் வெண்பா தருகிறது.
"மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்
கருதும் குறிஞ்சி கபிலன்; கருதிய
பாலை ஓதலாந்தை பனிமுல்லை பேயனே
நூலை ஓது ஐங்குறு நூறு"
கூடலூர் கிழார் அகப்பொருளைப் பாட வல்லவர். அவர் நெய்தல் , முல்லை, குறிஞ்சி ஆகிய திணைகளைப் பற்றிப் பாடிய மூன்று பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன. அதனால் அவரே ஒரு திணைக்குரிய நூறு பாடல்களை இயற்றியிருக்கலாம். ஒரு தொகுப்பாசிரியன் தன் பணியைச் செம்மையாய்ச் செய்ய வேண்டுமேயன்றித் தொகுப்புப் பொருள்களைத் தானே இயற்றும் சபலம் அவனுக்கு வரக்கூடாது. வந்தால் தொகுப்பின் சிறப்பைக் குலைக்கும் என்பதை உணர்ந்து கூடலூர் கிழார் தாம் பாடி மகிழாமல் பிறர் பாடியவற்றைத் தொகுத்துத் தொண்டாற்றினார்
நூறு பாடல்களின் பகுதிகளான பத்துகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக கட்டுக்கோப்புப் பெற்றது. இவை பொருளமைப்பினால் அல்லது பத்துப் பாவிலும் பயின்று வரும் சொல்லாட்சியினால் தனித் தனிப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப் பத்து, வேழப்பத்து முதலியன சொல்லாட்சியால் பெயர் பெற்றவை, கிழத்தி கூற்றுப்பத்து, செவிலி கூற்றுப் பத்து, தோழி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பால் பெயர் பெற்றன. 'தொண்டிப்பத்து' அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உள்ளது, இப்பழைய உரையுடன் ஐங்குறு நூற்றை முதன் முதலில் 1903-இல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் வெளியிட்டார். பின்னாளில் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை மிக விரிவாக உரை வழங்கியுள்ளார்.
ஐங்குறுநூற்றின் தலைவி தன்னலம் கருதாத தகைமையள். தன் துயர் நீங்க வேண்டும். தன் வீடு ஓங்க வேண்டும் என்று நினையாதவள். அவள் நாடு முழுவதும் வாழ வேண்டும்; உலக மக்கள் உவகை பெற வேண்டும் என்னும் பரந்த நோக்கம் பெற்றவள்; தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வந்து " நான் பிரிந்து சென்ற போது நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று தோழியை வினவினான். தோழி அதற்கு விடை தந்தாள்.
"வாழி ஆதன் வாழி அவினி
பால் பல ஊறுகு! பகடு பல சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன்மனை
வாழ்க்கை பொலிக! என வேட்டேமே".
தோழி 'தலைவன்-தலைவியின் வாழ்க்கை சிறக்க வேண்டும்;' என்று வேண்டினாள்; ஆனால் தலைவியோ "பால் ஊறுக! பகடு சிறக்க; அதனால் செல்வம் வளர்க; செழிப்பு தழைக்க" என்று வேண்டினாளாம்.
தலைவியின் வேண்டுதல் தொடருகிறது:
"நெல்பல பொலிக பொன் பெரிது சிறக்க
விளைக வயலே! வருக இரவலர்
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக
பசி இல்லா குக! பிணி சேண் நீங்குக
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக
அறம் நனி சிறக்க அல்லது கெடுக
அரசுமுறை செய்க களவு இல்லாகுக
நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க"
தலைவியின் தூய உள்ளம், சுயநலமற்ற உள்ளம், எத்துணை விரிந்து பரந்தது! 'பிரிவு தரும் துன்பம் நீங்கத் தலைவன் வருக' வளம் பெருகுக' என்று வேண்டுகிறாள். 'தமக்கு என முயலா நோன்தாள். பிறர்க்கு என முயலுநர்' என்று இளம் பெருவழுதி கூறும் சான்றோர் பட்டியலில் தலைமையிடம் பெறுகிறாள், அந்த ஐங்குறுநூற்றுத் தலைவி.
இத்தலைவியை வேட்கைப்பத்தில் பாடிச் சிறப்பித்தவர் ஓரம்போகியார். ஐங்குறுநூற்றின் தொடக்கத்தில் இவ்வேட்கைப் பத்து அமைந்திருப்பது, நூல் முழுவதையும் கற்று மகிழும் வேட்கையை எழச் செய்கிறது.
எட்டுத்தொகை நூல்களில் அடிகள் குறைந்த பாடல்களைக் கொண்டது, ஐங்குறுநூறு. கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை. ஐங்குறுநூற்றுப் பாடலின் உருவம் சிறுத்தாலும் உயர்வு குறைவதில்லை.

0 கருத்துகள்